ஓட்டுக்கு பணம் வழங்கிய அதிமுக நிர்வாகிகள் 9 பேரை அப்பகுதி பொதுமக்களும், மதிமுகவினரும் கட்டி வைத்து தாக்கியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பிரசாரம் நேற்று முடிந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு தலா ஸீ1000 வீதம் பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் வந்தன.
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். இதையறிந்த மதிமுகவினர் மற்றும் அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க சென்றனர். அவர்கள் காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், கார் கண்ணாடி மீது அப்பகுதி மக்கள் கல்வீசி மடக்கிப்பிடித்தனர். காரின் கதவை திறந்து ஓட முயன்ற அதிமுகவினர் 9 பேரை பிடித்து கட்டி வைத்து தாக்கினர்.
தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து அதிமுகவினர் 9 பேரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர்கள், சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (45), காஞ்சிபுரத்தை சேர்ந்த கதிர்வேல் (50), வேல்அரசு (45), சோமசுந்தரம், தசரதன், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சிவகுமார், செந்தில்நாதன் (40), சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் (36), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்ருதீன் என்பது தெரியவந்தது.
இவர்கள் தவிர அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய திருத்தங்கல் நகர அதிமுக செயலாளர் சரவணகுமார், இளைஞரணி செயலாளர் பாலமுருகன், சென்னையை சேர்ந்த கண்ணன், பாட்ஷா ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் ஆவேசம்: இதற்கிடையே, வைகோவை கைது செய்ய போலீசார் வந்ததாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து அவரது வீடு முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அப்போது அங்கு திரண்ட பெண்கள் ஆவேசத்துடன், 'ஓட்டுப் போடச் சொல்லி பணம் கொடுத்தவர்களை பணத்தோடு பிடித்து போலீசிடம் ஒப்படைத்தோம். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மதிமுகவினரை கைது செய்ய அலைகின்றனர்.
வைகோவை கைது செய்தால் நாங்கள் தீக்குளிப்போம்' என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வைகோவின் வீட்டை விட்டு வெளியேறினர். தலைமை தேர்தல் ஆணையருக்கு வைகோ நேற்று எழுதிய கடிதம்:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பணி செய்ய அதிமுக அமைச்சர்கள் 32 பேர் முகாமிட்டுள்ளனர். தேர்தல் விதிகளை மீறி அரசு சாதனங்களை பயன்படுத்துகின்றனர். 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்த போது ஆயிரக்கணக்கான அதிமுகவினர் வாகனங்களில் தொகுதியில் வலம் வந்தனர். 15ம் தேதி மதியத்துக்கு மேல் அதிமுக அமைச்சர்கள் தொகுதிக்குள் சென்று, வாக்காளர்களுக்கு தலா ரூ.1000 கொடுத்துள்ளனர்.
இது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகும். இதை தடுக்க தேர்தல் பார்வையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் 18ம் தேதி நடக்கும் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்காது. அதனால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
'என்னை கைது செய்யுங்கள்'
ஓட்டுக்கு பணம் வழங்கிய அதிமுகவினரை தாக்கிய மதிமுகவினரை விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக ஏஎஸ்பி மகேஷ், ஏடிஎஸ்பி மகேந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது வைகோ, அவர்களை கைது செய்து தேர்தல் பணியை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றுகிறீர்கள். நேற்று இரவே பணப்பட்டுவாடா செய்தபோது எஸ்பியிடம் தெரிவித்தோம். அப்படி ஒன்றும் இல்லை என எஸ்பியே பதில் கூறினார். இந்த தேர்தலை முடக்க திட்டமிட்டால் முதலில் என்னை கைது செய்யுங்கள் என்றார்.
No comments:
Post a Comment