தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியையும் அவர் சந்தித்து பேசினார். 4 நாட்கள் டெல்லியில் இருந்த கருணாநிதி நேற்று மதியம் 1 மணி அளவில் சென்னை திரும்பினார். பின்னர் மாலையில் நிருபர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- கனிமொழி எப்படி இருக்கிறார்?
பதில்:- உடல் இளைத்திருந்தாலும் உறுதியாக இருக்கிறார்.
கேள்வி:- கனிமொழி ஜாமீன் தள்ளிப் போவதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக கருதுகிறீர்களா?
பதில்:- பின்னணி இல்லாமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை. அது அரசியல் பின்னணியா? அல்லவா? என்பது எனக்கு தெரியாது.
கேள்வி:- சோனியா காந்தியிடம் கனிமொழி ஜாமீன் பற்றி பேசினீர்களா?
பதில்:- கனிமொழி சிறையில் எப்படி இருக்கிறார்? சவுக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டார். அதைத் தவிர வேறு எந்த பேச்சுவார்த்தையும் அதைப்பற்றி கிடையாது.
கேள்வி:- சோனியா காந்தியிடம் வேறு என்ன பேசினீர்கள்?
பதில்:- அவருக்கு உடல் நலமில்லை என்ற செய்தியறிந்த போதே அவருக்கு கடிதம் எழுதினேன். பிறகு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்ட போதும் விரைவில் குணமடைய விழைவு தெரிவித்து தந்தி அனுப்பி இருந்தேன். சென்ற முறை டெல்லி சென்றபோது அவர் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை கேள்வியுற்று சென்று பார்ப்பதை தவிர்த்தேன். இப்போது உடல் நலம் பெற்றிருக்கிறார் என்பதையறிந்து நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தேன். வாழ்த்துக்களை சொன்னதோடு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
கேள்வி:- கனிமொழிக்கு ஜாமீன் வழங்காதது குறித்து தந்தை என்ற முறையில் எந்தவிதமான கவலையை அளிக்கிறது?
பதில்:- தந்தை என்பதை விட்டுவிடுங்கள். ஒரு மனிதன் என்ற முறையிலே கூட இதில் உள்ள நியாயம், அநியாயங்களை நான் பகுத்தறிந்து அதற்கான உணர்வுகளை பெற வேண்டியவனாக இருக்கிறேன். இந்த முறை ஜாமீன் மறுக்கப்பட்டதாக சொல்ல முடியாது. ஜாமீன் கொடுக்கலாம் என்று சி.பி.ஐ. நீதிமன்றத்திலே வெளிப்படையாக சொல்லி இருக்கிறது. தீபாவளி விடுமுறையினால் அதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை என்றும் 3-ந் தேதி அன்று அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி சொல்லியிருக்கிறார்.
கேள்வி:- நவம்பர் 3-ந் தேதி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.
பதில்:- நல்லவற்றையே நினைப்போம்.
கேள்வி:- பிரதமரிடம் என்ன பேசினீர்கள், கூடங்குளம் பிரச்சினை பற்றி பேசினீர்களா?
பதில்:- கூடங்குளம் பிரச்சினையில் அங்கே வாழ்கிற மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அந்த திட்டத்தை நிறைவேற்ற உறுதிபட பாடுபட வேண்டும் என்பதை பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதையும் ஆதாரங்களோடு பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன். இவற்றோடு தூக்கு தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக்கொண்டிருப்பதால் இதுவரையில் அனுபவித்து வந்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த போதும் குறிப்பிட்டு கேட்டிருக்கிறோம். இப்போதுள்ள அரசும் கேட்டுக் கொண்டிருக்கிறது. நாங்களும் அதை வழிமொழிந்து கேட்டுக் கொள்கிறோம் என்பதை பிரதமரிடம் விளக்கி கூறியிருக்கிறேன்.
கேள்வி:- பிரதமர் முன்பு 2 மத்திய மந்திரி பதவிகள் தி.மு.க.விற்காக காலியாக இருக்கிறது என்று கூறியிருந்தாரே அதுபற்றி பேசினீர்களா?
பதில்:- அதைப்பற்றி அவரும் பேசவில்லை, நானும் கோரிக்கை வைக்கவில்லை.
கேள்வி:- அந்த இடத்தை எப்போது நிரப்ப போகிறீர்கள்?
பதில்:- நிரப்பும் போது உங்களுக்கு தெரியும்.
கேள்வி:- உள்ளாட்சி தேர்தல் முடிந்த சூழ்நிலையில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கிறது?
பதில்:- இந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுவது என்று ஆலோசித்து அவ்வாறே போட்டியிட்டது. சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மற்ற கட்சிகளோடு உடன்பாடு கொள்வதற்கும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுகிற நோக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை ஏற்கனவே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சி பெற்ற வாக்குகளை சதவிகித கணக்கில் பார்த்தால் அ.தி.மு.க. - 39.02, தி.மு.க. - 26.09, தே.மு.தி.க. - 10.11, காங்கிரஸ் - 5.71. 2011 மே சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளோடு கூட்டணி வைத்து பெற்ற வாக்குகள் 82,49,991. பதிவான வாக்குகளில் இது 22.30 சதவீதம். இப்போது உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு 26.09 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.
கேள்வி:- ஓட்டு சதவீதம் அதிகரிக்க கூட்டணி இல்லை என்பது தான் காரணமா?
பதில்:- அதைக் காரணமாக சொல்ல முடியாது.
கேள்வி:- வாக்குகள் அதிகம் கிடைத்ததற்கு காரணம் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குகளா?
பதில்:- கடந்த 4, 5 மாத காலத்திற்குள் இந்த காரணங்களை எல்லாம் அறுதியிட்டு உறுதியாக கூற முடியாது.
கேள்வி:- காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருக்கிறார். தி.மு.க.வும் அப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்துமா?
பதில்:- இதுபற்றி எல்லாம் காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்களிடம் கலந்து கொண்டு தான் நான் எதுவும் சொல்ல முடியும். உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டை பொறுத்தவரை செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடு. ஆனால் அத்தகைய ஏற்பாடு மாற்றப்பட வேண்டும் என்று என்னிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பேசவும் இல்லை. அதற்கான அறிவிப்பை செய்யவும் இல்லை.
கேள்வி:- மத்திய அரசு மாற்றாந்தாய் மனத்தோடு மாநில அரசை பார்ப்பதாக முதல்-அமைச்சர் கூறியிருக்கிறாரே?
பதில்:- மாநில சுயாட்சியின் மையக் கருத்து மத்திய அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தக் கூடாது என்பது தான். இதை நாங்கள் சொல்லும்போது இதற்கு ஆயிரம் வியாக்யானங்கள், கிண்டல்கள், கேலிகள் செய்தவர்கள் இப்போது அவர்களே போய் ஒரு அவையிலே சொல்லியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.