2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி எம்.பி. கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டன.
கனிமொழி அடுத்தக் கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, அந்த கோர்ட்டிலேயே ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் கனிமொழி மீது சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு தொடுத்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 409-வது பிரிவின் கீழ் நம்பிக்கைத் துரோக வழக்கு அவர் மீது தொடரப்பட்டது. நேற்று முன்தினம் இந்த புதிய பிரிவு வழக்கை சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேர் மீது நம்பிக்கைத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது.
குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதால் இன்று (திங்கட்கிழமை) கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஷாகித் பல்வாவின் சகோதரர் ஆசிப்பல்வா, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி, குசேகான் ரியா லிட்டி நிறுவனத்தை சேர்ந்த ராஜீவ் அகர்வால், ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரது ஜாமீன் மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சி.பி.¢ஐ. கோர்ட்டுக்கு நாளை (செவ்வாய்) முதல் வெள்ளிக்கிழமை வரை தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்றே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனிமொழி எம்.பி.யின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது சி.பி.ஐ. வக்கீல்கள் தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படமாட்டாது. எனவே கனிமொழி எம்.பி. விடுதலை ஆவதில் எந்த சிக்கலும் இருக்காது. 43 வயதாகும் கனிமொழி எம்.பி. கடந்த 156 நாட்களாக திகார் ஜெயிலில் உள்ளார். ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு அவரை ஜாமீனில் விடு விக்கலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 437 செக்சன் 6ல் கூறப்பட்டுள்ளது. இதன்படி கனிமொழி விடுதலை ஆகிறார்.
2ஜி வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரி மனு செய்த கனிமொழி தனது மனுவில், நான் ஒரு பெண், எனக்கு பள்ளிக்கூடம் செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஜாமீனில் விடுதலை செய்தால், எந்த சாட்சிகளையும் கலைக்க மாட்டேன் என்று ஏற்கனவே அவர் உறுதிமொழி அளித்துள்ளார்.
எனவே இவற்றின் அடிப்படையிலும் கனிமொழி விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அவரது விடுதலையை எதிர்நோக்கி தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லியில் தங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சென்ற அவருடன் அவரது துணைவியார் ராசாத்தி அம்மாள், கனிமொழியின் மகன் ஆதித்யா ஆகியோரும் சென்றுள்ளனர்.
கனிமொழி விடுதலை ஆனதும், அவரை தங்களுடன் சென்னை அழைத்து வர கருணாநிதி திட்டமிட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந் தேதி தொடங்குகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் விசாரணை நடக்கும் என்பதால் இந்த வழக்கு விசாரணை பல மாதங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment