Followers

Saturday, 17 December 2011

விஜயகாந்த் எப்படிச் சொல்லலாம்- பாஜக பாய்ச்சல்

 
 
 
 
 
 
தமிழகத்திலிருந்து யாரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் போகக் கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பது தவறு. சபரிமலைக் கோவிலில் நமக்குள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில்,
 
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் போராட்டம் நடத்துவதற்கு தேனி சென்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்கு சென்று சபரிமலையில் தான் ஐயப்பனை தரிசிக்க வேண்டுமா? தமிழ்நாட்டில் சுவாமி ஐயப்பன் கோவில்கள் கட்டி இங்கேயே தரிசனம் நடத்தலாம். அங்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்பது போல் பேசியுள்ளார்.
 
விஜயகாந்த்தின் இந்தப் பேச்சு, கேரளத்தில் ஐயப்ப பக்தர்களை தாக்குவோர்க்கு சாதகமாகவும் தலைமுறை தலைமுறையாக சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்ற ஐயப்ப பக்தர்களின் உரிமைகளை பறிப்பதாகவும் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
 
விஜயகாந்தின் இந்தப் பேச்சு சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் உரிமை இனி தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு இல்லை என்பது போலவும் அமைந்துள்ளது.
 
எத்தனை பிரச்னைகள் எப்படி நடந்தாலும் கேரள மக்களையும் தமிழக மக்களையும் மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்று எந்த சக்திகள் முயன்றாலும் அவற்றை எல்லாம் முறியடித்து தேச ஒருமையை காக்கக் கூடிய ஒன்றாக தமிழக ஐயப்ப பக்தர்களுடைய சபரிமலை பயணமும் கேரள முருக பக்தர்களின் பழனி பயணமும் தொடர்ந்து நடந்தே தீரும். அதை தடுக்க யார் முயன்றாலும் பாரதிய ஜனதா கட்சி தமிழக மக்களின் முழு ஒத்துழைப்போடு அதனை முறியடித்தே தீரும்.
 
சபரிமலையில் தமிழர்களுக்கு இருக்கும் வழிபடும் உரிமையை விட்டுக் கொடுக்கும் வகையில் பேசியுள்ள விஜயகாந்த், தமிழக மக்களிடமும் குறிப்பாக ஐயப்ப பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.



Thursday, 15 December 2011

எந்த அரசியல் மாற்றத்தையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர் ரஜினி - கலைப்புலி தாணு

 
 
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழக அரசியலுக்கு எப்போது வந்தாலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர், என்றார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
 
நேற்று நடந்த ரஜினி பிறந்த நாள் விழாவில் கலைப்புலி தாணு பேசுகையில், "நான்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை சூட்டியதாக அடிக்கடி சொல்வார் ரஜினி. உண்மையில் மக்கள்தான் இந்தப் படத்தை அவருக்கு சூட்டினர். எந்த உயரத்துக்குப் போனாலும் தன்னை மறக்காதவர் ரஜினி.
 
மூப்பனாருக்காக ஒரு தனி கட்சியையே உருவாக்கி, முதல் தேர்தலிலேலே 39 எம்எல்ஏக்களையும் பெற்றுக் கொடுத்தவர் ரஜினி. அவரது ஒரே ஒரு வார்த்தை 1996-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை மாற்றியது.
 
இன்றைக்கும், எத்தகைய அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய வல்லமை ரஜினி ஒருவருக்கு மட்டுமே உண்டு," என்றார்.
 
'அண்ணன் ரஜினி விட்ட கேப்பில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்'
 
நடிகர் கருணாஸ் கூறுகையில், "ரஜினி எதற்காக தயங்குகிறார் என்று புரியவில்லை. 1996-ல் நடந்த அரசியல் மாற்றத்துக்கு முழு காரணம் ரஜினிதான்.
 
இன்றைக்கு இரண்டு படம் நடித்தவனெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கிறானுங்க... நேத்து கட்சி ஆரம்பிச்சவங்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவராம்.
 
இன்னும் சில நடிகர்கள் அரசியலில் குதிக்கப் போவதாக சொல்லிக்கிட்டிருக்காங்க.
 
ஓப்பனா சொல்றேன்... எங்கள் அண்ணன் ரஜினி விட்ட கேப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர்தான் விஜய்காந்த். ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் இவர்கள் எல்லாம் காணாமல் போயிருப்பார்கள்.
 
தலைவா, நீ எதுக்கும் தயங்காதே. இப்போது கட்சி ஆரம்பித்தாலும் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் நீங்கள்தான்," என்றார் கருணாஸ்.
 
'ரஜினி படத்தைத்தான் தினமும் கும்பிடுகிறேன்' - சின்னி ஜெயந்த்
 
நடிகர் சின்னி ஜெயந்த் பேசுகையில், என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அண்ணன் ரஜினிகாந்த்தான். அவர் படத்தைத்தான் நான் தினமும் என் பூஜையறையில் வைத்துக் கும்பிடுகிறேன், என்றார்.
 
நான்தான் தலைமை நிலைய பேச்சாளர் - வாசு விக்ரம்
 
நடிகர் வாசு விக்ரம் பேசுகையில், எங்க அண்ணன் ரஜினியிடம் எனக்கு அதிக உரிமையுண்டு. அந்த உரிமையில் சொல்கிறேன். தலைவா சீக்கிரம் கட்சியை அறிவியுங்கள். அந்தக் கட்சிக்கு நான்தான் தலைமை கழகப் பேச்சாளராக இருப்பேன். உங்களுக்காக எதைச் செய்யவும் என்னைப் போன்றவர்கள் தயார் என்றார்.
 
எஸ்பி முத்துராமன்
 
எஸ்பி முத்துராமன் பேசுகையில், "நானும் ரஜினியின் தீவிர ரசிகன்தான். ஒரு ரசிகனாக நான் சொல்கிறேன். அவர் எதற்காகவோ கொஞ்சம் யோசிக்கிறார். ஆனால் நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை தருவார். நண்பர்களே, அவர் கட்டிக் கொண்டு வா என்றால் நீங்கள் வெட்டிக் கொண்டு வர தயாராக இருக்க வேண்டும், " என்றார்.



Wednesday, 14 December 2011

முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! - ஞாநி, சோ

 


பலர் முல்லைப் பெரியாறு பற்றி வலைப்பதிவிலும், ட்விட்டரிலும் விவாதிக்கிறார்கள். விவாதிப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியுமா என்று கூட தெரியாது. சும்மா ஜெயும் உம்மன்சாண்டிக்கும் நடக்கும் அறிக்கை யுத்ததை வைத்து நடக்கும் விவாதம் என்றே தோன்றுகிறது.

இந்த வார கல்கியில் வந்த ஞாநியின் ஓ-பக்கங்களிலிருந்தும், துக்ளக் பத்திரிக்கையிலிரிந்தும் வந்த சில தகவல்கள். பலருக்கு சரியான தகவல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த பதிவு, அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.




முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை என்பது என்ன?

'தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க வேண்டும்' என்பது கேரள அரசின் நிலை. 'அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் விவசாயம் பாதிக்கப்படும்' என்பது தமிழக அரசின் நிலை.



இரண்டில் எது உண்மை?

அணை பலவீனமாகிவிட்டது என்று 1979ல் கேரள அரசு சொல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்தப் பிரச்னை வளர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்காக வைக்கப்பட்டது. நிபுணர் குழுவை அமைத்து, பிரச்னையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அணை பலவீனமாக இல்லை என்றும் தற்காலிகமாகக் குறைத்துத் தேக்கிய நீரின் அளவை, பழையபடி அதிகரிக்கலாமென்றும் 2006ல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கேரளத்திலிருந்து தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

அப்படியானால் விஷயம் ஏற்கெனவே முடிந்து போய்விட்டதே? ஏன் மறுபடியும் பிரச்னை?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்துத் தோல்வியடைந்தபின், அணைகள் பாதுகாப்புக்கென்று ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படவிடாமல் தடுத்தது. காவிரி நீர் பிரச்னையிலும் இதே போல உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம் சட்டம் கொண்டு வந்தபோது, அந்தச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி கேரள அரசின் சட்டமும் செல்லாது என்று தமிழக அரசு போட்ட வழக்கில் தொடர்ந்து இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை வருவதற்கு, சற்று முன்னதாக கேரளத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்ட 'டேம் 999' படம் வெளியானது. அணை உடைந்து மாபெரும் விபத்து ஏற்படுவது பற்றிய படம் இது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் எதிர்காலத்தை, தீர்மானம் செய்யக் கூடிய இடைத் தேர்தல் நடக்கும் சமயம். எல்லாமாகச் சேர்ந்து கொண்டு கேரள மக்களின் பயத்தைக் கிளப்பிவிட்டு அரசியல் லாபமடையும் நோக்கத்தில் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்ற பிரசாரம் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்த அணை யாருக்குச் சொந்தம்? கேரளாவுடையதா? தமிழ்நாட்டுடையதா?

முல்லைப் பெரியாறு அணை ஒரு விசித்திரமான அணை. கட்டப்பட்ட அணை தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் கட்டியிருக்கும் இடம் கேரளாவுடையது என்ற அடிப்படையில் தமிழக அரசுக்கு 999 வருட குத்தகையில் தரப்பட்டிருக்கிறது.

அணை கட்டி நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால், அது பலவீனமாகியிருக்க வாய்ப்பு உண்டுதானே?

பராமரிப்பு இல்லையென்றால் கட்டி இரண்டே வருடத்தில் கூட ஒரு வீடு நாசமாகப் போகும். தொடர்ந்து சீரான பராமரிப்பு இருந்தால் பல நூறு வருடம் கழித்தும் ஒரு கட்டுமானம் பலமாகவே இருக்க முடியும். கரிகாலன் கட்டிய கல்லணை 1900 வருடமாகியும் பலமாகவும் பயன்பாட்டிலும் இருந்துவருகிறது. காரணம் தொடர்ந்து பழுதுபார்த்துப் பராமரித்து வருவதுதான். பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய சமயத்தில் கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் காட்டன். அவர் ஆட்சியில் முல்லைப் பெரியாறுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட, கோதாவரி, தௌலேஸ்வரம், கிருஷ்ணா அணைகள் எல்லாம் தொடர்ந்த பராமரிப்பினால் பலமாகவே இருந்து வருகின்றன. முல்லைப்பெரியாறு அணையையும் அவ்வப்போது பலப்படுத்தும் பராமரிப்பு வேலையை தமிழகப் பொறியாளர்கள் செய்துவந்துள்ளனர். உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த வட்டாரத்தின் நில அதிர்ச்சித் தன்மை உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே அணைக்கு ஆபத்தில்லை என்று கூறியிருக்கிறது.

அப்படியானால் ஏன் கேரளம், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இப்படி பீதியைக் கிளப்பிவிடுகிறது?

இந்தப் பிரச்னையின் வேர் தொடக்கத்திலேயே இருக்கிறது. பென்னிகுயிக் அணை கட்ட திட்டம் போட்டபோது, அங்கே திருவிதாங்கூர் அரசும் இங்கே பிரிட்டிஷ் அரசும் இருந்தன. அணைப் பகுதி அமையவேண்டிய தேவிகுளம் - பீர்மேடு பகுதிகள் 90 சதவிகிதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள். ஆனால் பிரிட்டிஷ் அரசு தவறாக அந்தப் பகுதிகளை, திருவிதாங்கூருக்குச் சொந்தமானது என்று கருதியது. அந்த அடிப்படையில் ஒப்பந்தம் போட்டது.

ஆனால் திருவிதாங்கூர் மகாராஜா இருமுறை பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஆய்வாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். அணை இருக்கும் இடம் சென்னை ராஜதானிக்குச் சொந்தமானது. எனவே சுற்றிலும் இருக்கும் பகுதிகளையும் சென்னையே எடுத்துக் கொண்டு தனக்கு 6 லட்ச ரூபாய் தந்தால் போதுமானது என்று மன்னர் சொல்லியிருக்கிறார். அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளை, சென்னை தனக்குக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு முல்லைப் பெரியாறைச் சுற்றியுள்ள பகுதிகளையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை பிரிட்டிஷ் அரசு பொருட்படுத்தவே இல்லை. அப்போதே அப்படிச் செய்திருந்தால், பின்னாளில் மொழி வாரி மாநிலம் அமைக்கும்போது, 90 சதவிகித தமிழர்கள் இருக்கும் தேவி குளம் - பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடே இருந்திருக்கும்.

தங்கள் நிலத்தில் அணையை வைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தமிழகம் கையில் அணை தொடர்பான எல்லா அதிகாரமும் இருப்பதை கேரள அரசு விரும்பவில்லை. படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமாக அது பறித்துக் கொண்டது. 1979 எம்.ஜி.ஆர் - அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?

ஒரு வாதத்துக்காக, அணை பலவீனமாகிவிட்டதாகவும் ஒரு பூகம்பத்தில் உடைந்துவிடுமென்றும் வைத்துக் கொண்டால், 30 லட்சம் கேரள மக்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படத்தானே செய்யும்?

"இல்லை. இந்தக் கருத்தே கேரளத்தில் மலையாளிகள் ஆதரவைத் திரட்ட அவர்களிடையே பீதியைக் கிளப்ப சொல்லப்படும் கருத்துதான். அணை உடைந்து எந்த மக்களாவது பாதிக்கப்பட்டால், அதில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்த வட்டாரத்தில் அவர்கள்தான் இப்போதும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தவிர அணை உடைந்தால் அந்தத் தண்ணீர் நேராகக் கீழே உள்ள இடுக்கி அணைக்குத்தான் போய்ச் சேரும். இடுக்கி அணையே முல்லைப் பெரியாறிலிருந்து வரும் உபரி நீரைத் தேக்கக் கட்டப்பட்டதுதான். வழியில் இருக்கும் ஊர்கள் குமுளி, ஏலப்பாறா இரண்டு மட்டுமே. குமுளி கடல் மட்டத்திலிருந்து 3350 அடி உயரத்திலும் ஏலப்பாறா 4850 அடி உயரத்திலும் உள்ளது. முல்லைப்பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2890 அடி உயரத்தில்தான். எனவே அதிலிருந்து வெள்ளம் இந்த ஊர்களுக்கு மலையேறிச் செல்ல முடியாது.

இந்தப் பிரச்னையைத் திரும்பவும் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியாதா?

பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியாத நிலையில்தான் நீதிமன்றத்தை இரு தரப்புமே அணுகுகின்றன. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதுதான் முறை. ஆனால் கேரள அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறது. மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் உத்தரவை ஒப்புக்கொள்ள மறுத்து, அணைக்கு ஆபத்து என்று மக்களிடையே கலவரத்தைத் தூண்டிவிட்டு, தான் விரும்புவதை சாதிக்க நினைக்கிறது.

அப்படியானால் என்னதான் தீர்வு?

நிச்சயம் வன்முறை உதவாது. இங்கே நாயர் டீக்கடையையோ, மேனன் நகைக் கடையையோ தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். இதற்கு முடிவே இல்லை. கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு. இலக்கியவாதி பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையைப் பகிரங்கமாகப் பேசியவர்கள். ஜெயலலிதா போல மலையாளத்தில் நன்றாகப் பேசத் தெரிந்த தமிழகத் தலைவர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால் நேரில் கேரள நகரங்களுக்குச் சென்றும் மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க முயற்சிக்கலாம்.

தமிழக சினிமா கலைஞர்களுக்கு, கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன. தமிழ் சினிமா பாடல்கள் இல்லாத கேரள ஊரே இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஏற்க மறுத்தால், அந்த அரசை அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதைப் பயன்படுத்த முன்வரும்படி மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.

தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.

( நன்றி: கல்கி )

துக்ளக் பகுதிகள்
கேள்வி : 'முல்லைப் பெரியாறு அணைக்கு நில அதிர்வால் பாதிப்பில்லை' – என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளாரே! இதற்குப் பிரதமரின் முடிவு என்னவாக இருக்கும்?

பதில் : 'நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவது 1974-ல் கேரள அரசினால் நிரப்பப்பட்ட இடுக்கி நீர்த்தேக்கத்தினால்தானே தவிர, முல்லைப் பெரியாறு அணையினால் அல்ல' என்று சில விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். 'ஒரு அணை கட்டி நூறு ஆண்டுகளைக் கடந்து, இந்த மாதிரி அதிர்வுகள் தோன்றாது. மஹாராஷ்டிரத்தில், கொய்னா அணை கட்டி சில ஆண்டுகளில், நில அதிர்வுகளும், அதைத் தொடர்ந்து விபத்தும் நேரிட்டன. கேரளாவிலும், இடுக்கி அணைக்குப் பக்கமாக உள்ள பகுதிகளில்தான் இந்த அதிர்வுகள் தோன்றுகின்றன. இடுக்கி நீர்த்தேக்கத்தில், உள்ள நீரின் அளவு அதிகமாகும்போதுதான் இந்த அதிர்வுகள் அதிகமாகின்றன. ஆகையால், இடுக்கி அணைக் கட்டில், நீர்த் தேக்கத்தின் அளவு குறைக்கப்பட வேண்டும்' என்ற கருத்து அந்த விஞ்ஞானிகளால் கூறப்பட்டிருக்கிறது. இது சரியானதுதானா என்று சொல்லக் கூடிய தகுதி நமக்கு இல்லை. ஆனால், இந்த மாதிரி கருத்துக்களை விவரம் அறிந்தவர்கள் கூறுகிறபோது, அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆகையால், இந்தக் கருத்தை ஒட்டிய ஆய்வு நடத்தப்படுவது நல்லது.

கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள 'டேம் 999' திரைப்படம் பற்றி?

ப : 'படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?' என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் 'இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்' என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக 'முல்லைப் பெரியாறு அணை கூடாது' என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.


கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள 'டேம் 999' திரைப்படம் பற்றி?

ப : 'படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?' என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் 'இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்' என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக 'முல்லைப் பெரியாறு அணை கூடாது' என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.

உண்ணாவிரதம் இருக்கும் முன் இந்த தகவல் எல்லாம் குஷ்பு படித்திருப்பாரா ?

'ரோபோ மாதிரி நடப்பாரே, அவர்தானே பி.எம்'.விஜயகாந்த் நக்கல் பேச்சு

 
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து தேனியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடநத்து. அப்போது முல்லைப் பெரியாறு பிரச்சினையை மட்டும் பேசாமல் அதிமுக அரசின் விலை ஏற்றப் பிரச்சனை, கருணாநிதி குடும்பப் பிரச்சினை உள்ளிட்டவற்றையும் பிரதானமாக பேசினார் விஜயகாந்த்.
 
விஜயகாந்த்தின் பேச்சின்போது கூடியிரு்நத கூட்டத்தாரையும் அவ்வப்போது கண்டித்தபடி,முறைத்தபடி, உதட்டைக் கடித்தபடி வழக்கம் போல பேசினார் விஜயகாந்த்.
 
விஜயகாந்த் முல்லைப் பெரியாறு குறித்து விலாவாரியாகப் பேசப் போவதை கேட்க ஆவலுடன் காத்திருந்தவர்கள் அவர் எப்படியெப்படியோ பேசுவதைப் பார்த்து, தங்களுக்குள் பேசியபடியும், திடீர் திடீரென கேப்டன் வாழ்க என்று கோஷமிட்டபடியும் இருந்தனர். இதைப் பார்த்து டென்ஷனான விஜயகாந்த், ஏம்ம்பா, நை நைன்னு பேசிட்டிருக்கீங்க, நான் பேசவா, வேண்டாமா என்று கண்டித்தார் விஜயகாந்த்.
 
திடீரென கூட்டத்தை நோக்கி கை காட்டி, அது யாரு நம்ம கட்சித் துண்டோடு இருப்பது,அது வேறகட்சி ஆளா என்று கோபமாக கேட்டார். திடீரென ஒரு கட்டத்தில் தனது தலையில் அடித்துக் கொண்டு பேசினார்.
 
விஜயகாந்த் பேச்சில் வழக்கம் போல பல இடங்களில் 'லிங்க்' இல்லை.முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பேசிக் கொண்டிரு்நத அவர் திடீரென கருணாநிதி மஞ்சள் துண்டு, பெரியார் சிவப்புத் துண்டு என்று பேசினார்.
 
வழக்கமாக விஜயகாந்த் பேச்சை இதுவரை சன் டிவி ஒருபோதும் நேரடியாக ஒளிபரப்பியதில்லை.ஆனால் என்றும் இல்லாத புதுமையாக இன்று நேரடியாக ஒளிபரப்பியது. இருப்பினும் கருணாநிதி குறித்தும், ஸ்டாலின் குறித்தும் விஜயகாந்த் பேசியபோது அதிரடியாக சவுண்டைக் கட் செய்து விட்டது சன்.
 
விஜயகாந்த் பேசியதிலேயே பெரிய ஹைலைட் என்னவென்றால் பிரதமரை கிண்டலடித்ததுதான். ரோபோ மாதிரி நடப்பாரே அவர்தானே பி.எம் என்று கேட்டதுதான்!



மகாராஷ்ட்ரா நகராட்சி தேர்தல் முடிவுகள்:காங்கிரஸ் கட்சி கூட்டணி மகிழ்ச்சி

 
 
 
 
 
மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலின் முதற்கட்ட முடிவு காங்கிரஸ் கட்சி கூட்டணியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2834 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 1580 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று முடிவிலும் கூட்டணி காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்பாளர் ஆனந்த் காட்கில் கூறினார்.
 
சிவசேனா கட்சி 288 தொகுதிகளையும் பா.ஜ.க கட்சி 267 தொகுதிகளையும் கைப்பற்றியது. சிவசேனா கட்சி 5 நகராட்சி சபைகளில் பெரும்பான்மை பெற்று விளங்குகிறது. பா.ஜ.க கட்சி ஒரே ஒரு நகராட்சி சபையில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.



Tuesday, 13 December 2011

அன்னா என்ன பெரிய ஹரிச்சந்திரனா? காங்கிரஸ் தாக்கு

 
 
 
 
 
அன்னா ஹசாரே என்ன பொய்யே பேசாத ராஜா ஹரிச்சந்திரனா என்று காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரது குழுவினர் லோக்பால் மசோதா குறித்து விவாதித்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
காங்கிரஸ் எம்.பி. ராஷித் அல்வி கூறுகையில், அன்னாவும், எதிர்கட்சிகளும் சேர்நது பாலிடிக்ஸ் பண்ணுகிறார்கள். நேற்று ஜந்தர் மந்தரில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் காங்கிரஸுக்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணுகிறார்கள் என்றார்.
 
அன்னா ஹசாரே என்ன பொய்யே பேசாத ராஜா ஹரிச்சந்திரனா என்று காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார். அன்னா எதிர்கட்சித் தலைவராகிவிட்டார் என்று மத்திய அமைசச்ர் பெனி பிரசாத் வர்மா தெரிவித்தார்.
 
அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், ஜனநாயகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் விவாதிக்க நாடாளுமன்றம் தான் சிறந்த இடம். நாடாளுமன்றத்திற்கு வெளியே லோக்பால் பற்றி விவாதிப்பது பேசுபவர்களின் இரட்டை பேச்சு மற்றும் இரட்டை முகத்தைக் காட்டுகிறது என்றார்.
 
மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது, அன்னா மற்றும் அவரது குழுவினர் அரசியல் நோக்கத்தில் தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியைத் தாக்கி பேசியுள்ளனர். அன்னா காங்கிரஸ் கட்சியையே குறிவைக்கிறார். பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் நடக்கும் ஊழல்களைப் பற்றியெல்லாம் அவர் வாய்திறக்க மாட்டார் என்று குற்றம்சாட்டினார்.
 
நேற்று நடந்த அன்னா உண்ணாவிரதத்தில் பாஜகவின் அருண் ஜேட்லி, ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த சரத் யாதவ், இடது சாரியைச் சேர்ந்த ஏபி பர்தன், பிருந்தா கரத், டி. ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.



ஜெ., கருணாநிதிக்கு நெருக்கடி தரும் உம்மன் சாண்டியின் 'டிரிக்'?

 
 
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டியுடன் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கத் தயார் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக உம்மன் சாண்டி தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுள்ளார்.
 
இதுகுறித்து திருச்சூரில் அவர் கூறுகையில், பிரதமர் நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், முதல்வர் சாண்டியுடன் இணைந்து அவரை சந்திக்க நான் தயார்.
 
முதல்வருடன், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சென்று பிரதமரைச் சந்தித்தால் சுமூக தீர்வு காண முடியும், அதற்கு இந்தப் பயணம் உதவும் என நம்புகிறேன் என்றார் அச்சுதானந்தன்.
 
ஜெ., கருணாநிதிக்கு நெருக்கடி தர 'டிரிக்'?
 
இருப்பினும் இந்த சந்திப்புத் திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. பிரச்சினையைத் தீர்ப்பதை விடவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி தரும் விஷயங்களில்தான் கேரள அரசியல்வாதிகள் தீவிரம் காட்டி வருவதாக கருதப்படுகிறது.
 
உம்மன் சாண்டியும், அச்சுதானந்தனும் சேர்ந்து போய் பிரதமரைச் சந்தித்தால், இதேபோன்ற கோரிக்கை தமிழகத்திலும் எழும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக தெரிகிறது. அப்படி கோரிக்கை எழுந்தால், நிச்சயம் அது ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் தர்மசங்கடத்தில் ஆழ்ததும், நிச்சயம் இருவரும் இணைந்து பிரதமரைச் சந்திக்க மாட்டார்கள். இதை வைத்து பாலிடிக்ஸ் செய்யலாம் என்பது கேரளத் தரப்பின் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
அதேசமயம், கேரளாவில் அத்தனை கட்சிகளும் ஒருமித்த கருத்தில், ஒரே மாதிரியான முடிவில் இருப்பதை பிரதமரிடம் தெரிவித்து அவருக்கு நெருக்கடி தரும் வகையிலும் சாண்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.



குமுளியில்திரண்டு 50,000 தமிழர்கள் போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்

 
 
வரலாறு காணாத வகையில் கேரளாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் உள்ள தேனி மாவட்ட மக்கள் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் பேரணியாக கேரளாவை நோக்கி படையெடுத்த நிலையில், இன்று மீண்டும் அதே அளவிலான மக்கள் பெரும் பேரணியாக கேரளாவை நோக்கி சென்று குமுளியில், தமிழகப் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
இந்த நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குமுளிக்கு வந்தபோது அவரது காரை மறித்து கூட்டத்தினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் கல்வீசியவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் மக்கள் வரலாறு காணாத கோபத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். இந்த கோபமும், கொந்தளிப்பும், தேனி மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளது.
 
முல்லைப் பெரியாறு பாசன மாவட்டம் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தனை காலமாக தங்களிடமிருந்து பால், காய்கறி, அரிசி, பருப்பு என அத்தனையையும் பெற்று விட்டு நமது பெண்கள் மீதே கை வைத்து விட்டார்களே என்ற கொந்தளிப்புதான் அது.
 
இதனால்தான் தமிழகத்தின் பிற பகுதிகளை விட தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேறரளாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை இப்பகுதி மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
 
ஒரு வாரமாக கடும் போராட்டம்
 
குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்றுயாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் அலைகடலென திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. இந்தப் பேரணிக்கு யாரும் ஏற்பாடு செய்யவலில்லை. மக்களே திரண்டு பேரணியாக உருமாறி கேரளாவை நோக்கி படையெடுத்து விட்டனர்.
 
மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் கடும் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றனர். இருப்பினும் குமுளி வரை மக்கள் முன்னேறிப் போய் விட்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது. பின்னர் கலெக்டரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.
 
2வது நாளாக மக்கள் எழுச்சிப் பேரணி
 
இந்த நிலையில், இன்றும் மக்கள் பேரணியாக கிளம்பினர். ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், கே.கே.பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மக்கள் பெரும் ஊர்வலமாக கிளம்பினர்.
 
விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 15,000 பேர் மோட்டார்சைக்கிள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பியுள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் நடந்தே சென்றனர்.
 
அத்தனை பேரும் குமுளியை நோக்கிச் சென்றனர்.ஆனால் அவர்கள் கேரள எல்லைக்குள் நுழையக் கூடாது என்று போலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து குமுளிக்கு முன்பு உள்ள தமிழக அரசின் போக்குவரத்துக்க கழக டிப்போ முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
இந்தப் போராட்டத்தால் எல்லைப் பகுதியில் பெரும் பதட்டமான நிலை காணப்பட்டது.
 
ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்
 
இந்த நிலையில் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து சமரசம் பேசுவதற்காக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கார் மூலம் குமுளி புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரது காரைப் பார்த்த போராட்டக்காரர்கள், இத்தனை நாட்களாக வராமல் இப்போது வருகிறாரா என்று கூறி கார் மீது கல்வீசித் தாக்கினர்.
 
இதையடுத்து கல்வீச்சில் இறங்கியவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்து விரட்டினர். பின்னர் பன்னீர்செல்வத்தை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றது போலீஸ்.
 
சுடத் தயார் நிலையில் இருந்த கேரள போலீஸ்
 
முன்னதாக, கேரள எல்லைக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால் சுடுமாறு இடுக்கி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
தமிழக எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
 
மக்களின் இந்த எழுச்சிமிக்க போராட்டத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து இன்றும் பெரும் பரபரப்பு நிலவியது.



அஞ்சலியை அலைய விடும் செல்போன் கடை!

 
 
விளம்பரத்தில் நடித்துக் கொடுத்ததற்கான பணத்தை கொடுக்காமல் நடிகை அஞ்சலியை பிரபல செல்போன் கடையொன்று இழுத்தடித்து, அலைய விட்டுக் கொண்டிருக்கிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த அஞ்சலி, தனது சம்பளத்தை பெற்றுத்தரும்படி கோர்ட் உதவியை நாடியிருக்கிறார். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படம் லாபகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் சந்தோஷத்தில் இருக்கும் அஞ்சலியை பழைய பாக்கி ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. பாக்கி வைத்தவர்கள் மீது சட்டையை பிடித்து உலுக்காத குறையாக ஆத்திரப்பட்டிருக்கிறார்.
 
அஞ்சலி நடிக்க வந்த ஆரம்பத்தில், ஒரு மொபைல் ஷாப் விளம்பரத்தில் நடித்துக் கொடுத்தார். இதற்காக ஐந்து லட்சம் சம்பளம் பேசிய கம்பெனி, அதில் 46 ஆயிரம் ரூபாயை மட்டும்தான் கொடுத்திருந்ததாம். அதன்பின் தர வேண்டிய மீதி தொகையை தராமல் இத்தனை காலம் இழுத்ததடித்ததோடு அல்லாமல், விளம்பரத்தையும் கடந்த ஐந்து வருடங்களாக பயன்படுததி வருகிறது. பொறுத்து பொறுத்து பார்த்த அஞ்சலி, அவர்களிடமிருந்து 20 லட்ச ரூபாயை பெற்றுத் தரும்படி கோர்ட் உதவியை நாடியிருக்கிறார்.



மக்களுக்காக போராட்டம் நடத்தி மக்களை வாட்டியெடுத்த சிபிஎம்!

 
 
 
 
 
முல்லைப் பெரியாறு பிரச்சனையை கேரள மாநில முதல்வர் அமைதியாக பேசித் தீர்க்காமல் தமிழக மக்களை மிரட்டி, பயமுறுத்தும் வகையில் பேசி வருகிறார். இது தேசிய ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஆபத்தாக முடியும். தமிழர்களை அடிப்பதும், தமிழக போலீசாரை அடித்து விரட்டுவதும் ஆத்திரமூட்டும் செயலாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
 
நிருபர்களிடம் அவர் பேசுகையில், பால் விலை, பஸ் கட்டணத்தை தமிழக அரசு இரு மடங்காக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 
பெட்ரோலிய நிறுவனங்களை போல உர உற்பத்தி நிறுவனங்களும் தாங்களே அதன் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற கொள்கையால் தற்போது உர விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க, மீண்டும் மத்திய அரசே பெட்ரோல், உர விலையை நிர்ணயிக்க வேண்டும்.
 
பால் விலை, பஸ் கட்டண உயர்வு மற்றும சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய மூதலீடு அனுமதிப்பது ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 7ம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும்.
 
முல்லைப் பெரியாறு பிரச்சனையை கேரள மாநில முதல்வர் உள்பட பலரும் அமைதியாக பேசி தீர்க்காமல் தமிழக மக்களை மிரட்டி, பயமுறுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இது தேசிய ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஆபத்தாக முடியும். தமிழர்களை அடிப்பதும், தமிழக போலீசாரை அடித்து விரட்டுவதும் ஆத்திரமூட்டும் செயலாக உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
 
முல்லைப் பெரியாறு பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவதாக கேரளா தான் கூறி வருகிறது. ஆனால், அங்கேயே புதிய அணையும் கட்டப் போவதாக சொல்கிறார்கள். நில நடுக்கம் உள்ள பகுதியில் புதிய அணை கட்டப்பட்டால் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா? என்றார் பாண்டியன்.
 
மார்க்சிஸ்ட் கட்சி மறியல்-போலீஸ் தடியடி:
 
இந் நிலையில் பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலும், பாரிமுனை குறளகம் அருகிலும் மறியல் போராட்டம் நடத்தினர்.
 
சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரே ரோட்டின் இருபுறமும் தொண்டர்கள் உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் பெரும் இன்னுக்கு ஆளாகினர். இதையடுத்து மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
 
அப்போது போலீசாருக்கும் சிபிஎம் தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் டி.வி. கேமராமேன் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
 
பாரிமுனை குறளகம் அருகே செளந்தர்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த மறியலால் சென்னை பாரிமுனை பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கும் கடும் வெயிலில் மக்கள் டிராபிக் ஜாமில் சிக்கி தவித்தனர்.



திராவிடக் கட்சிகள் 45 வருடமாக வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றி விட்டன: அன்புமணி

 
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என மக்களிடம் கேட்டு வருகிறோம். பாமக ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து சாராயமே இல்லாமல் செய்வதாகத்தான் இருக்கும். தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாமல் செய்து காட்ட எங்களால் முடியும் என்றார் அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி.
 
சேலம் கோட்டை மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய அன்புமணி,
 
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சிலர் பொய் தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்த நாம் தோற்றோம். இப்போது தனியாக நிற்கிறோம். தனியாக நின்றதால் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
 
இனி வரும் காலங்களில் பாமக. ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும். பாட்டாளி மக்கள் கட்சி வித்தியாசமான கட்சி. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது. இனி யாருடனும் கூட்டு சேர மாட்டோம்.
 
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான சுகாதாரம் தருவோம். படித்த இளைஞர்களுக்கு வேலை தருவோம். விவசாயத் தொழில் வளர உதவி செய்வோம்.
 
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என மக்களிடம் கேட்டு வருகிறோம். நாங்கள் தரமான கல்வியை தருவோம். சிறந்த நிர்வாகத்தை தருவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து சாராயமே இல்லாமல் செய்வதாகத்தான் இருக்கும். ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாமல் செய்து காட்ட எங்களால் முடியும்.
 
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து தருவோம். தமிழக முன்னேற என்னென்ன செய்ய முடியுமோஅதை அனைத்தையும் செய்து தருவோம். வெளிநாட்டினர் தமிழகத்தை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு தமிழகத்தை முன்னேற்றி காட்டுவோம்.
 
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவோம், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம். இதன் மூலம் சுமார் ரூ.50,000 கோடி லாபம் கொண்டு வரச் செய்வோம்.
 
இப்போது மணல் அனைத்தும் கேரளாவிற்கு செல்கிறது. அதைத் தடுப்போம். இதுபோன்ற மாற்றங்களை பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே செய்ய முடியும்.
 
திராவிடக் கட்சிகள் நிறைய தவறுகளை செய்துள்ளன. 45 வருடமாக வசனங்கள் பேசி மக்களை ஏமாற்றி விட்டனர்.
 
அணு உலை யாரும் கேட்கவில்லை. ஆந்திராவில் அணு உலை இல்லை. கேரளாவில் அணு உலை இல்லை. ஏன் இங்கு மட்டும் அணு உலை கொண்டு வர வேண்டும்?. நாங்கள் இதை கொண்டு வரவில்லை. திராவிட கட்சிகள்தான் இதைக் கொண்டு வந்தன என்றார்.