Followers

Saturday, 17 March 2012

சங்கரன்கோவில்: ம.தி.மு.க., பா.ஜனதா உள்பட 5 வேட்பாளர்களுக்கு ஓட்டு இல்லை

 
 
 
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகிறார்கள்.
 
அவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி, தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 8 வேட்பாளர்களுக்கு சங்கரன் கோவில் தொகுதியில் ஓட்டு உள்ளது.
 
ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார், பா.ஜ.க. வேட்பாளர் முருகன், சமாஜ்வாடி கட்சி சார்பில் சயேட்சையாக போட்டியிடும் நாகேஸ்வரராவ், காந்திய சிந்தனையாளர் மன்றம் சார்பில் போட்டியிடும் ஆறுமுகம், இந்திய ஜனநாயக குடியரசு கட்சி கணேசன் ஆகிய 5 வேட்பாளர்களுக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் ஓட்டு இல்லை.
 
ஆகையால் அவர்கள் 5 பேரைத்தவிர மற்ற 8 வேட்பாளர்களும் இன்று ஓட்டு போட்டனர்.



என்னை சீண்டினால் பல உண்மைகளை வெளியிடுவேன்: விஜயகாந்த்

 
 
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்து, பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
 
அப்போது அவர், ''அண்ணா நூலகத்திற்கு தீக்குளிப்பதாக கூறும் கருணாநிதி, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்.
 
 
ஓட்டுக்காக இங்கு வந்து நடித்து சென்றுள்ளார். ஜெ., முன்னால், 'ஆமாம்' போட என்னால் முடியாது.
 
32 அமைச்சர்கள் தேர்தல் பணிக்கு வந்த போதே, என் வேட்பாளர் ஜெயித்துவிட்டார். தொண்டர் யாரும் மனம் தளர வேண்டாம். அ.தி.மு.க., கூட்டணியில் எனக்கு விருப்பமில்லை. சேலத்தில் தொண்டர்கள் கூறியதால், ஒப்புக்கொண்டேன்.
 
நான் பேரம் பேசியதாக அவர்களால் கூறமுடியுமா? சட்டசபையில், 10 நாட்கள் தானே "சஸ்பென்ட்' செய்துள்ளார்கள். அதன் பின் நிச்சயம் வருவேன்.
 
நீங்கள் தவறு என நினைக்கும் அதே தவறை, மீண்டும் செய்வேன். என்னுடைய தலைவர் எம்.ஜி.ஆர்.,ன் கட்சி என்பதால், இத்தனை நாள் அமைதி காத்தேன்.
 
என்னை சீண்டினால், பல உண்மைகளை வெளியிடுவேன். நானும் சினிமாவில் இருந்தவன் என்பதால்! தேர்தல் பணிக்கு அனுப்பியது போல, கடலூர் தானே புயலுக்கு, அமைச்சர் படையை அனுப்பியிருக்கலாமே'' என்றார்.



கருப்பசாமி தாய் -தந்தையுடன் வைகோ, விஜயகாந்த் : அதிமுக டென்ஷன்

 
 
 
சங்கரன்கோவில் முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினருக்கு சீட் தரப்படவில்லை என்பதில் உறவினர்களிடையே வருத்தம் இருந்தது. சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு கருப்பசாமியின் கிராமமான புளியம்பட்டிக்கு வைகோ சென்றிருந்தார்.
 
 
அப்போது அவர், கருப்பசாமியின் தந்தை சொக்கனை சந்தித்து வாழ்த்து பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
எனவே மறுதினமே கருப்பசாமியின் குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா சென் னைக்கு வரவழைத்து சந்தித்தார்.கருப்பசாமியின் மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கினார்.
 
இந்நிலையில் நேற்று புளியம்பட்டிக்கு சென்ற விஜயகாந்த், கருப்பசாமியின் தாயார் லட்சுமியை சந்தித்து நலம் விசாரித்தார். சில போட்டோக்களையும் எடுத்துக்கொண்டார்.
 
 
வைகோவை தொடர்ந்து விஜயகாந்தும் புளியம்பட்டிக்கு சென்று அளவளாவிய சம்பவம் அ.தி.மு.க.,வினரிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தங்கள் பாட்டியை காணவில்லை என கூறி தே.மு.தி.க.,வினர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
 
 

 


பணம் குடுத்தாதான் ஓட்டுப்போடுவோம்! - சங்கரன்கோவில் பெண் வாக்களாளர்கள்

 
 
 
ஓட்டுக்கு பணம் வழங்க கோரி அதிமுக தேர்தல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டதால் சங்கரன்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
 
பணம் கொடுக்காவிட்டால் அதிமுகவிற்கு ஓட்டுபோடமாட்டோம் என்று அவர்கள் கூறியதால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
 
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை ஓட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கடந்த சில நாட்களாக ஜாரூராக நடந்து வருகிறது. குறிப்பாக பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வார்டில் 1700 வாக்காளர்கள் உள்ள நிலையில் 3 பேருக்கு மட்டுமே பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்ததால் அந்த வார்டு பொறுப்பில் உள்ள அதிமுக உயர் மட்ட நிர்வாகிகளும், அப்பகுதி கட்சியினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
 
வியாழக்கிழமை இரவு முதல் நகர் பகுதி முழுவதும் வார்டு வார்டாக அப்பகுதியில் பொறுப்பில் உள்ள அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக எதிர்கட்சியினர் கூறினர்.
 
ஓட்டுபோட மாட்டோம்
 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவேங்கடம் ரோட்டில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டனர். அங்கு முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லாத நிலையில் அங்கிருந்த அதிமுகவினரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
எங்களுக்கு ஒரு ஓட்டுடக்கு கூட பணம் வழங்கவில்லை. எங்கள் பகுதிக்கு பணம் கொடுக்காவிட்டால் அதிமுகவுக்கு யாரையும் வாக்களிக்க விடமாட்டோம் என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தி.மு.க. செயலாளரையே கடத்திய திமுக ரித்தீஷ் எம்.பி.யை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

 
 
 
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிரவன். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் போல நடித்து ஒரு கும்பல் கடத்தி சென்ற விவகாரத்தில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
 
கடத்தல் கும்பல் திண்டுக்கல் லாட்ஜில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசை தாக்க முயன்ற கேரளாவை சேர்ந்த சினோஜ் சுட்டு கொல்லப்பட்டார். வரிச்சியூர் செல்வம், அஜித், வர்கீஸ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தி.மு.க. செயலாளர் கதிரவன் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் ராமநாதபுரம் தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஏற்கனவே ரித்தீஷ் எம்.பி.யிடம் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் விசாரணை நடத்தினார்.
 
மீண்டும் விசாரணை நடத்த அவரை அழைத்தபோது ரித்தீஷ் எம்.பி. தலைமறை வாகிவிட்டார். எனவே ரித்தீஷ் எம்.பி.யை பிடிக்க மதுரை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள். நேற்று ரித்தீஷ் எம்.பி. சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மணக்குடியில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் சேதுபதி நகரில் உள்ள அவரது தந்தை குழந்தைவேலு மற்றும் சிவகங்கை மாவட்டம் குமாரகுறிச்சியில் உள்ள உதவியாளர் நாகராஜன் வீடு உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
 
அப்போது ரித்தீஷ் எம்.பி.யின் இருப்பிடம் குறித்தும் அவர்கள் விசாரித்தனர். ரித்தீஷ் எம்.பி. கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்று தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
 
இதையடுத்து மதுரை சிலைமான் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். இதனிடையே முன்ஜாமீன் கேட்டு ரித்தீஷ் எம்.பி. மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் (வயது35) என்பவரையும் இந்த கடத்தல் வழக்கில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
 
செந்தில் நேற்று மாலை மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதின் பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



நான் ரெடி - நீங்க ரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால் !

 
 
 
முதல்வர் ஜெயலலிதா தயவில் வெற்றி பெற்றுவிட்டு தற்போது அவரை குறித்து குறை கூறும் விஜயகாந்த் ராஜினாமா செய்ய தயாரா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.
 
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது,
 
தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை அறிந்து, தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்.
 
இந்தியாவிற்கே பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக அரசு தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிக்காமல் இருந்ததே காரணம்.
 
இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார். அதனால் மின் தட்டுப்பாடு விரைவில் சரியாகும். அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு, முதல்வர் ஜெயலலிதா குறை கூறும் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்ய வேண்டும். நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன்.
 
இருவரும் ரிஷிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். போட்டிக்கு நான் தயார்? விஜயகாந்த் தயாரா? என்றார்.



Friday, 16 March 2012

ராஜினாமா செய்ய நான் ரெடி - நீங்க ரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால் !

 
முதல்வர் ஜெயலலிதா தயவில் வெற்றி பெற்றுவிட்டு தற்போது அவரை குறித்து குறை கூறும் விஜயகாந்த் ராஜினாமா செய்ய தயாரா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.
 
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது,
 
தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை அறிந்து, தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்.
 
இந்தியாவிற்கே பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக அரசு தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிக்காமல் இருந்ததே காரணம்.
 
இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார். அதனால் மின் தட்டுப்பாடு விரைவில் சரியாகும். அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு, முதல்வர் ஜெயலலிதா குறை கூறும் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்ய வேண்டும். நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன்.
 
இருவரும் ரிஷிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். போட்டிக்கு நான் தயார்? விஜயகாந்த் தயாரா? என்றார்.

ஓட்டுக்கு பணம்: அதிமுக நிர்வாகிகளை கட்டி வைத்து தாக்குதல்

 
 
 
ஓட்டுக்கு பணம் வழங்கிய அதிமுக நிர்வாகிகள் 9 பேரை அப்பகுதி பொதுமக்களும், மதிமுகவினரும் கட்டி வைத்து தாக்கியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பிரசாரம் நேற்று முடிந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு தலா ஸீ1000 வீதம் பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் வந்தன.
 
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். இதையறிந்த மதிமுகவினர் மற்றும் அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க சென்றனர். அவர்கள் காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், கார் கண்ணாடி மீது அப்பகுதி மக்கள் கல்வீசி மடக்கிப்பிடித்தனர். காரின் கதவை திறந்து ஓட முயன்ற அதிமுகவினர் 9 பேரை பிடித்து கட்டி வைத்து தாக்கினர்.
 
தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து அதிமுகவினர் 9 பேரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர்கள், சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (45), காஞ்சிபுரத்தை சேர்ந்த கதிர்வேல் (50), வேல்அரசு (45), சோமசுந்தரம், தசரதன், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சிவகுமார், செந்தில்நாதன் (40), சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் (36), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்ருதீன் என்பது தெரியவந்தது.
 
இவர்கள் தவிர அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய திருத்தங்கல் நகர அதிமுக செயலாளர் சரவணகுமார், இளைஞரணி செயலாளர் பாலமுருகன், சென்னையை சேர்ந்த கண்ணன், பாட்ஷா ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
பெண்கள் ஆவேசம்: இதற்கிடையே, வைகோவை கைது செய்ய போலீசார் வந்ததாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து அவரது வீடு முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அப்போது அங்கு திரண்ட பெண்கள் ஆவேசத்துடன், 'ஓட்டுப் போடச் சொல்லி பணம் கொடுத்தவர்களை பணத்தோடு பிடித்து போலீசிடம் ஒப்படைத்தோம். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மதிமுகவினரை கைது செய்ய அலைகின்றனர்.
 
வைகோவை கைது செய்தால் நாங்கள் தீக்குளிப்போம்' என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வைகோவின் வீட்டை விட்டு வெளியேறினர். தலைமை தேர்தல் ஆணையருக்கு வைகோ நேற்று எழுதிய கடிதம்:
 
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பணி செய்ய அதிமுக அமைச்சர்கள் 32 பேர் முகாமிட்டுள்ளனர். தேர்தல் விதிகளை மீறி அரசு சாதனங்களை பயன்படுத்துகின்றனர். 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்த போது ஆயிரக்கணக்கான அதிமுகவினர் வாகனங்களில் தொகுதியில் வலம் வந்தனர். 15ம் தேதி மதியத்துக்கு மேல் அதிமுக அமைச்சர்கள் தொகுதிக்குள் சென்று, வாக்காளர்களுக்கு தலா ரூ.1000 கொடுத்துள்ளனர்.
 
இது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகும். இதை தடுக்க தேர்தல் பார்வையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் 18ம் தேதி நடக்கும் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்காது. அதனால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
 
'என்னை கைது செய்யுங்கள்'
 
ஓட்டுக்கு பணம் வழங்கிய அதிமுகவினரை தாக்கிய மதிமுகவினரை விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக ஏஎஸ்பி மகேஷ், ஏடிஎஸ்பி மகேந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது வைகோ, அவர்களை கைது செய்து தேர்தல் பணியை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றுகிறீர்கள். நேற்று இரவே பணப்பட்டுவாடா செய்தபோது எஸ்பியிடம் தெரிவித்தோம். அப்படி ஒன்றும் இல்லை என எஸ்பியே பதில் கூறினார். இந்த தேர்தலை முடக்க திட்டமிட்டால் முதலில் என்னை கைது செய்யுங்கள் என்றார்.



"அண்ணா நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்'' - கருணாநிதி ஆவேசம்

 
 
 
"அண்ணா நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்" என்று ஆவேசமாக பேசினார் திமுக தலைவர் கருணாநிதி.
 
சங்கரன்கோவில் தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து சங்கரன்கோவில் வடக்கு ரதவீதி, மேற்கு ரதவீதி சந்திக்கும் இடத்தில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.
 
கூட்டத்துக்கு மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.
 
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேச்சு:
 
சங்ரன்கோவில் இடைத் தேர்தல் பொதுக் கூட்டம் போல் அல்லாமல், ஒரு பிரசார மாநாடு நடைபெறுவது போன்று இந்த பொதுக்கூட்டம் அமைந்து இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு வந்து மேடையில் ஏறிய போது எனது எண்ணம் எல்லாம், ஏற்கனவே இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி மறைந்துவிட்ட தோழர் கருப்பசாமியை பற்றித்தான் நினைத்திருந்தது. அவருக்கு இந்த பொதுக்கூட்டத்திலே எனது இறுதி மரியாதையை, இறுதி அஞ்சலியை உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சட்டமன்றத்தில் அவர் வேடிக்கையாகவும், விளையாட்டகவும், சில நேரங்களில் வேதனையாகவும் நடந்து கொண்டதை நான் பொருட்படுத்தியது இல்லை.
 
இந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்து இருக்கிறது. ஒருவர் மறைந்து அந்த இடத்தை நிரப்புவதற்காக வந்த தேர்தல் இது. இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள், யார் இருந்தார், யார் மறைந்துவிட்டார் என்பதையும், இப்போது யார் வரவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
 
அண்ணா... திராவிட...
 
தி.மு.க. ஆட்சி திராவிட கொள்கைகளின் ஆட்சி. ஜெயலலிதா தலைமையில் இருக்கக் கூடியது அண்ணா தி.மு.க. ஆட்சி. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதில், 'அண்ணா' என்பது இயக்கத்தின் பெயர். 'திராவிட' என்பது வைத்துக் கொண்ட பெயர். அதை வைத்துக் கொண்டு தமிழகத்தில் என்னென்ன கூத்துகள் நடைபெறுகின்றன என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள், சாதாரண மக்கள், சாமானிய மக்கள், கல்வி வாசனையே அறியாத மக்கள் மற்றும் படிப்பது கூடாது என்று தடுக்கப்பட்ட மக்கள், அவர்களை எல்லாம் வாழ வைக்க திராவிடர் இயக்கம் உருவாகியது. அதை உருவாக்கி வளர்த்த பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் இப்போது இல்லை.
 
ஆனால் நாம் இருக்கிறோம. எவ்வளவு நாட்கள் இருப்போம் என்பது தெரியாது. எவ்வளவு காலத்துக்கு இருப்போமோ அதுவரை திராவிடர் என்ற பெருமையை நிலைநாட்டும் கடைமையை நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்து இங்கே விளக்கிக் கொண்டிருக்கிறோம்.
 
சுந்தரனாரும் விவேகானந்தரும்...
 
திராவிட என்று சொல்ல உச்சரிக்கும் போது அதில் ஈர்க்கப்படுகிறவர்கள் உள்ளார்கள். அந்த சொல்லால் ஈர்க்கப்படுகிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.
 
இந்த மாவட்டத்தை சேர்ந்த, இதே மாவட்டத்தில் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார், விவேகானந்தரை சந்தித்தார். விவேகானந்தரிடம் பேசிய போது அவர், "உங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன. உங்கள் கருத்துக்களை எல்லாம் சிந்திக்கிற வாய்ப்பை நான் பெறுகிறேன். அதே நேரத்தில் நான் திராவிடர் என்ற உரிமையை விட்டுத்தர எப்போதும் முடியாது," என்று சொன்னவர்தான் சுந்தரம்பிள்ளை. அப்படிப்பட்ட எடுத்துக்காட்டாக விளங்குகிற சொல் திராவிடம். அதை முதலாவதாகக் கொண்டு இயங்குகிற கழகம்தான் தி.மு.க.
 
உண்மையான உணர்வோடு திராவிட என்ற சொல்லை பயன்படுத்தி, இன வரலாற்றை இளைய சமுதாயத்துக்கு உணர்த்தும் இயக்கம் தி.மு.க. அப்படிப்பட்ட தி.மு.க. நடத்தும் இந்த பிரசார பொதுக் கூட்டத்தில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்கிறோம்.
 
'எடை' போடும் தேர்தல்
 
இது இடைத்தேர்தல் என்று சொல்லப்படுகிறது. உண்மைதான். இந்த இடைத்தேர்தல். ஒருவர் மறைந்துவிட்டதால் நடத்தப்படுகிற தேர்தல் என்று சொல்லலாம். தற்போது நடைபெறுகிற ஆட்சியை, 9 மாத காலம் நடைபெற்ற ஆட்சியை எடை (இடை) போடுகிற தேர்தல் என்றும் சொல்லலாம்.
 
1980-ம் ஆண்டு சங்கரன்கோவிலுக்கு வந்தேன். அப்போது விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 20 ஆயிரம் பேர் அந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். நாராயணசாமி நாயுடு, அவரது தளபதிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரை அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்து சிறையில் போட்டார்கள். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் இறந்தார்கள். அதை கண்டித்து போராட்டம் நடத்தியதுதான் தி.மு.க.தான். அதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
 
7 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து செய்தோம். விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம். பயிர் கடனை தள்ளுபடி செய்தோம். தாட்கோ கடனை தள்ளுபடி செய்தோம். உழவர் சந்தைகள் அமைத்தோம்.
 
ரூ.319 கோடி செலவில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினோம். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் அந்த திட்டத்துக்காக எத்தனை முறை இங்கே வந்தார் என்பது உங்களுக்கே தெரியும்.
 
சமச்சீர் கல்வி பட்டபாடு
 
இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் என்னென்ன செய்தார் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக சமச்சீர் கல்வி திட்டத்தை சமாதிக்கு அனுப்ப முயற்சி செய்தார். உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பெற்ற தீர்ப்புதான், தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது. நாம் உச்சநீதி மன்றத்துக்கு செல்லாமல் இருந்து இருந்தால் இன்று சமச்சீர் கல்வி என்பதே இல்லாமல் போயிருக்கும். உயிர் சாதிக்கு கல்வியும், அடிமட்ட சாதிக்க படிப்பறிவே கிடையாது, வாய்ப்பு குறைவு என்ற சூழ்நிலைதான் வாய்த்திருக்கும்.
 
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை இடித்து, துவைத்து, தரைமட்டமாக்கி, அதில் இருந்த ஆயிரக்கணக்கான புத்தகத்தை எல்லாம் குப்பைக் கிடங்குக்கு அனுப்பி பாரதிதாசன் புகழுக்கே களங்கத்தை ஏற்படுத்திய அரசுதான், ஜெயலலிதா அரசு. தமிழை உயிராக மதித்த பாரதிதாசன், தேவநேயபாவாணர், பாரதியார் படங்களை அகற்றினார்கள்.
 
ஒரு ஆட்சி மாறி, அல்லது மக்களால் மாற்றப்பட்டு இன்னொரு ஆட்சி வருவது இயற்கை. அப்படி வருகிற போது ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்கள், முதலில் இருந்த ஆட்சியில் இருந்தவர்களை மதிக்க வேண்டும்.
 
வெள்ளையர் படங்களை ஏன் அகற்றினோம் என்றால் அவர்களால் நாம் அடிமைப்பட்டோம் என்பதால் அகற்றினோம். புரட்சிக் கவிஞர் என்ன செய்தார்? புரட்சிக் கவிஞர் புத்தகங்களை எல்லாம் குப்பைக்கிடக்குக்கு ஏன் அனுப்ப வேண்டும்? இது நியாயம்தானா?
 
தீக்குளிப்பேன்...
 
சென்னையில் அண்ணாவின் பெயரால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நூலகத்தை, ஆசியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் கட்டப்பட்ட நூலகத்தை, வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் பாராட்டி புகழ்ந்த நூலகம் அது.
 
அண்ணாவின் புகழை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டினோம். ஆனால் அதை இடித்துவிட்டு மருத்துவமனையாக்க போகிறேன் என்று ஜெயலலிதா கூறுகிறார். அண்ணா பெயரால் கட்சி வைத்துக் கொள்ள உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
 
மருத்துவமனை கூடாது என்று சொல்பவன் நான் அல்ல. வேண்டும் என்றே அண்ணா பெயரால் நாங்கள் அமைத்த நூலகத்தை அகற்றிவிட்டு அங்கே ஆஸ்பத்திரி கட்டுவோம் என்றால், அது யாருக்கு ஆஸ்பத்திரி? மனநோயாளிகளுக்கா?
 
இன்றைக்கு சொல்லி வைக்கிறேன். தியாகிகளுக்கு, போராட்டக்காரர்களுக்கு, புகழ் சேர்த்துக் கொடுத்த நெல்லைச் சீமையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா அடம்பிடிப்பாரேயானால், அந்த நாள் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.
 
தம்பி, தம்பி என்று பாராட்டி எங்களை எல்லாம் ஆளாக்க அண்ணா அரும்பாடுபட்டார். அவர் பெயரால் உருவான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நாங்கள் அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா ஆணையிடுகிறார் என்றால் நாங்கள் மேற்சொன்னதைவிட என்ன சொல்லிவிட முடியும்?
 
அண்ணா தான் எங்களுக்கு ஆசிரியர். அவரை உருவாக்கியவர் தந்தை பெரியார். எக்காரணம் கொண்டும் திராவிட குறிக்கோளில் இருந்த இடம் மாறிவிட மாட்டோம்.
 
இந்த தொகுதியில் இருக்கும் ஆடவர்களே, பெண்டீர்களே, ஆசிரிய பெருமக்களே, மாணவச் செல்வங்களே, விவசாய பெருங்குடி மக்களே, நெசவாள தோழர்களே, நீங்கள் எல்லாம் தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமாருக்கு, உங்கள் மேலான வாக்குகளை உதய சூரியன் சின்னத்திலே அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்," என்றார் கருணாநிதி.
 
பங்கேற்றவர்கள்
 
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்திருமாவளவன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், வல்லரசு பார்வர்டு பிளாக் நிர்வாகி அமாவாசை, இந்திய தேசிய லீக் பஷீர் அகமது, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் ஆகியோர் பேசினர்.
 
கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கவேலு, ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சற்குணபாண்டியன், பொன்முத்துராமலிங்கம், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Wednesday, 14 March 2012

மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவோம் – திமுக எச்சரிக்கை

 

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கா விட்டால், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகப் போவதாக திமுக எச்சரித்துள்ளது.ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.கருணாநிதி,

" இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா வெளியிட்ட அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் பதிலளித்துள்ளனர்.எமது கேள்விக்கு மத்திய அரசு இன்னமும் சரியாகப் பதிலளிக்கவில்லை.

இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் தமிழர்களுக்கு மத்திய அரசு இழைத்த துரோகமாகவே கருதப்படும்.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், அமைச்சரவையில் இருந்து விலகுவது குறித்து முடிவெடுக்கப்படும்." என்றார்.

மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வீர்களா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மு.கருணாநிதி, அதுபற்றி தான் தனியாக முடிவெடுக்க முடியாது என்றும் மத்திய குழுவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்களான நெப்போலியன், பழனிமாணிக்கம், மு.க.அழகிரி, காந்திசெல்வன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் வார இறுதியில் மு.கருணாநிதியை சந்தித்து தமது பதவிவிலகல் கடிதங்களை முன்கூட்டியே அவரிடம் கையளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.