Followers

Wednesday 2 November 2011

உருவாகப் போகிறது போட்டி பாமக.. திக் திக்கில் ராமதாஸ்!

 
 
 
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பாமக முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஒன்றிணைந்து போட்டி பாமகவை உருவாக்க முயன்று வருவதாகத் தெரிகிறது.
 
பாமகவின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும், பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவுமான வேல்முருகனை சமீபத்தில் கட்சியை விட்டு நீக்கினார் அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
 
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவரை நீக்க பாமக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
வேல்முருகனை பாமகவிலிருந்து நீக்கியது பாமகவினர் மத்தியில் மட்டுமல்லாமல், பிற கட்சியினர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந் நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் கூறுகையில், நான் 15 வயதிலேயே வன்னியர் சங்கத்தில் சேர்ந்தேன். இயக்க நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டேன். எனது கடின உழைப்பால் நான் படிப்படியாக முன்னேறினேன். நான் கட்சி விரோத செயலில் ஈடுபடவில்லை. என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமலேயே நீக்கி விட்டனர். தற்போது இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார்.
 
இதற்கிடையே வேல்முருகன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கட்சியின் கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டி சாய்த்தனர்.
 
கடலூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட பாமக அலுவலகம் முன் இருந்த ராமதாசின் கட்அவுட்டை உடைத்து ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். பின்னர் கட்சி அலுவலகத்தையும் கைப்பற்றினர்.
 
அதே போல பண்ருட்டியிலும் வேல்முருகனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கன் குப்பம் மெயின் ரோடு, காடாம்புலியூர் முத்தாண்டிக்குப்பம், கீழ்க்குப்பம், கீழ்மாம்பட்டு, மருங்கூர், காட்டாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கட்சியின் கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
 
நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள வேப்பங்குறிச்சி பஸ் நிலையம், ஜெயப்பிரியா பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பாமக கொடிகளையும் அவர்கள் அகற்றினர்.
 
நெய்வேலியில் உள்ள பாமக தொழிற்சங்க அலுவலகமும் சூறையாடப்பட்டது. சங்கப் பெயர் பலகை உடைத்து எறியப்பட்டது.
 
நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிற்சங்கத்தில் 3,000 தொழிலாளர்கள் உள்ளனர். வேல்முருகன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் சங்கத்தை கூண்டோடு கலைத்து விட்டதாகக் கூறி பாமக தொழிற்சங்க பேரவைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
 
அதே போல கடலூர் கிழக்கு மாவட்ட பாமக தலைவர் இரா.கோதண்டபானி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் நீக்கப்பட்டதை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாமக கூண்டோடு கலைக்கப்படுகிறது. பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு ராஜினாமா செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
 
இந் நிலையில் ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் காவேரி, காமராஜ், தானாகவே விலகிவிட்ட நெடுஞ்செழியன், வேல்முருகன் மற்றும் பாமக தலைமை மீது ஏகக் கடுப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலர் இணைந்து போட்டி பாமகவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
வேல்முருகனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏக்களான திருக்கச்சூர் ஆறுமுகம், எதிரொலி மணியன், வேலுச்சாமி, பவானி ராமநாதன், செந்தமிழ்செல்வன் ஆகியோர் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதையறிந்துள்ள அவர்களும் அதிருப்தியாளர்களுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.



No comments:

Post a Comment