சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கா விட்டால், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகப் போவதாக திமுக எச்சரித்துள்ளது.ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.கருணாநிதி,
" இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா வெளியிட்ட அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் பதிலளித்துள்ளனர்.எமது கேள்விக்கு மத்திய அரசு இன்னமும் சரியாகப் பதிலளிக்கவில்லை.
இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் தமிழர்களுக்கு மத்திய அரசு இழைத்த துரோகமாகவே கருதப்படும்.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், அமைச்சரவையில் இருந்து விலகுவது குறித்து முடிவெடுக்கப்படும்." என்றார்.
மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வீர்களா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மு.கருணாநிதி, அதுபற்றி தான் தனியாக முடிவெடுக்க முடியாது என்றும் மத்திய குழுவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்களான நெப்போலியன், பழனிமாணிக்கம், மு.க.அழகிரி, காந்திசெல்வன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் வார இறுதியில் மு.கருணாநிதியை சந்தித்து தமது பதவிவிலகல் கடிதங்களை முன்கூட்டியே அவரிடம் கையளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment