முதல்வர் ஜெயலலிதா தயவில் வெற்றி பெற்றுவிட்டு தற்போது அவரை குறித்து குறை கூறும் விஜயகாந்த் ராஜினாமா செய்ய தயாரா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது,
தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை அறிந்து, தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்.
இந்தியாவிற்கே பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக அரசு தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிக்காமல் இருந்ததே காரணம்.
இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார். அதனால் மின் தட்டுப்பாடு விரைவில் சரியாகும். அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு, முதல்வர் ஜெயலலிதா குறை கூறும் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்ய வேண்டும். நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன்.
இருவரும் ரிஷிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். போட்டிக்கு நான் தயார்? விஜயகாந்த் தயாரா? என்றார்.
No comments:
Post a Comment