Followers

Saturday 5 November 2011

அறிவு வளர்ச்சிக்கு எதிரான மன நிலையில் ஜெ.- பெ.மணியரசன்

 
 
 
உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக் கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார் என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக மணியரசன் விடுத்துள்ள விரிவான அறிக்கை:
 
உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதற்கென எழுப்பட்ட கோட்டூர்புரம் கட்டடத்திலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக்கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார். கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான செயலலிதாவின் மன நிலைக்கு நிறைய சான்றுகள் தரலாம்.
 
முதலில் சமச்சீர் கல்வியை தடை செய்தார்
 
கடந்த மே மாதம் முதலமைச்சரான உடனேயே கல்வியாளர்களால் பாராட்டப்பெற்ற சமச்சீர்க் கல்வியை தடைசெய்தார். தமிழகத்தில் பெரும்பாலானோர் சமச்சீர்க் கல்வியை மீட்க கருத்துகள் கூறினார்கள், போராடினார்கள். பரவலான மக்கள் கருத்தை செயலலிதா மதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட பிறகு வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சமச்சீர்க் கல்வியை செயல்படுத்தி வருகிறார்.
 
செம்மொழி ஆய்வு மையத்தை சிறுமைப்படுத்தினார்
 
இந்தியஅரசின் கீழ் செயல்படும் செம்மொழி மையம் தமிழக அரசுக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சரை குடியேற்றி செம்மொழி மையத்தை ஒரு சிறு பகுதியில் செயல்படும் நிலைக்கு உள்ளாக்கினார்.
 
தமிழக அரசின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் செம்மொழி ஆய்வகத்தையும் பாலாறு இல்லத்திலிருந்து வெளியேற்றி எழும்பூரில் ஒரு சிறிய இடத்திற்கு மாற்றினார். அத்துடன் பாரதிதாசன் செம்மொழி ஆய்வு மையத்திற்கு உரிய நிதி ஒதுக்காமலும், உரிய ஆய்வுத்திட்டம் வகுக்காமலும் முடக்கிவிட்டார்.
 
தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் விட்டு வைக்கவில்லை
 
தஞ்சையில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் செயலலிதா விட்டு வைக்கவில்லை. எம்.ஜி.ஆர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய போது அதன் விரிவாக்கத்திற்கென ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கினார். ஏற்கனவே அவ்வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்தார்கள். இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கட்ட அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
 
தமிழர்களின் அறிவு வளரக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்
 
இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்த்தால் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் அக்கறையில்லை என்பது மட்டுமல்ல, எதிர்நிலைக் கருத்தை கொண்டுள்ளார் எனபது தெரியவருகிறது. இலவசங்கள் வழங்கி, வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வது என்ற அதிகார அரசியலில் மட்டுமே செயலலிதா குறியாக இருக்கிறார். மக்கள் அறிவு வளர்ச்சிப் பெறுவதும், விழிப்புணர்ச்சி அடைவதும் அவரது வாக்கு வங்கி அரசியலுக்கும் அவரின் எதேச்சாதிகார மனப்போக்கிற்கும் இடையூறு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறார்.
 
அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான அவரது மன நிலை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான அவரது பழிவாங்கும் அரசியலோடு இணைந்து போகிறது.
 
அறிவு தாகத்தின் மீதான தாக்குதல்
 
தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களும், விழிப்புற்ற மக்களும் கல்வி மற்றும் அறிவு தாகத்தின் மீது செயலலிதா நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க வேண்டும். கோட்டூர்புரத்தில் இப்பொழுதுள்ள கட்டடத்திலேயே அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து செயல்படவும், தமிழக முதல்வரின் இடமாற்ற முயற்சியை தடுக்கவும் போராட வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.



ஜெயலலிதாவின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது: விஜய்காந்த்

 
 
 
அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 200 கோடியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
 
அவ்வாறு மாற்ற வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை. மக்கள் வரிப்பணம், 200 கோடி ரூபாயில், உயர் கல்விக் கட்டடங்கள் நிறைந்துள்ள பகுதியில், நூலகம் அமைந்துள்ளதால், கல்வியாளர்கள் எளிதில் வந்து செல்கின்றனர்.
 
புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் போல இந்த நூலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே அவரது பெயரில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைந்திருப்பது பொருத்தமானது.
 
குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை, அரசு அமைக்க விரும்பினால், ஏற்கனவே உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையை மேம்படுத்தியிருக்கலாம். திருமழிசையில் ரூ.2,160 கோடியில் அமைய உள்ள துணை நகரத்திலோ அல்லது தமிழகத்தின் பிற நகரங்களிலோ புதிதாக மருத்துவக் கல்லூரியுடன் கூடிய குழந்தைகள் மருத்துவமனையை அமைக்கலாம்.
 
கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பதற்காகவே இதை மாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜனநாயகத்தில் ஆட்சிகள் மாறுவது இயற்கை. முந்தைய ஆட்சியின் திட்டங்களை மாற்றுவதன் மூலம் மக்களின் பணம்தான் விரயமாகிறது.
 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். வேண்டுமானால் இந்த நூலகத்தை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தலாம். கோயம்பேடு பேருந்து நிலையம் இரண்டு ஆட்சிகளிலும் நிறைவேற்றப்பட்ட திட்டமாகும். எனவே, மக்கள் aநலன் கருதி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
மாற்றுவது கண்டிக்கத்தக்கது-கிருஷ்ணசாமி:
 
இந் நிலையில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
 
நிருபர்களிடம் அவர் கூறுகையில், திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு கைவிடுவது நல்லதல்ல. நூலகத்தை மருத்துவமனையாக்குவது என்பது தவறான அணுகுமுறை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நூலகத்தை மருத்துவமனையாக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகதத் திட்டம்.
 
5,000 பேர் அமர்ந்து படிக்கக் கூடிய ஒரு நூலகத்தை, அதுவும் செயலுக்கு வந்து 8 மாத காலத்தில், அப்படியே குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று இன்றைய அதிமுக அரசு அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றார்.



காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி தலைவராக மூத்த தலைவர்கள் ஆதரவு

 
 
 
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி சோனியாகாந்தி தலைவராக பொறுப்பு ஏற்றார். 2006-ம் ஆண்டு அவர் பல மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் மத்தியில் ஆட்சியைப் பிடித்தார். என்றாலும் கடந்த 7 ஆண்டுகளாக அவர் ஆட்சிப் பொறுப்பில் நேரடியாக பங்கேற்காமல் பின்னணியில் இருந்து அரசை இயக்கி வருகிறார்.
 
சோனியாகாந்திக்கு சமீபத்தில் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் கூட அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட இயலாது என்று தெரிகிறது.
 
காங்கிரஸ் கட்சி பணிகள், தனது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று சோனியா கருதுகிறார். எனவே காங்கிரசை வழி நடத்தும் தலைவர் பதவியில் இருந்து விலகி விட அவர் தீர்மானித்துள்ளார்.
 
காங்கிரசுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில், ராகுல்காந்தியை தலைவராக்க அவர் திட்டமிட்டுள்ளார். வரும் 19-ந்தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.
 
இதற்கிடையே காங்கிரஸ் தலைவராக இன்னும் 4 வாரத்திலோ அல்லது 8 வாரத்திலோ ராகுல்காந்தி முறைப்படி பொறுப்பு ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. இன்னும் 2 வாரத்தில் அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் ராகுல், காங்கிரஸ் தலைவராகி விடுவார் என்று உறுதிபட சொல்கிறார்கள்.
 
ராகுல்காந்தி விரைவில் காங்கிரசுக்கு தலைவர் ஆவது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும், மத்திய மந்திரிகளும் இதை சூசகமாக உறுதிபடுத்தி விட்டனர். எனவே ராகுல் எப்போது தலைமை பொறுப்பை ஏற்பார் என்பதில் தான் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
இந்த நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக, கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆதரவு அதிகரித்தப்படி உள்ளது. ராகுல்காந்திக்கு 41 வயதே ஆன போதிலும், அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் என்று காங்கிரசில் உள்ள அனுபவம் மிக்க மூத்த தலைவர்கள் பலரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
 
காங்கிரஸ் தலைவராக சோனியா பதவியேற்ற போது, அவர் இத்தாலி நாட்டுப் பெண் என்ற சல சலப்பு ஏற்பட்டது. ஆனால் ராகுல்காந்தி விஷயத்தில் அத்தகைய எந்த சலசலப்பும், சர்ச்சையும் எழவில்லை.ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பு ஏற்கும் பட்சத்தில் காங்கிரசை நேரு குடும்பத்தைச் சேர்ந்த 4-வது தலைமுறை வழி நடத்தப் போவது குறிப்பிடத்தக்கது.
 
நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்-சோனியாவுக்கு அடுத்தப் படியாக ராகுல் தலைமை பொறுப்புக்கு வருகிறார். நேரு, இந்திராகாந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு வந்தபோது எந்த சவால்களையும் எதிர் கொள்ளவில்லை.
 
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாபத்தில் ராஜீவ் தலைவர் பொறுப்பை எளிதாக ஏற்றார். அவருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மிக பலவீனமாக மாறியபோது, சோனியா தலைவர் பொறுப்பை ஏற்று கை கொடுத்தார். ஆட்சியைப் பிடிக்க அவர் பெரிய அளவில் போராட வேண்டிய நிலை ஏற்படவில்லை.
 
ஆனால் தற்போது அரசியல் சூழ்நிலை மத்திய அரசுக்கு எதிராக உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்களும், தொடர் விலைவாசி உயர்வும் மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன. இத்தகைய சோதனையான நேரத்தில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க உள்ளார்.
 
இதற்கு முன்னோட்டமாக அவர் மாநில கட்சி விவகாரங்களை கவனிக்கத் தொடங்கியுள்ளார். 5 மாநில தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு விஷயங்களிலும் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். எனவே 5 மாநில தேர்தல், ராகுலின் அரசியல் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் களமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.



Thursday 3 November 2011

மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

 
 
 
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்கு இலவச நாப்கின் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
 
18 பைகள் இலவச நாப்கின்
 
மாநிலம் முழுவதும் வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு ( நாப்கின்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழக அரசு மூலம் பெண்கள், மாணவிகள் என அனைவருக்கும் மாதம்தோறும் வழங்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலமும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சுகாதார துறை அலுவலகர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர், அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் வழங்கப்படும்.
 
2 மாதத்திற்கொரு முறை 6 எண்ணம் கொண்ட 3 பைகள் வழங்கப்படும். ஆண்டுக்கு 18 பைகள் வழங்கப்படும். இந்த பேக்கேஜ் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கும் வழங்கப்படும். இரும்புச்சத்து மாத்திரை, குடல் புழு நீக்கல் மாத்திரை மற்றும் வளர் இளம்பெண் குறிப்பேடு ஆகியனவும் வழங்கப்படும்.
 
சுற்றுப்புற சுகாதாரம்
 
மேலும் இந்த கழிவு பொருட்கள் மூலம் உருவாகும் சுற்றுப்புற சூழல் தூய்மையை காக்கும் விழிப்புணர்வும், இதனை கருத்தில் கொண்டு குழி தோண்டி புதைக்கவும், எரிக்கவும் உத்தரவிடப்படுகிறது. அரசின் இந்த உத்தரவு மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெறுவர்.
 
நாட்டிலேயே முதன்முதலாக கொண்டு வரப்படும் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்குரூ. 44 கோடியே 21 லட்சம் செலவாகும். சுகாதாரம் மற்றும் தொற்று‌நோய் பரவும் விதம் குறைக்கப்படும். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.



'துக்ளக் தர்பார்' நடத்துகிறார் ஜெயலலிதா: வைகோ

 
 
 
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், முன்பு இருந்த கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்தது என்ற ஒரு காரணத்திற்காக இந்த நூலகத்தை அங்கே இருந்து அகற்ற முடிவு செய்திருப்பது தான்தோன்றித்தனமான முடிவாகும். 'துக்ளக் தர்பார்' என்பதற்கு வேறு எந்த உதாரணமும் இருக்க முடியாது.
 
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு, அங்கே உரையாற்றுகிறபொழுது ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலமாக இது அமைந்திருக்கிறது பாராட்டிச் சொன்னார்.
 
முந்தைய திமுக அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில், அதிமுக அரசு நடந்து கொள்கிறது. நூலகத்திற்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பை எவ்வாறு மருத்துவமனையாக பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை என்றார்.
 
கி.வீரமணியும் கண்டனம்:
 
இதுகுறித்து திக தலைவர் வீரமணி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டூர்புரத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும், இந்த நூலகம் நுங்கம்பாக்கம் டிபிஐ கல்வி வளாகத்திற்கு மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.
 
172 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் முதல்வராக இருந்த கருணாநிதியின் ஆட்சியில் கட்டப்பட்டது; உலகத்தரம் வாய்ந்த-ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்ற அளவில், ஒரே நேரத்தில் 5000 பேர்கள் அமர்ந்து படிக்கவும் வசதிகளைக் கொண்ட- நூலகத்திற்கென்றே திட்டமிட்டு, அதற்கேற்ப நவீன கணினி தொழில் நுட்பங்களைக் கையாண்டும், மாற்றுத் திறனாளிகள் கூட வசதியாக அமர்ந்து படிக்கும் வண்ணமும், தனித்தனிப் பகுதிகளைக் கொண்ட நூலகம் என்ற தனிச்சிறப்புடையது.
 
5.5 லட்சம் புத்தகங்களைக் கொண்டதோடு பழைய ஓலைச்சுவடிகளை கூட ஆய்வுக்காக சிறப்பாகப் பாதுகாத்துப் பயன்படுத்தும் வசதிகளை உள்ளடக்கி, சிறப்பாக செயல்படுகின்ற நூலகம் இது. உணவகம், மிகச்சிறந்த அரங்குகள் ஆகியவைகளை உள்ளடக்கியது. இதனை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்றே புரியவில்லை.
 
குழந்தைகள் நல மருத்துவமனை கட்ட சென்னையில் இடங்களா அரசுக்கு இல்லை? நூலகத்திற்கென வடிவமைக்கப்பட்டதை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் செலவாகத்தானே செய்யும்? அது எவ்வகையில் ஏற்கக்கூடிய ஒன்று?
 
இதனை தமிழக அரசும் முதல்வரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அண்ணா நூலகம் அதே கட்டடத்தில் தொடரும் வண்ணம் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.
 
அதே போல இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



சிறையில் 9 மாதங்களைக் கடந்த ராசா- இதுவரை ஜாமீன் கோரவில்லை!

 
 

டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா 9 மாதத்தை நிறைவு செய்துள்ளார். இதே வழக்கில் கைதான கனிமொழி தொடர்ந்து ஜாமீன் கோரி வந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட விடுதலை கோரி அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அத்துறையின் அமைச்சராக இருந்த அ.ராசா கடந்த பிப்ரவரி 2ம் தேதி கைது செய்யப்பட்டார். நவம்பர் 2-ம் தேதியோடு அவர் 9 மாதங்களை சிறையில் கழித்துவிட்டார். இந்த வழக்கில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கனிமொழி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 22ம் தேதி இவர்கள் அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கலானது.

இவர்களில் ராசா இதுவரை ஜாமீன் கோரி ஒரு முறை கூட மனு செய்யவில்லை. மாறாக, கனிமொழி, ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆர். கே. சண்டோலியா, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, ஸ்வான் டெலிகாம் ஊக்குநர் ஷாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத் குமார், குசேகாவோன் காய்கறி, பழங்கள் விற்பனை நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கறீம் மொரானி, யூனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, டி.பி. ரியால்டி நிர்வாக இயக்குநர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் நிர்வாகிகள் கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜாமீன் கோரி மனுச் செய்தனர்.

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அனைத்திலுமே ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தும் யாரும் இதுவரை விடுதலை பெற முடியவில்லை. ஆனால் ராசா இதுவரை ஒருமுறை கூட ஜாமீன் மனு தாக்கல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராசா சிறையில் 9 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் அம்மாவுக்கு ஜெயலலிதா தந்த புதிய பதவி!

 

சென்னை: நடிகர் விஜய்யின் அம்மாவும் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனின் மனைவியுமான ஷோபாவுக்கு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு இசைப் பள்ளிகளின் கலை இயல் அறிவுரைஞராக ஷோபா சந்திரசேகரனை நியமித்துள்ளார் ஜெயலலிதா.

கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் திருச்சி, நெல்லை, திருவாரூர், காஞ்சிபுரம், சேலம், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி, கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, சீர்காழி, ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் இயங்கும் 17 அரசு இசைப்பள்ளிகளுக்கும் இனி ஷோபா சந்திரசோகரன் அறிவுரைஞராக செயல்படுவார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தப் பதவியை அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஷோபா சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணியாற்றியது விஜய்யின் மக்கள் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் வைத்த ஆப்பு! கனிமொழி ஜாமீன் நிராகரிப்பு!! அதிர்ச்சியில் கருணாநிதி!!!

 
 
 
2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் 2ஜி ஊழல் வழக்கில் வரும் 11-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக கனிமொழி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காததால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இதனால் கனிமொழி விடுதலையாகக்கூடும் என்று திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் தில்லி வந்தனர். கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அவரை அழைத்துச் செல்வதற்காக அவர்கள் தில்லி வந்ததாகக் கூறப்பட்டது.
எனினும் அவரது ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றத்துக்கு வந்திருந்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெளியாவதால் இன்று காலை சிபிஐ நீதிமன்றத்துக்கு கனிமொழி அழைத்து வரப்பட்டார்.
சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தை நாடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



கனிமொழிக்கு அனுதாபமோ, பரிவோ காட்டக் கூடாது- சிபிஐ நீதிபதி

 
 
 
மக்கள் பணத்தை தங்களது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்தியவர்களுக்கு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி கடுமையாக கூறியுள்ளார்.
 
கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. ஜாமீன் கோரிக்கை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவின்போது மிகக் கடுமையாக கனிமொழி உள்ளிட்டோர் குறித்து கருத்து தெரிவித்தார் நீதிபதி ஷைனி.
 
நீதிபதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்ட வாசகங்கள்:
 
- குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார். எம்.பியாக இருக்கிறார்.
 
- அவர் ஒரு பெண் என்றும்,அவர் கஷ்டப்படுகிறார் என்றும் கூறுவது கற்பனையாகும்.
 
- வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளுக்கு பாதுகாப்பு உணர்வும், பயமின்மையும் இருக்க வேண்டும். அதற்குகுற்றம் சாட்டப்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கப்பட வேண்டியது முக்கியமாகும்.
 
- குற்றம் சாட்டப்பட்டவர்களின் முக்கிய நோக்கமே, பொதுமக்களின் பணத்தை எடுத்து தங்களது சுய லாபத்திற்குப் பயன்படுத்துவதாகவே இருந்துள்ளது. அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை கிடையாது.
 
- வழக்கின் உண்மை நிலவரம், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சிறந்த நீதியை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
 
- இவர்களுக்கு ஜாமீன் தர சிபிஐ ஆட்சேபனை கூறவில்லை. அதற்காக ஜாமீன் தர வேண்டும் என்று அர்த்தமோ, கட்டாயமோ இல்லை.
 
- குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீதான குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை, தீவிரமானவை. நாட்டின் பொருளாதாரத்தில் இவர்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
 
- இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எந்தவித சலுகையும், பரிவும் காட்ட வேண்டியதில்லை. எந்தவிதமான அனுதாபத்திற்கும் இவர்கள் தகுதியவற்றவர்கள் ஆவர். மிகவும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இவர்கள் தங்களது குற்றங்களைச் செய்துள்ளனர்.
 
- பெருமளவில் மக்கள் பணத்தை சூறையாடி விட்டு, சிறைக்குப் போய் சில காலம் இருந்து விட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்து விடலாம் என்ற நினைப்பில் ஜாமீன் கோருபவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இவர்களைப் போல மேலும் பலர் பெருமளவில் கிளம்ப காரணமாகி விடும். எனவே இதுபோன்ற ஒயிட்காலர் குற்றங்களைச் செய்வோருக்கு ஜாமீன் தரவே கூடாது என்பதே நீதிமன்றத்தின் கருத்தாகும். அதுதான் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய நினைப்போருக்கு சரியான பாடமாக இருக்கும் என்றார் நீதிபதி ஷைனி.



கனிமொழி ஜாமீன் நிராகரிப்பு

 


2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. கனிமொழி தெரிந்தே இந்த பொருளாதார குற்றத்தைச் செய்துள்ளார். இது மிகவும் கடுமையானது. மேலும் பொது நிதியை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியுள்ளார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

எந்தவித நிர்பந்தத்தின் அடிப்படையிலும் இந்த தீர்ப்பு அளிக்கப்படவில்லை. உண்மை மற்றும் வழக்கின் தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்டு மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காதது சட்டத்தின் பார்வையில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியமானவைதான். ஆனால் அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளும் மதிப்பு குறைந்தவர்கள் அல்ல என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
( நன்றி: தினமணி )

சில கேள்விகள்:
1. ஏன் ராஜா இது வரை ஜாமீம் மனுவை தாக்கல் செய்யவில்லை ?
2. கனிமொழி ஜாமீன் மனுவிற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காது என்று எப்படி பத்திரிக்கைக்கு முன்பே தெரிந்தது ? ஏன் அது லீக் செய்யப்பட்டது ?

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன் திமுக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தெரிகிறது.சில காங்கிரஸ் அமைச்சர்கள் இன்றோ நாளையோ கனிமொழியை ஜெயில் சந்தித்து நலம் விசாரிப்பார்கள் என்றும் தெரிகிறது.

Wednesday 2 November 2011

ஜெயலலிதா அரசால் மூடப்படும் கருணாநிதியால் கட்டப்பட்ட 2வது கட்டடம்!

 
 

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் பார்த்துப் பார்த்துக் கட்டடம் ஒன்றை வேறு உபயோகத்திற்காக முதல்வர் ஜெயலலிதா மாற்றுவது இது 2வது முறையாகும்.

கடந்த திமுகஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் எழுப்பப்பட்ட பிரமாண்ட கட்டடங்களில் புதிய தலைமைச் செயலகமும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் முக்கியமானவையாகும்.

இப்போது இந்த இரண்டையுமே வேறு உபயோகத்திற்காக தற்போதைய அரசு பயன்படுத்தப் போகிறது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலகத்தை மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து அந்த புதிய கட்டடத்தில், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு நிகரானதாக இந்த மருத்துவமனை இருக்கும் என்றும் அவர் அறிவித்தார். ரூ. 1092 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட கட்டடம், புதிய தலைமைச் செயலகம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, புதிய தலைமைச் செயலக கட்டடத்த அப்படியே கிடப்பில் போடாமல் மருத்துவமனை அமைக்கப் போவதாக சொல்லியிருப்பதுகுறித்து மகிழ்ச்சிதான் என்றார்.

இந்த நிலையில் தற்போது கருணாநிதியால் பார்த்துப் பார்த்துக்கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படவுள்ளது. இதையும் மருத்துவமனையாக்கப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது சிறார்களுக்கான உயர் மருத்துவமனையாக மாறவுள்ளது.

உருவாகப் போகிறது போட்டி பாமக.. திக் திக்கில் ராமதாஸ்!

 
 
 
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பாமக முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஒன்றிணைந்து போட்டி பாமகவை உருவாக்க முயன்று வருவதாகத் தெரிகிறது.
 
பாமகவின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும், பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவுமான வேல்முருகனை சமீபத்தில் கட்சியை விட்டு நீக்கினார் அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
 
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவரை நீக்க பாமக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
வேல்முருகனை பாமகவிலிருந்து நீக்கியது பாமகவினர் மத்தியில் மட்டுமல்லாமல், பிற கட்சியினர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந் நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் கூறுகையில், நான் 15 வயதிலேயே வன்னியர் சங்கத்தில் சேர்ந்தேன். இயக்க நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டேன். எனது கடின உழைப்பால் நான் படிப்படியாக முன்னேறினேன். நான் கட்சி விரோத செயலில் ஈடுபடவில்லை. என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமலேயே நீக்கி விட்டனர். தற்போது இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார்.
 
இதற்கிடையே வேல்முருகன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கட்சியின் கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டி சாய்த்தனர்.
 
கடலூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட பாமக அலுவலகம் முன் இருந்த ராமதாசின் கட்அவுட்டை உடைத்து ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். பின்னர் கட்சி அலுவலகத்தையும் கைப்பற்றினர்.
 
அதே போல பண்ருட்டியிலும் வேல்முருகனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கன் குப்பம் மெயின் ரோடு, காடாம்புலியூர் முத்தாண்டிக்குப்பம், கீழ்க்குப்பம், கீழ்மாம்பட்டு, மருங்கூர், காட்டாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கட்சியின் கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
 
நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள வேப்பங்குறிச்சி பஸ் நிலையம், ஜெயப்பிரியா பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பாமக கொடிகளையும் அவர்கள் அகற்றினர்.
 
நெய்வேலியில் உள்ள பாமக தொழிற்சங்க அலுவலகமும் சூறையாடப்பட்டது. சங்கப் பெயர் பலகை உடைத்து எறியப்பட்டது.
 
நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிற்சங்கத்தில் 3,000 தொழிலாளர்கள் உள்ளனர். வேல்முருகன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் சங்கத்தை கூண்டோடு கலைத்து விட்டதாகக் கூறி பாமக தொழிற்சங்க பேரவைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
 
அதே போல கடலூர் கிழக்கு மாவட்ட பாமக தலைவர் இரா.கோதண்டபானி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் நீக்கப்பட்டதை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாமக கூண்டோடு கலைக்கப்படுகிறது. பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு ராஜினாமா செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
 
இந் நிலையில் ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் காவேரி, காமராஜ், தானாகவே விலகிவிட்ட நெடுஞ்செழியன், வேல்முருகன் மற்றும் பாமக தலைமை மீது ஏகக் கடுப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலர் இணைந்து போட்டி பாமகவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
வேல்முருகனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏக்களான திருக்கச்சூர் ஆறுமுகம், எதிரொலி மணியன், வேலுச்சாமி, பவானி ராமநாதன், செந்தமிழ்செல்வன் ஆகியோர் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதையறிந்துள்ள அவர்களும் அதிருப்தியாளர்களுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.



அதிமுக, திமுகவுக்கு அடுத்த இடத்தில் தேமுதிக இருக்கிறது-விஜயகாந்த்

 
 
 
2009 லோக்சபா தேர்தலில் பெற்றதை விட கூடுதல் வாக்குகளை உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வாங்கியுள்ளது. அதிமுக, திமுகவுக்கு அடுத்த இடத்தில் தேமுதிக உள்ளது என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
சமீ்பத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக மாநில அளவில் 3வது இடத்தைப் பிடித்தது. இத்தேர்தலில் 8 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சித் தலைவர்கள், 120 நகராட்சிக் கவுன்சிலர்கள், 3 பேரூராட்சித் தலைவர்கள், 390 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 5 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 339 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என 867 இடங்களை வென்றது இக்கட்சி.
 
வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் விஜயகாந்த் தலைமை வகித்து பல்வேறு அறிவுரைகளை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்.
 
அப்போது விஜயகாந்த் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வைத்து தேமுதிக படுதோல்வி அடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், 2009 மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட அதிக அளவு வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். அதிமுக, திமுகவுக்கு அடுத்த இடத்தில் தேமுதிக உள்ளது. மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றார்.