Followers

Tuesday, 3 January 2012

முல்லைப் பெரியாறு: கேரள வாதம் தூள் தூள்!

 
 
 
முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு பல்வேறு நிபுணர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் நேரடிய ஆய்வு முடிவுகளை வைத்து விசாரித்து வருகிறது.
 
முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கேரள அரசு புகார் கூறியதைத் தொடர்ந்து சமீபத்தில் தத்தே, தத்தா ஆகிய நிபுணர்களைக் கொண்ட குழுவை இந்த ஐவர் குழு அணைக்கு நேரடியாக அனுப்பி ஆய்வு செய்தது. அப்போது தங்களது இஷ்டத்திற்கு நடக்குமாறு குழுவினரை கேரளத் தரப்பு வலியுறுத்தியது. ஆனால் அதை நிபுணர் குழு நிராகரித்து விட்டது. இதனால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
 
இந்தநிலையில் இன்று ஐவர் குழு கூடியது. அப்போது குழு உறுப்பினர்களுடன் தமிழக, கேரள வக்கீல்களும் ஆஜராகினர். அப்போது தத்தே, மேத்தா ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
 
அந்த அறிக்கையில் தாங்கள் சமீபத்தில் அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறித்த விவரங்களையும், முடிவுகளையும் இரு நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். அதில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் மிக மிக சிறிய அளவிலேயே ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், அணைக்கு நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஏற்கனவே தமிழகமும் இதைத்தான் கூறி வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய அரசும் கூட, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மிக மிக குறைந்தஅளவிலான நிலநடுக்கமே ஏற்பட்டதாகவும், அவை கூட பதிவாகவில்லை என்றும் விளக்கியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் கேரள அரசுதான் பிடிவாதமாக நிலநடுக்கத்தால் அணை உடையும் என்று கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்பத் திரும்பச்சொல்லி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



அன்னாவுக்கு வந்த இந்த நிலைமையும் ;காங்கிரசாரின் சந்தோசமும்

 
 
 
வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரக்கோரி பிரபல சமூக சேவகர் அன்னாஹசாரே 2 தடவை உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவரது கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
மத்திய அரசின் போக்கைக் கண்டித்து 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்யப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னா ஹசாரேக்கு திடீரென உடல் நலம் பாதித்தது. காய்ச்சல், சளித் தொல்லையால் அவதிப்பட்ட அவருக்கு மார்பில் தொற்று ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு அவர் மார்பில் வலிப்பதாக கூறியதால் புனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அன்னா ஹசாரே இன்னும் 5 நாட்களில் உடல்நலம் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அதன் பிறகும் 5 நாள் அவர் போதுமான அளவுக்கு ஓய்வு எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தனது உடல்நிலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அன்னாஹசாரே கூறியுள்ளார். உடல் நலம் முழுமையாக தேறிய பிறகு குழுவினருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
 
இதற்கிடையே அன்னா ஹசாரே குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அவர்கள் 5 மாநில தேர்தலில் அன்னாவை பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர். எனவே 5 மாநில தேர்தலில் ஹசாரே பிரசாரம் செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது.
 
நேற்று அன்னாஹசாரேயை பரிசோதித்த டாக்டர்கள், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு உண்ணாவிரதம் போராட்டம் எதிலும் ஈடுபடக்கூடாது என்று கூறினார்கள். எனவே இனி அன்னாஹசாரே உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடமாட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
 
இது பற்றி அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த மனீஷ் சிசோடியா கூறுகையில், அன்னா உடல் நலத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். இனி அவரை உண்ணாவிரதம் இல்லாது வேறு வகையான போராட்டங்களில் ஈடுபடுத்த உள்ளோம் என்றார்.

காங்கிரசுக்கு அனைத்து வழிகளிலும் பெரும் தலைவலியாக விளங்கிய அன்னா ஹசாரேவுக்கு வந்த இந்த நிலைமையும் அவரது குழுவினர் எடுத்துள்ள முடிவும் காங்கிரசாரை பெரும் சந்தோசத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.

இந்திராகாந்தி படுகொலை, ராஜீவ்காந்தி படுகொலைகள் மக்களுக்கு ஏற்படுத்திய வலிகளை தங்களுக்கு சாதகமாக வாக்குகளாக மாற்றி அரியணை ஏறியவர்களுக்கு அன்னாவின் இந்த நிலை ஒன்றும் பெரிதில்லை. மனிதாபிமானம் அற்ற மாக்களல்லவ்வா இவர்கள்....



பா.ஜ.க. தலைவர்களுக்கு எடியூரப்பா திடீர் கெடு

 
 
 
கர்நாடகாவில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவியை இழந்தார். லோக் ஆயுக்தா கோர்ட்டு உத்தரவிட்டதால் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார்.
 
கர்நாடகாவில் பா.ஜ.க. வளர்ச்சி பெற மிக முக்கிய அங்கம் வகித்த அவருக்கு தற்போது கட்சி கட்டுப்பாடு தன்கையை விட்டு போய் விட்டதில் வருத்தமும், வேதனையும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு காய்களை நகர்த்தினார். ஆனால் சதானந்தகவுடா மேல்-சபை உறுப்பினர் ஆனதன் மூலம் எடியூரப்பாவின் மீண்டும் முதல்வர் கனவு தகர்ந்தது.
 
இதையடுத்து தனது செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். எடியூரப்பா நேற்று முன்தினம் தன் வீட்டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து கொடுத்தார். பிறகு அவர்களிடம் பேசிய எடியூரப்பா, நீங்கள் 80 எம். எல்.ஏ.க்கள் மொத்தமாக டெல்லிக்கு செல்லுங்கள். என்னை முதல்வராக்கும்படி மேலிடத் தலைவர்களிடம் வற்புறுத்துங்கள் என்றார். எடியூரப்பா இதோடு நிற்கவில்லை. கர்நாடகாவில் தற்போது ஆட்சி திறமையற்றதாக மாறி விட்டது. எடியூரப்பா வந்தால் தான் நிர்வாகத்தை சீரமைக்க முடியும் என்று கூறும் படியும் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் கூறி வருகிறார்.
 
எடியூரப்பாவின் இந்த நடவடிக்கைகள் பா.ஜ.க. மேலிட தலைவர்களுக்கு தெரிய வந்துள்ளது. எடியூரப்பாவை எப்படி அமைதிப்படுத்துவது என்று அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. மேலிடத் தலைவர்களுக்கு எடியூரப்பா திடீர் "கெடு" ஒன்றை விடுத்துள்ளார். வரும் 15-ந் தேதிக்குள் எனக்கு மிக முக்கிய பொறுப்புத் தரவேண்டும். இல்லையெனில் நான் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.
 
எடியூரப்பா விதித்துள்ள இந்த கெடு பா.ஜ.க. மேலிடத் தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் அவர்கள் எடியூரப்பாவை அடுத்த வாரம் டெல்லிக்கு வரவ ழைத்து பேச்சு நடத்துவார்கள் என்று தெரிகிறது. பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் சமரசம் ஏற்படாத பட்சத்தில் எடியூரப்பா புதிய மாநில கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் தன் ஆதரவு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
 
எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பதவி கொடுக்காவிட்டாலும், மாநில தலைவர் ஆக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே எடியூரப்பாவை தங்கள் பக்கம் இழுக்க முலாயம்சிங் யாதவும், சரத்பவாரும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.