Followers

Friday 2 March 2012

ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ஒன்றாக கருத முடியாது

 
 
 
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் தான் சொல்லும் வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்ய வேண்டும், வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சசிகலா தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
 
முதல்வர் ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ஒன்றாகக் கருத முடியாது. ஜெயலலிதாவுக்குத் தரும் சலுகைகளை சசிகலாவும் கோர முடியாது என்றும் நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்தனர்.
 
பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் முதல்வர் ஜெயலலிதா நான்கு நாட்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து முடித்து விட்டார். தற்போது சசிகலா வாக்கு்மூ்லம் அளித்து வருகிறார். தினசரி சராசரியாக 50 கேள்விகள் வரை மட்டுமே அவர் பதிலளித்து வருகிறார்.
 
இந்த நிலையில், சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் விசாரணையை ஆங்கிலத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதை தமிழில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
 
இந்த மனு நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் சசிகலாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் சசிகலாவின் கோரிக்கைளும் நிராகரிக்கப்பட்டன. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தபோது முதல்வர் ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ஒன்றாக கருத முடியாது. ஜெயலலிதாவுக்குஅளிக்கும் சலுகைகளை சசிகலாவும் கோர முடியாது என்று தெரிவித்தனர்.
 
7வது நாளாக விசாரணை
 
இதற்கிடையே, சசிகலாவிடம் பெங்களூர் கோர்ட்டில் இன்று 7வது நாளாக விசாரணை தொடர்ந்து வருகிறது. இன்னும் அவரிடம் 1000 கேள்விகள் வரை கேட்க வேண்டியுள்ளதாம். தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 50 கேள்விகள் வரைதான் சசிகலா பதிலளித்து வருகிறார். இதனால் மேலும் பல நாட்களுக்கு சசிகலாவிடம் வாக்குமூலம் பெற வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.



Thursday 1 March 2012

பெங்களூரில் "போயஸ் டீம்" கஸ்டடியில் சசி!

 
 
 
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறதோ தெரியாது, ஆனால், இந்த விஷயத்தில் போயஸ் கார்டன் எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பெரும் யூகங்களைக் கிளப்பி வருகின்றன.
 
ஜெயலலிதாவுக்கு "எதுவுமே" தெரியாமல் அவர் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததில் சசிகலா அண்ட் கோவுக்குத்தான் முழுப் பங்கு இருக்கிறது என்று எல்லோரும் நம்ப வேண்டும் என்பது தான் போயஸ் கார்டனின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.
 
பெங்களூர் நீதிமன்றத்தில் ஆற அமர இழுத்தடித்து, சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் பி.பியை எகிற வைத்து சசிகலா அளித்து வரும் "பதில்கள்" போய்க்கொண்டிருக்கும் பாதை மேற்சொன்ன திசையை நோக்கித்தான்...
 
ராவணன் தொடங்கி எம்.நடராஜன் வரை சசி அண்ட் கோ பிரதிநிதிகள் சிறையில்! சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில்!
 
பெங்களூர் நீதிமன்றத்துக்கு வந்து போகும் சசி, இளவரசி, சுதகாரன் தவிர வேறு சில கதாபாத்திரங்களும் உண்டு. போயஸ் கார்டனின் திட்டத்தை அரங்கேற்றி வருபவர்கள் இவர்கள்தான்!
 
அதாவது சசிகலாவின் குடும்பத்துக்கு போலீஸ் கஸ்டடி, ஜூடிசியல் கஸ்டடி என்றால் சசிகலாவுக்கு போயஸ் கார்டன் கஸ்டடி!.
 
சசிகலாவின் பாதுகாவலர்கள் என்பவர்கள் அனைவருமே கார்டன் கட்டளைப்படி நியமிக்கப்பட்டவர்கள்.
 
அவர் அளிக்கின்ற பதில்களை பக்கத்தில் அமர்ந்து கொண்டே சொல்லித் தருவதும் திருத்துவதும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார்தான்!. இன்னொரு கார்டன் பிரதிநிதி ரங்கராஜ்.
 
யார் இந்த ரங்கராஜ்?:
 
ஜெயலலிதாவின் 1991ம் ஆண்டு ஆட்சிக்காலத்து தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் (நிலக்கரி ஊழல் புகார் எழுந்தபோது இவரை 'கரி'பாஸ்கள் என்று பத்திரிக்கைகள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது). இவரது உதவியாளராக இருந்தவர்தான் இந்த ரங்கராஜ். போயஸ் கார்டனின் நம்பிக்கைப் பிரதிநிதி. இவர்தான் பெங்களூரில் சசிகலா நீதிமன்றம் வரும்போது அவரது உதவியாளர் என்ற பொறுப்பு வகிப்பவர்.
 
விசாரணையின் போது இந்த ரங்கராஜனும் சில போயஸ் தோட்டத்து வழக்கறிஞர்களும் சசிகலாவின் அருகிலேயே போய் சில விஷயங்களை சொல்லப்போய் நீதிபதி மல்லிகார்ஜுனையா இது என்ன கான்பரென்ஸா? என 'சூடானதும்' நடந்தது.
 
இவர்கள் கஸ்டடியை மீறி சசிகலா தன் போக்கில் ஏதாவது சொல்லிவிட்டால் மன்னார்குடி கேங்கில் இன்னொரு நபருக்கு போலீஸ் கஸ்டடி ரெடியாகிவிடும்!
 
நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரிகள்:
 
இவர்கள் போக பத்திரிக்கையாளர்களுக்கான பகுதியில் வந்து உட்கார்ந்து சசிகலா வாக்குமூலம் கொடுக்கத் தொடங்கியவுடன் செல்போனை ஆன் செய்துவிடுகிறவர் ஐ.ஜி. குணசீலன்!
 
இதேபோல் ஏற்கெனவே ஜெயலலிதா அளித்த 313 வாக்குமூலத்தை கையில் வைத்துக் கொண்டு சசிகலாவின் பதில்களோடு ஒப்பிட்டுப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு உளவுப் பிரிவு அதிகாரி!
 
சர்ச்சைக்குரிய சென்னை லஸ் சர்ச் சாலை நிலம், ஊத்துக்காடு அருகே வெலக்காயம் கிராமத்து நிலம், பையனூர் பங்களா விவகாரம் போன்றவற்றிலும் ஜெயலலிதாவுக்கு எந்த ஒரு சம்பந்தமே இல்லை போயஸ் கார்டன் எதிர்பார்த்தபடியான பதிலை சொல்லிவிட்டார் சசி.
 
இதேபோல் பல கேள்விகளுக்கும் "ஜெயலலிதாவுக்கோ- போயஸ்தோட்டத்துக்கோ" எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்ற பதிலே சசியின் வாயிலிருந்து வருகிறது.
 
இதைத்தானே போயஸ் கார்டன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
 
பெங்களூர் வழக்கில் சசிகலா அளிக்கப் போகும் வாக்குமூலம் இன்னும் சில காலம் நீடிக்கக் கூடும்.
 
அதுவரை போலீஸ் கஸ்டடி, ஜூடிசியல் கஸ்டடியில் என ராவணன், திவாகரன், நடராஜன் ஆகியோர் அடைபட்டிருக்கத்தான் வேண்டும்! பெங்களூரில் சசிகலாவும் "போயஸ் கார்டன் கஸ்டடியில்" தான் இருந்தாக வேண்டும்!



பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவும் வருண் காந்தி?

 
 
 
காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து பாஜகவுக்கு சென்ற வருண் காந்தி மீண்டும் காங்கிரஸுக்கே வரும் வாய்ப்பு இல்லை என்று அக்கட்சி தெரிவி்ததுள்ளது.
 
மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு சென்றார். தற்போது அவர் அந்த கட்சியில் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர் மீண்டும் காங்கிரஸுக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
கற்பனைக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஒருவர் கோபமாக இருக்கிறாரா இல்லையா என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது பாஜக உட்கட்சி விவகாரம். இது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. யாரை பிரச்சாரத்திற்கு அனுப்புவது என்பதை அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
 
கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது பாஜகவின் சார்பில் பிரச்சாரம் செய்த முக்கியமானவர்களில் ஒருவராக வருண் காந்தி இருந்தார். ஆனால் தற்போது உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் அவரை கண்டுகொள்ள ஆளி்ல்லை. அவரது தொகுதியான பிலிபிட்டில் மட்டுமே பிரச்சாரம் செய்யுமாறு பாஜக கூறியது. இதனால் வருண் காந்திக்கு ஏக வருத்தம் என்று கூறப்படுகின்றது.



Wednesday 29 February 2012

ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கையை ஆதரிக்க கூடாது - கருணாநிதி வலியுறுத்தல்!

 


இலங்கை மீது போர் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக்கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்திடும் தீர்மானம் ஒன்றை கடந்த திங்கள் கிழமை தொடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளன.

இந்த தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா வாக்களிக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக, இலங்கை போர் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், போர் என்றால் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது சகஜம் தான் என்று இதயமற்றோர் பாணியில் விமர்சனம் செய்யாமல், இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதோடு, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கருணாநிதி ஆதரவு

 
 
 
கூடங்குளம் அணுமின்நிலைம் செயல்பட தொடங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இப்பிரச்சினையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கருணாநிதி முதல்முறையாக ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.
 
மேலும் கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
பல வருடங்களாக செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ள கருணாநிதி, கூடங்குளம் அணுமின்நிலைம் செயல்படத் தொடங்கினால் தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



சரத் பவாரை தாக்கியவருக்கு தொடர்ந்து அடி, உதை

 
 
 
கடந்த 2011, நவம்பர் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சரத் பவாரை, ஹர்விந்தர் சிங் என்பவர் கூட்டத்தில் பாய்ந்து தாக்கினார். அதன் தொடர்ச்சியாக ஹர்விந்தர் சிங் தொடர்ந்து மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு வருகிறார்.
 
பிப்.15 அன்று தன்னை முதலாவதாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹர்விந்தர் அளித்த புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
இரண்டாவதாக பிப்.18 அன்று ரவுடிகள் அவரை வீடுபுகுந்து தாக்கியுள்ளனர். மீண்டும் பிப்.25 அன்று அவரை காரில் கடத்திசென்று துப்பாக்கி முனையில் அடித்து, உதைத்து மருத்துவமனை முன்பாக தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
 
ஆனால் தன்மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து ஹர்விந்தர் அளித்த புகாரை ஏற்று விசாரிக்க காவல்துறை தயாராக இல்லை. இறுதியாக இவ்விஷயம் பத்திரிகைகளில் வந்தபின்னர் தான், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தன்மீதான தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பதாக ஹர்விந்தர் கூறியுள்ளார்



Tuesday 28 February 2012

அ.தி.மு.க.,வில் இணையும் பாக்யராஜ்



ஆட்சி மாறினால் காட்சியும் மாறத்தான் செய்யும். இது எல்லா தரப்பினருக்கும் பொருந்தும். கடந்த ஆட்சி இருந்த வரைக்கும் தி.மு.க.,வில் இருந்த பலர் இப்‌போது அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பக்கம் ‌சாயத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் விரைவில் அ.தி.மு.க.,வில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அளவில் சிறந்த திரைக்கதை வல்லுனர், இயக்குநர் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ். இவர் இயக்கி நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர்-டூப்பர் ஹிட்டானவை. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த வரைக்கும் அவருக்கு நெருக்கமானவராக இருந்தார். பின்னர் அவர் மீதுள்ள பற்றால் எம்.ஜி.ஆர்., மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கினார். பின்னர் ஏனோ தெரியவில்லை, கட்சியை பாதியிலேயே கலைத்தார். பின்னர் தி.மு.க.வில் சேர்ந்த பாக்யராஜ் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க.வுக்கு ஆதவராக அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார்.

அரசியலில் குதிக்க இருக்கும் வடிவேலு

 


நான் அரசியலுக்கு வந்தே தீருவேன்; என்னை யாராலும் தடுக்க முடியாது, என்று வைகைப்புயல் வடிவேலு கூறியிருக்கிறார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேலு பங்கேற்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள வடிவேலு, என் தாய் சரோஜினி உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார். அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லை, என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பேட்டியில், வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான். தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்நதிக்கும்போது மக்களை சந்திப்பேன். நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன். தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம். நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள். விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்று கூறியிருக்கிறார், வடிவேலு.

Monday 27 February 2012

பாக்யராஜ் அ.தி.மு.க.வில் சேருகிறார்

 
 
தமிழ் திரையுலகில் 1970, 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் பாக்யராஜ். ஏராளமான படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்தார். 1989-ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் குதித்தார். பின்னர் அக்கட்சியை கலைத்தார். 2006 ஏப்ரல் 5-ந் தேதி தி.மு.க.வில் இணைந்தார்.
 
தற்போது அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். சமீப காலமாக பாக்யராஜுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அ.தி.மு.க.வில் சேர அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 24-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பாக்யராஜ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள். அ.தி.மு.க.வில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் அவ்விழா நடைபெறவில்லை. விரைவில் பாக்யராஜும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் சேர உள்ளனர். இது குறித்து பாக்யராஜ் குடும்பத்தினரிடம் கேட்ட போது அ.தி.மு.க.வில் இணைவதை மறுக்கவும் இல்லை. உறுதிபடுத்தவும் இல்லை.
 
பாக்யராஜ் புதுவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளதாக தெரிவித்தனர். அ.தி.மு.க.வில் இணைய பாக்யராஜ் விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க. தலைமைக்கு தகவல் அனுப்பி விட்டதாகவும் ஜெயலலிதா அழைப்புக்காக காத்து இருப்பதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.