அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து 6 மாதம் கழித்தே பேசுவேன் என்று கூறி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று சென்னையில் தனது கட்சியினருடன் மேற்கொள்ள உண்ணாவிரதப் போராட்டத்தின்போது அதிமுக அரசை விமர்சித்துப் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் முறையாக கூட்டணி அரசியலுக்குள் புகுந்து முதல் கூட்டணியாக அதிமுகவிடம் போய்ச் சேர்ந்தார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே இரு கட்சிகளுக்கும் இடையே பூசல் வெடித்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு இரு கட்சிகளும் தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி கண்டன. இதில் அதிமுகவை விட தேமுதிகவுக்கே நிறைய லாபம் கிடைத்தது.
இதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியாக போட்டியிட ஆர்வமாக இரு்நதது தேமுதிக.ஆனால் ஜெயலலிதாவோ முகத்தில் அடி்ததாற் போல அத்தனை கூட்டணிக் கட்சிகளையும் (ஒன்றிரண்டு சிறிய கட்சிகளைத் தவிர்த்து) விரட்டி விட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக சிபிஎம்முடன் கூட்டணி வைத்து தேர்தல் சந்தித்து மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்துக்கு முன்னேறிய அக்கட்சி உள்ளாட்சித் தேர்தலில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இந்த நிலையில் இடையில் அதிமுகஅரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாள்கள் விஜயகாந்த்திடம் கருத்துக் கேட்டபோதெல்லாம் 6 மாதமாகட்டும் சொல்கிறேன் என்று கூறி வந்தார். மே 16ம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். தற்போது சட்டசபைத் தேர்தல் முடிந்தும், ஜெயலலிதா ஆட்சி அமைந்தும் 6 மாதமாகி விட்டது.
எனவே இனிமேலாவது அதிமுக அரசு குறித்து விஜயகாந்த் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கேற்ப தேமுதிக சார்பில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு இந்தப் போராட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு தொடங்கியது. அதேபோல மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.
இதுவரை பெரிய அளவில் எந்தப் போராட்டத்திலும் தேமுதிக ஈடுபட்டதில்லை. இப்போதுதான் முதல் முறையாக மிகப் பெரிய அளவில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அது நடத்துகிறது. இன்று அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்தும் விஜயகாந்த் சூடாகப் பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.