Followers

Monday, 21 November 2011

ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது, சீண்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: விஜயகாந்த்

 
 
 
ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது. எங்களைச் சீண்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாகத் தெரிவித்தார்.
 
மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
 
ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள். பால், பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறினார். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதிக்கியுள்ளது என்பதை மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் பட்டியலிட்டுருப்பதை பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டேன். ஜி.கே. வாசன் கூறியுள்ளதை நானும் கூறினால் விஜயகாந்த் காங்கிரஸ் பக்கம் போகிறான் என்று கதை கட்டிவிடுவார்கள். இதைச் சொல்வதால் நான் காங்கிரஸை ஆதரிப்பவன் என்று அர்த்தம் இல்லை.
 
ஜி.கே. வாசன் தெரிவித்திருப்பது போல் மத்திய அரசு மாநிலத்திற்காக சிறப்பு நிதி ஒதுக்கும். அதை திறமையாகப் பயன்படுத்த வேண்டியது மாநில அரசின் கையில் உள்ளது.
 
மாற்றம் வேண்டி அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு அது வெறும் ஏமாற்றத்தைத் தான் அளித்துள்ளது. இதை மக்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
 
குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்கள் தற்போது கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். விலையை ஏற்றுபவர்கள் அதை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்திருக்க வேண்டியது தானே. திமுக அரசு செய்த தவறுகளையே அதிமுக அரசும் செய்கிறது. அண்மையில் நடந்து முடிந்த அதிமுகவினர் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது ஊருக்கே தெரியும்.
 
நான் சட்டசபை பக்கம் வரவில்லை என்கிறார்கள். எனக்கு உடல்நலம் பாதி்ககப்பட்டுள்ளதால் தான் செல்லவில்லை. சரி, ஜெயலலிதாவும், கருணாநிதியும் எதிர்கட்சித் தலைவர்களாக இருக்கையில் எத்தனை நாட்கள் சட்டசபைக்கு வந்தார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தெரியும்.
 
பால், பஸ் கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு அரசு அனுமதி மறுக்கலாம். இவ்வளவு ஏன் மதுரையில் ஒரு பேனர் வைக்க காவல்துறை அனுமதி மறுக்கிறது. பேனர் எல்லாம் வைக்கக் கூடாது என்கிறார் கமிஷனர்.
 
கடந்த ஆட்சியில் எப்படி காவல்துறை பாராபட்சமாக இருந்ததோ தற்போதும் அப்படியேத் தான் உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ கலெக்டர்கள் மாநாடு நடத்தி கலெக்டர்களுக்கு பரிசு கொடுத்து பாராபட்சத்தை தூண்டி விடுகிறார்கள். மதுரையில் அனைவருக்கும் வேண்டாதவர் என்று பெயரெடுத்த கலெக்டர் சகாயம் தற்போது ஆளுங்கட்சிக்கு சகாயம் செய்து சகாயமாகிவிட்டார்.
 
கமிஷனர் கண்ணப்பனும் மாறிவிட்டார். பேனர் வைப்பதை தடுப்பதால் எல்லாம் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி புகழை யாராலும் அழிக்க முடியவில்லை. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள் என்றார்.



No comments:

Post a Comment