Followers

Saturday 14 January 2012

ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும்: பாஜகவுக்கு கோரிக்கை

சென்னையில் நேற்று ( 14.1.2012) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் மூத்த
தலைவரும் , முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி , குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி , தமிழக பா.ஜ. , தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் , முன்னாள்
தலைவர் இல.கணேசன் , இந்து முன்னணி ராம.கோபாலன் , உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பேசும்போது
`` வணக்கம் , அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் '' என்று தமிழில்
பேசி தன் பேச்சை ஆங்கிலத்தில் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது ;-
தமிழ்நாட்டிற்கும் , குஜராத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நீண்ட
காலமாகஇரு மாநிலங்களுக்கு நல்லுறவு இருந்து வருகிறது. தமிழர்களுக்கு
காப்பி என்றால் மிகவும் பிடிக்கும். அந்த காப்பிக்கு தேவைப்படும்
சிக்கிரி குஜராத்தில் அதிகம் விளைகிறது. அதேபோல் , தமிழ் பெண்களுக்கு
பருத்தி சேலை மிகவும் பிடிக்கும்.
இந்தியாவில் அதிக பருத்தி சேலைகள் தயாரிக்கப்படுவது குஜராத்
மாநிலத்தில்தான். தமிழர்கள் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் கடலை
எண்ணெய் உற்பத்தியில் குஜராத் முன்னணியில் உள்ளது. குஜராத்தை பூர்வீகமாக
கொண்ட சவுராஷ்டிரர்கள் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து
மண்ணின் மைந்தர்களாகவே மாறிவிட்டார்கள்.
இதேபோல் குஜராத்திலும் எனது மணிநகர் தொகுதியில் மட்டும் 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். இரு தரப்பினரும்
தத்தம் மாநில பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
குஜராத் , தமிழ்நாடு இரு மாநிலங்களும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணம்
செய்கின்றன.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு , காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத
மாநிலங்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது. அந்த
வகையில் தமிழகமும் , குஜராத்தும் தொடர்ந்து மத்திய அரசால்
புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு
பறிக்கிறது.
இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும். காங்கிரஸ் அரசு
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கிறதே தவிர ,
நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியிலோ , முன்னேற்றத்திலோஅக்கறை
செலுத்தவில்லை. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்திவிட்டு
மக்களிடையே மத , இன , பிராந்திய ரீதியாக வேற்றுமை உணர்வை ஏற்படுத்தி
வருகிறது.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
முன்னதாக , துக்ளக் ஆசிரியர் சோ , துக்ளக் அலுவலக நிர்வாகிகளை மேடையில்
ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திவைத்தார். பின்னர் துக்ளக் வாசகர்கள்
எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துப்பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் இலவச திட்டங்களை ஜெயலலிதா
அறிவித்திருக்காவிட்டால் தி.மு.க.தான் தொடர்ந்து ஆட்சியில்
இருந்திருக்கும். அரசியல் உத்திக்காகத்தான் ஜெயலலிதா இலவசங்களை அறிவிக்க
வேண்டியது இருந்தது. ஆனால் , பதவியேற்றதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்
அறிவித்த இலவச திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
அவரை போல் தினமும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று உழைக்கக்கூடிய ஒரு
முதல்-அமைச்சரை இதுவரை பார்த்து இல்லை. தவறு என்று தெரிந்துவிட்டால்
அவரைப் போல தைரியமாக யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது.
குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ந்தது போல தமிழகத்திலும்
வளர்ச்சியை ஏற்படுத்த ஜெயலலிதா ஆசைப்படுகிறார். அதற்கு அவர் தொடர்ந்து 10
ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும். தேசப்பக்தி , கடின உழைப்பு ,
பலமொழிகள் பேசும்திறன் , எதையும் எளிதாக கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்
உள்பட பல்வேறு திறமைகள் அவரிடம் காணப்படுகின்றன.
மத்தியில் அடுத்து அமைய உள்ள புதிய ஆட்சியை உருவாக்கும் பணியில்
அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் பங்கு இருக்கும். மத்தியில் பா.ஜ.க. அல்லாமல்
அது ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வருவதாக இருந்தால் ஜெயலலிதா பிரதமராக வர
வேண்டும்.
இவ்வாறு சோ கூறினார்.
விழாவில் , பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் , மாநில தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் , முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் , துணை
பொதுச்செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்
எஸ்.குருமூர்த்தி , சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் , நடிகர் ரஜினிகாந்த்
, முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் , வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்
ஜி.விஸ்வநாதன் , முன்னாள் எம்.பி.இரா.செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tuesday 10 January 2012

நதிகள் இணைப்புத் திட்டம் என்னவாயிற்று?-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

நதிகளை இணைக்கும் திட்டம் என்னவாயிற்று. அதுதொடர்பாக மத்திய அரசு
எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன , இத்திட்டம் குறித்த தற்போதைய நிலை என்ன
என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்த போது , 2002- ம்
ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. இந்த வறட்சியை
போக்கவும் , வெள்ளம் ஏற்படும் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் தடுக்கும்
வகையிலும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நதிகள் இணைப்பு திட்டத்தை
அறிவித்தார்.
அதுதொடர்பாக அறிக்கை அளிக்க அதிகாரிகள் குழுவையும் வாஜ்பாய் அமைத்தார்.
அந்தக் குழு தென்னிந்திய நதிகள் இணைப்பு , வட இந்தியாவில் இமயமலைநதிகள்
இணைப்பு என்ற 2 வகையான நதிகள் இணைப்பு திட்டத்தை அறிக்கையாக அளித்தது.
தென்னகத்தில் ஓடும் 16 நதிகளை இணைத்து நதி நீர் பங்கீடு அமைப்பு அதாவது
மின்சார கிரிட் போல வாட்டர் கிரிட் ஏற்படுத்த வேண்டும். வட மாநிலத்தில்
ஓடும்மகாநதி மற்றும் கோதாவரி நதி நீரை திருப்பி பெண்ணாறு , கிருஷ்ணா ,
வைகை , காவிரி ஆற்றில்சேர்ப்பதும் இந்த திட்டத்தில் அடங்கும்.
இதேபோல கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து மேற்கில்வீணாகப்
பாயும் நதிகளின் தண்ணீரை கிழக்கு பகுதிக்கு திருப்பி சிறிய நதிகளுடன்
சேர்க்க வேண்டும் என்றும் அந்தக் குழு தனது அறிக்கையில் தெரிவித்து
இருந்தது.
இமயமலை நதிகளான கங்கை , பிரம்மபுத்திரா ஆறுகளை இணைத்து , அணைகள் கட்டி
நீர்ப்பாசனத்துக்கும் , மின்சாரஉற்பத்திக்கும் பயன்படுத்துவது 2- வது
திட்டமாகும்.
இந்த திட்டங்கள் பின்னர் வந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தூக்கி தூர வீசப்பட்டு விட்டன.
ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டே மத்திய அரசு இத்திட்டத்தைக்
கைவிட்டது. இத்திட்டங்கள் குறித்து ராகுல் காந்தி கூறுகையில் , இந்த
திட்டம் சாத்தியப்டாது , ஒத்துவராது என்று எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல
கூறினார்.
நதிகள் இணைப்பு திட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் , பல லட்சம் கோடி ரூபாய்
செலவாகும் என்பதால் கிடப்பில் போடப்பட்டதாக மத்திய அரசுத் தரப்பில்
பேசப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை
நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்
விசாரணைக்கு வந்தது.
அப்போது , நதிகள் இணைப்பு திட்டம் எந்த நிலையில் உள்ளது. எந்த அளவுக்கு
வேலைகள் நடந்து உள்ளன , இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்று ஒரு
வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி , இந்த வழக்கில் சுப்ரீம்
கோர்ட்டுக்கு உதவியாகபணியாற்றும் வழக்கறிஞர் ரஞ்சித் குமாருக்கு
நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

Monday 9 January 2012

திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ்கூட்டணி உடையுமா?

மேற்குவங்கத்தில் ஆட்சி செய்துவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ,
மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கூட்டணியி்ல்
பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
மேற்குவங்காளத்தில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை நீக்கிவிட்டு , ஆட்சியை
பிடித்தவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பெனர்ஜி.அதற்காக
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றிப் பெற்றார். இந்த நிலையில்
தற்போது 2 கட்சிகள் இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட தொடங்கியுள்ளது.
இதன் முன்னோடியாக மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதா , சில்லரை
வர்த்தகத்தில் அன்னிய முதலீடு , பெட்ரோல் விலையேற்றம் உட்பட பலவற்றில்
மமதாவுக்கு மாற்று கருத்து தெரிவித்து வருகிறார்.
மேலும் மேற்குவங்காளத்தில் உள்ள இந்திராபவனின் பெயரை மாற்ற மாநில அரசு
தீர்மானித்துள்ளதால் , காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் மீதான அதிருப்தியை தெரிவிக்கும் வகையி்ல் ,
இன்று திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி தரப்பில் கண்டன பேரணி நடத்தி
உள்ளனர். இதற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்
சிலர் கலந்து கொள்ள உள்ள மமதா அனுப்பி வைத்துள்ளார்.
முன்னதாக மமதா பெனர்ஜி பேட்டி ஒன்றில் கூறியதாவது ,
இடதுசாரிகளுடன் இணைந்து செயலாற்ற விரும்பினால் காங்கிரஸ் பிரிந்து
செல்லலாம். நாங்கள் தனியாக கூட செயல்படுவோம் , என்றார்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட மம்தா பானர்ஜி
விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகவே காங்கிரஸை கழற்றிவிடும்
திட்டத்துடன் மத்திய அரசை எதிர்த்து வருகிறார் என்கிறார்கள்.

கனிமொழி தூதுவரிடம் அழகிரி போனில் பாடிய ஆவேச கீதம்!



தி.மு.க.வுக்குள் தற்போது இருப்பது புயலுக்கு முந்திய அமைதி என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். புயல் டில்லியில் மையம் கொண்டுள்ளது. அது எந்த நேரமும் தெற்கு நோக்கி நகர்ந்து வந்து, சென்னையில் கோபாலபுரத்தைத் தாக்கலாம். அப்போது 'சோ' வென கண்ணீர் மழை பொழியும்.

டில்லியில் மையம் கொண்டுள்ள புயல் கனிமொழி!

கனிமொழியின் சமீபத்திய சென்னை விஜயங்கள் அவரிடம் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவருடன் பேசியவர்கள் சொல்கிறார்கள். அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையில் கொண்டாடப்பட்ட போது, டில்லியில் இருந்து கிரீன் சிக்னல் கொடுத்ததே அவர்தான் என்றும் சொல்கிறார்கள்.

கட்சி ரீதியான பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பது 1970-களில் இருந்தே தி.மு.க.-வில் அதிகாரத்தை கன்பர்ம் செய்யும் ஒரு சடங்கு. அண்ணாவுக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கருணாநிதிக்கும் எக்ஸ்டென்ட் பண்ணப்பட்டது. அதன்பின் ஸ்டாலினுக்கும் நீடிக்கப்பட்டது. விடுவாரா அஞ்சா நெஞ்சர்? அவரது ஆட்கள் மதுரையை தடல்புடல் படுத்தினார்கள்.

இப்போது கனிமொழி பிறந்த நாளுக்கு, பெரிய அளவில் கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் செய்யப்பட்டபோது, கனிமொழிக்கு தகவல் சொல்லப்பட்டது. அவருக்கு அதில் லேசான தயக்கம் இருந்தது. ஆனால், ராசாத்தி அம்மாளுக்கு ஆட்சேபணை ஏதும் இருக்கவில்லை. அதன்பின் கனிமொழியும் சம்மதிக்கவே ஏற்பாடுகள முழு வேகத்தில் நடந்தன. ராசாத்தி அம்மாள் நேரில் கலந்துகொண்டு மைக் பிடித்து பேசுவது என்ற யோசனை வந்தபோது, அதற்கு கனிமொழியின் கிரீன் சிக்னல் கிடைத்தது!

கோபாலபுரத்தில் இதையெல்லாம் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தடுக்க முடியாதபடி அவர்களது விஷயம் ஒன்று, வசமாக இவர்களிடம் மாட்டிக் கொண்டிருந்தது! அதைத்தான் ராசாத்தி அம்மாள் பிறந்தநாள் விழாவில் தனது பேச்சில் குறிப்பிட்டார். (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)

இப்போது, இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியில் கனிமொழியின் முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு கோபாலபுரத்துக்கு 'நல்லபடியாக' முடியும்வரை ராசாத்தி அம்மாள்-கனிமொழி செய்யும் எந்தக் காரியத்தையும் அவர்கள் தடுக்கப் போவதில்லை என்பது இவர்களுக்கு நன்றாகவே புரிந்து விட்டது.

அதையடுத்து தற்போது சி.ஐ.டி. காலனியில் இருந்து அழுத்தம்மேல் அழுத்தமாக வரத் தொடங்கி விட்டது என்கிறார்கள் உள்வீட்டு விஷயம் அறிந்தவர்கள்.

ஸ்டாலினுக்கு கட்சியின் நெம்பர்-2 இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அழகிரி கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ளார். குறைந்தபட்சம் அழகிரியின் அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிறது சி.ஐ.டி. காலனி பிரஷர்.

ஏற்கனவே எம்.பி.-யாக உள்ள கனிமொழிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுங்கள். கட்சி மட்டத்தில் ஓய்வெடுக்கும் வயதில் உள்ள யாராவது ஒரு தலையை அகற்றிவிட்டு, அந்தப் பதவியை கனிமொழிக்கு கொடுங்கள் என்ற தடாலடி கோரிக்கை வந்து விழுந்திருக்கிறது என்கிறார் கட்சியின் சீனியர் எம்.பி. ஒருவர். இந்த விவகாரத்தில், ஸ்டாலினை விட, அழகிரிதான் அதிகம் அதிர்ந்து போயிருக்கிறார் என்றும் கூறுகிறார் அவர்.

சமீபத்தின் தம்மை போனில் தொடர்புகொண்ட தி.மு.க. எம்.பி. ஒருவரிடம் "ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, ஜாமீனில் வெளியே வந்துள்ள கனிமொழிக்கு அமைச்சரவையில் இடம் கேட்பது எமக்கே அவமானமான விஷயமல்லவா? கேட்டாலும் அவர்கள் (காங்கிரஸ் மேலிடம்) கொடுக்கப் போவதில்லை. அதன்பின் நாம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு டில்லியில் அரசியல் செய்வது? சென்னையில் இருப்பவர்கள் சென்னையிலேயே இருந்து விடுவார்கள். டில்லியில் இருக்க வேண்டியவர்கள் நாமல்லவா?" என்று ஆவேசப் பட்டிருக்கிறார்.

"சரி. அமைச்சர் பதவி கேட்கிறோம். அவர்கள் தரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன? மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்குங்கள் என்று அவர்கள் (கனிமொழி-ராசாத்தி அம்மாள்) பிரஷர் கொடுப்பார்கள். ஆதரவை வாபஸ் வாங்கினால், அமைச்சரவையில் நாங்கள் இல்லை. ஒருவேளை ஆட்சியே கவிழ்ந்தால், மீண்டும் எம்.பி.யாக நீங்களும் வரமுடியாது, நானும் வரமுடியாது. ஊரில் இருந்து விவசாயம் செய்ய வேண்டியதுதான்" என்றும் பொரிந்தாராம் அவர்.

போனில் தொடர்பு கொண்ட எம்.பி. "ஆமால்ல.. நீங்க சொல்றது சரிதான்" என்று கம்மென்று போனை வைத்துவிட்டார்.

இதை எமக்கு கூறிய தி.மு.க. எம்.பி., "இந்த உரையாடலில் அழகிரிக்கு தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது தெரியுமா?" என்று கேட்டு கண்ணடித்தார்!

"என்னங்க அது?"

"அழகிரியை தொடர்பு கொண்ட எம்.பி.யே கனிமொழி தரப்பின் தூதுவராக அழகிரியுடன் பேச உத்தரவிடப்பட்ட ஆள்தான் என்பது அழகிரிக்கு தெரியாது. கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று அழகிரியை கன்வின்ஸ் பண்ணி, அவரது ஆதரவை பெறுவதற்காக இந்த எம்.பி.யை அழகிரியுடன் பேசுமாறு சொல்லி போன் பண்ண வைத்திருந்தார்கள். பாவம் அந்தாளு.. போனை எடுத்ததுமே அழகிரி பொரிந்து தள்ளிவிட்டார். இவர் "ஆமாங்க.. ரொம்ப சரிங்க.."  என்பதற்குமேல் எதுவும் பேச முடியாமல் போனை வைத்துவிட்டார்"

"அப்படியானால் இந்த எம்.பி.க்கு சி.ஐ.டி. காலனியில் செம டோஸ் விழுந்திருக்க வேண்டுமே" என்று நாம் கேட்டதற்கு, எம்முடன் பேசிய தி.மு.க. எம்.பி. பதில் சொல்லவில்லை.

அட, இதுதாங்க கட்சிக் கட்டுப்பாடு!