Followers

Saturday, 24 December 2011

அதிமுக ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அபிராமி ராமநாதன் - எக்ஸிபிட்டர்ஸ் சங்கம் குற்றச்சாட்டு

 
 
 
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தற்போது இரவுக் காட்சிப்பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் குறைந்துவிட்டதாகவும், மேலும் இரவுக் காட்சிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு கருதியும், திரையரங்குகளில் இரவுக்காட்சிகளை ரத்துசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அபிராமி திரையரங்கத்தின் உரிமையாளர் அபிராமி ராமநாதன், தெரிவித்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
 
இந்த தகவலை மறுத்திருக்கும் தமிழ்நாடு எக்ஸிபிட்டர்ஸ் சங்கத்தினர், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
 
அந்த அறிக்கையில், "தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போது காலை 10 மணியிலிருந்து இரவு 1 மணிக்குள் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்று நமது சங்கம் தமிழக அரசை கோரி வருகின்றது. இதன் மூலம் ஒரே நாளில் ஒரே திரையரங்குகளில் இரண்டு படங்களை திரையிட்டு ரிலீசாகாமல் தேங்கிக் கிடக்கும் பல சிறிய திரைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நமது சங்கம் செயல்பட்டு வருகின்றது.
 
இந்த நிலையில் நமது சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட அபிராமி ராமநாதன், தமிழகத்தில் இரவுக் காட்சிகல் ரத்து என்ற தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி ஒரு தேவையில்லாத அச்ச உணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்.
 
அவருடைய அபிராமி திரையரங்கில் கூட்டம் குறைந்து விட்டபடியாலும், நமது சங்கத்திலிருந்து அவரை நீக்கி விட்டதாலும் நமது உறுப்பினர்களுக்கு ஏதாவது கெடுதல் செய்தே ஆக வேண்டும் என்று ஒரு தவறான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
மேலும் அந்த அறிக்கையில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் தங்கத் தாரகை மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் அம்மா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்கள் கவனத்தை திசைத் திருப்பி இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதன் மூலம் கடந்த ஆட்சிக்கு தன்னுடைய விசுவாசத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார். ஐ.டி. செக்டாரில் பணிபுரியும் பல பெண்கள் நள்ளிரவில் கூட நல்ல பாதுகாப்போடுதான் சென்று வருகின்றார்கள் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.
 
தமிழகத்தில் எந்த திரையரங்குகளில் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ராமநாதன் அவர்கள் உடனே விளக்க வேண்டும். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதை ஒரே நாளில் 362 ரவுடிகள் கைது செய்யப்பட்டதன் மூலம் நாடே அறியும்.
 
எனவே அவருடைய அறிக்கை முற்றிலும் தவறானது. உள்நோக்கம் கொண்டது. மக்களை திசைத் திருப்புவது அரசுக்கு எதிரானது என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதோடு, தமிழகத்தில் அனைத்துத் திரையரங்குகளிலும் இரவுக் காட்சிகள் வழக்கம் போல செயல்படும் என்பதனை இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



திருநெல்வேலிக்கே அல்வா: சுப்பிரமணிய சாமிக்கு கைது வாரண்டு

 
 
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக வி.என்.நாராயணன் என்பவர் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கடந்த 1986-ம் ஆண்டு சுப்பிரமணிய சாமி தலைவராக இருந்த ஒரு கம்பெனியில், 3 ஆண்டு டெபாசிட் திட்டத்தில், ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ததாகவும், ஆனால் அப்பணத்தை சுப்பிரமணியசாமி திருப்பித்தரவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.
 
இதை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் பத்மினி சதீஷ், ரூ.10 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பி தருமாறு சுப்பிரமணிய சாமிக்கு ஏற்கனவே உத்தரவிட்டார்.
 
ஆனால், பணத்தை சுப்பிரமணிய சாமி தரவில்லை என்று நாராயணன் மீண்டும் புகார் கூறினார். இதனால், சுப்பிரமணிய சாமிக்கு எதிராக ஜாமீனில் விடக்கூடிய கைது வாரண்டை நுகர்வோர் ஆணையம் பிறப்பித்துள்ளது. அவரை கைது செய்து, ஏப்ரல் 2-ந் தேதிக்கு முன்பு, நுகர்வோர் ஆணையத்தில் ஆஜர்படுத்துமாறு டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.



ஜெ.வை வீழ்த்த விஜயகாந்த்துடன் கை கோர்க்குமா சசி குரூப்?

 
 
 
 
 
 
ஜெயலலலிதாவால் விரட்டப்பட்டுள்ள சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை வீழ்த்த அவரது இன்னொரு எதிரியான விஜயகாந்த்துடன் கை கோர்க்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
 
அதிமுகவிலிருந்தும், ஜெயலலிதாவின் மதிப்பு வட்டத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டுள்ள சசிகலா தரப்பு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்தடுத்த விசாரணையின்போது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல் ஒன்று கிசுகிசுக்கப்படுகிறது. சசிகலா தரப்பு, ஜெயலலிதாவை வீழ்த்த விஜயகாந்த்துடன் அணி சேரலாம் என்பதுதான் அந்த கிசுகிசு.
 
அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த்தைக் கூட்டி வந்தவர்களில் முக்கியமான பங்கு சசிகலா தரப்புக்கும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். பத்திரிக்கையாளர் சோ உள்ளிட்டோர்தான் இந்த கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டனர் என்றாலும் கூட தொகுதிப் பங்கீடு, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சசிகலா தரப்புதான் முதலில் விஜயகாந்த் தரப்புடன் பேசியது.
 
எனவே அந்த நட்பின் அடிப்பையில் வரும் காலத்தில் விஜயகாந்த்துடன் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சசிகலா தரப்பு இணைந்து செயல்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதேசமயம், நடராஜன், திமுகவுடன் தனக்குள்ள ரகசிய உறவைப் பயன்படுத்தி அந்தக் கட்சிக்கும் உதவிக் கரம் நீட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும், ஜெயலலிதாவுக்கு எதிராக சிதறிக் கிடக்கும் பல்வேறு சக்திகளைத் திரட்டவும் அவர் முயலலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேபோல முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த தங்களை கூண்டோடு ஜெயலலிதா நீக்கியுள்ளதன் மூலம் முற்பட்ட வகுப்புக்குச் சாதகமாக ஜெயலலிதா நடப்பதாக அந்த சமுதாயத்தினர் மத்தியில் குறிப்பாக காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களில் உள்ள தங்களது சமுதாயத்தினர் மத்தியில் கருத்தைரப் பரப்ப அவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோருடன் கை கோர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது.
 
இதனால் நடராஜனின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
ஆனால் ஜாதியை வைத்து நடராஜன் தரப்பு பிரசாரத்தில் இறங்கினால் அதை ஜெயலலிதா எளிதாக சமாளித்து விடுவார் என்று ஜெயலலிதா விசுவாசிகள் கூறுகிறார்கள். காரணம், முக்குலத்தோருக்கு அரசியல்ரீதியாக பெரும் அங்கீகாரம் கொடுத்து பல உயர் பதவிகளையும், அமைச்சர் பதவிகளையும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்., அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாதான் என்பது அந்த சமுதாயத்தினருக்கு நன்கு தெரியும். மேலும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் பதவியிலும் ஜெயலலிதா அமர்த்தியதை அச்சமுதாயத்தினர் இன்னும் மறக்கவில்லை. எனவே ஜாதி ரீதியாக நடராஜன் தரப்பு கிளம்பினால் அது தோல்வியிலேயே முடியும் என்கிறார்கள் அவர்கள்.
 
தற்போதைய நிலையில் சசிகலா தரப்பு, ஜெயலலிதாவுக்கு எதிராக ஏவப் போகும் அஸ்திரம் என்ன என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் காத்திருக்கிறது.



ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்

 

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை இடமாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1. அம்ரேஷ் பூரி (கோவை நகர ஐஜி) - சென்னை புலனாய்வு ஐஜி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. பி.தாமரைக்கண்ணன் ( சென்னை புலனாய்வு ஐஜி) - விரிவாக்கப்பட்ட சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. சஞ்சய் அரோரா (விரிவாக்கப்பட்ட சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்) - விரிவாக்கப்பட்ட சென்னையின் போக்குவரத்து ஐஜி/கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

4. டி.பி.சுந்தரமூர்த்தி ( சென்னை, ஐஜி எஷ்டாபிளிஷ்மெண்ட்) - கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்லார்.

5. டி.ராஜேந்திரன் (சென்னை தொழில்சேவை கூடுதல் காவல் இயக்குனர்) - சென்னை, மனித உரிமை ஆணைய கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6. கே.பி. மஹேந்திரன் (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கூடுதல் இயக்குநர்) - தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனராகப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளார்.

7. மிதிலேஷ் குமார் ஜா (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனர்) - சென்னை தொழில் சேவை கூடுதல் காவல் இயக்குனராகப் பதவி மாற்றப்பட்டுள்ளார்.

8. ஆர்.சேகர் ( சிபிசிஐடி கூடுதல் இயக்குனர்) - புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரயில்வே கூடுதல் காவல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

9. டி.கே.ராஜேந்திரன் (கூடுதல் காவல் இயக்குனர், நிர்வாகம்) - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. நரேந்தர் பால் சிங் ( சென்னை ஆயுதப்படை கூடுதல் காவல் இயக்குனர்)- சிஐடி குற்றப் பிரிவு கூடுதல் காவல் இயக்குனராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ளார்.

Thursday, 22 December 2011

திமுக ஆட்சியில் முதல்வர் முதல் மேயர் வரை மக்களுக்கு துரோகம்: சைதை துரைசாமி

 
 
 
மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் ஆகியோர் வீடுகள் உள்ள கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை பகுதியில் இருந்த கால்வாய் தூர்த்து வாரப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்ட முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் முதல் மேயர் வரை மக்களுக்கு துரோகம் செய்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
 
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் கந்தன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் ஆகியோர் வீடுகள் கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் இருந்த கால்வாயை மூடி விட்டு 20 அடி சாலை 60 அடியாக அகலப்படுத்தப்படு பெரும் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? மூடப்பட்ட கால்வாய் அகலப்படுத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதில் அளித்த மேயர் சைதை துரைசாமி கூறியதாவது,
 
கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. திமுக அரசும், அப்போதைய மாநகராட்சி நிர்வாகமும் மக்களுக்கு எதிராக செயல்பட்டது தெரிய வந்தது.
 
கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் மேயர் வரை சட்டத்தை மீறி மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். இந்த சாலைப் பகுதியில் உள்ள கால்வாயில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் எம்.ஜி.ஆர். அரசும், அதற்குப் பிறகு ஜெயலலிதா அரசும் அந்த கால்வாயை செப்பனிட்டு கரைகளை பலப்படுத்தின. ஆனால் திமுக ஆட்சியிலே அந்த கால்வாயின் பெரும் பகுதியை தூர்த்துவிட்டு சாலையை அகலப்படுத்தியுள்ளனர்.
 
தனி நபர்கள் ஆதாயத்திற்காக இவ்வாறு செய்துள்ளனர். அந்த சாலையில் மொத்தமே 9 வீடுகள் தான். அதற்காக தனியாக பூங்கா அமைத்து விதியை மீறியுள்ளனர். இது குறித்து நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து மாநகராட்சி மன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார்.
 
பிறகு கேள்வி நேரத்தின்போது துணை மேயர் பெஞ்சமின், அதிமுக கவுன்சிலர்கள் தி.நகர் சத்யா, ஜெயந்தி, நூர்ஜகான், ஹேமமாலினி ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு மேயர் சைதை துரைசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
 
சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் சாலை வசதிகள், மழைநீர் வடிகால்வாய்கள், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்ய பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசாணை வெளியிடப்பட்டு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் மட்டும் சுமார் ரூ.220 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தும் பணிகள் துவங்கும்.
 
கோடம்பாக்கம் ஆற்காடு சாலை 130வது வட்டத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விருகம்பாக்கத்தில் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணி, அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் இருந்து கூவம் வரை தனியாக பக்க கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.32 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள் வரும் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும்.
 
மாநகராட்சிகளின் சில வார்டுகளில் குப்பைகளை அகற்ற நியமிக்கப்பட்ட நீல்மெட்டல் பனால்கா என்கிற தனியார் நிறுவனம் ஒழுங்காக செயல்படவில்லை. இதனால் அந்நிறுவனத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் வரும் 31ம் தேதி முடிகிறது.
 
அதற்குப் பதிலாக நியமிக்கப்படும் புதிய நிறுவனத்திடம் இந்த நிறுவனப் பணியார்களை சேர்த்துக்கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்யும் என்றார்.



நடைபாதையில் மேஜை-நாற்காலி அமைத்து மக்கள் பணியாற்றுவேன்: மு.க. ஸ்டாலின்

 
 
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எல்லைக்குள்ளாகவே பொதுமக்களின் குறைகளை கேட்டறிவதற்கும், அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை கேட்டு, அவற்றை களைவதற்கும் ஏதுவாக தலைவர் கலைஞர் 1996ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்களை கட்டித்தர உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் பெரும்பான்மையான தொகுதிகளில் அப்பணி நிறைவேற்றப்பட்டது.
 
அந்த வகையில், சென்னையில் ஏற்கனவே இருந்த 14 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகங்கள் சென்னை மாநகராட்சி சார்பிலும்-பொதுப்பணித்துறையின் சார்பிலும் அமைத்துத்தரப்பட்டுள்ளது. தொகுதிகளின் மறு சீரமைப்பு அடிப்படையில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சென்னை 16 சட்டமன்றத் தொகுதிகளாக உயர்ந்தது.
 
அதில் ஐந்து தொகுதிகளுக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகங்கள் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 2011 ஜூன் மாதத்தில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் மேற்சொன்ன ஐந்து சட்டமன்றத் தொகுதி அலுவலகங்கள் கட்டுவதற்கு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அதன் அடிப்படையில், கொளத்தூர் தொகுதியில் முதல் வட்டச் சாலை, ஜவஹர் நகர், கொளத்தூர் என்னும் இடத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு கட்டப்பட்டு, எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் இருந்த, பழைய கட்டிடம் ஒன்றினை சீர்ப்படுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தினர், தொகுதி அலுவலகமாக தற்போது எனக்கு வழங்கினார்கள்.
 
அன்று முதல் தொடர்ந்து, சென்னையில் நான் இருக்கும் சமயங்களில் எல்லாம், வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அலுவலகத்திற்குச் சென்று பொதுமக்களிடத்தில் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்து கொண்டு வருகிறேன். அதுமட்டுமல்லாமல், இரண்டு பேரை நிரந்தரமாய் அங்கே பணியில் அமர்த்தி, முழுநேரமும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உரிய துறைகளுக்கு அனுப்பி, தீர்வு காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
இதனை சகித்துக்கொள்ள முடியாத, அ.தி.மு.க. அரசு, அந்த அலுவலகத்தை ஒதுக்கீடு செய்தது தவறு என்றும், மீண்டும் மன்றக் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து முடிவெடுத்து அனுப்பும்படியும் அரசு செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அன்றைய மேயர் மா. சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.
 
அந்த வகையில், அன்றைய மேயர் தலைமையில் மன்றம் கூடி, அனைத்துக்கட்சித் தலைவர்கள் குறிப்பாக தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் மு.க. ஸ்டாலினுக்கு விதி முறைகளின்படிதான், நியாயமாக அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது.
 
மக்களுக்கு மிகச்சிறப்பாக சேவை ஆற்றிட பயன்படும் அந்த அலுவலகம், அங்கேயே தொடர்ந்திட வேண்டும் என உரையாற்றி, அந்த உரைகளின் குறிப்புகளெல்லாம், முறைப்படி அரசு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருசில குறுகிய கண்ணோட்டம் கொண்ட ஆளுங்கட்சியின ரின் தூண்டுதலின்பேரில், அ.தி.மு.க. அரசு அந்த அலுவலகத்தை காலி செய்ய தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
 
சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற வகையில் எனது தொகுதி மக்களுக்கு கடமையாற்றும் அந்த அலுவலகம் பறிக்கப்படுமேயானால், கொளத்தூர் மையப்பகுதியில் எங்கேயாவது ஒரு நடை பாதையின் நடுவே மேஜை- நாற்காலி போட்டுக் கொண்டு, என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு கடமையாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.



முல்லைப்பெரியாறு: தே.மு.தி.க. பேச்சாளர் தற்கொலை; விஜயகாந்துக்கு உருக்கமான கடிதம்

 
 
 
 
 
தேனி மாவட்டம் தீலையம்பட்டி பழைய பஸ் நிலையப்பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 30). தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளரான இவர் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர் தனக்கு ஒரு அறை எடுத்து தரும்படி கட்சியின் நகர செயலாளர் சங்கரிடம் போனில் தெரிவித்தார்.
 
அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் சென்று தங்கினார். பின்னர் நேற்று காலை சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு அறைக்கு திரும்பினார்.
 
இந்நிலையில் நேற்று இரவு நகர செயலாளர் சங்கருக்கு போனில் பேசிய சேகர், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் உடனே அறைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி சங்கர் அங்கு சென்று பார்த்தபோது சேகர் விஷம் குடித்து நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சேகர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு விஷபாட்டிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எழுதிய உருக்கமான கடிதங்களும் சிக்கின. அதில் ஒரு கடிதத்தில் மரியாதைக்குரிய கேப்டனுக்கு சேகர் வணக்கத்துடன் எழுதுவது,
 
முல்லைப்பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி கூறி வருகிறார். அவ்வாறு அணையை உடைத்தால் 5 மாவட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
 
நான் தற்கொலை செய்து கொள்ள விருத்தாசலத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால் இந்த தொகுதி மக்கள்தான் தே.மு.தி.க. வுக்கும், உங்களுக்கும் அங்கீகாரம் அளித்தது என்பதால்தான். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
 
இது குறித்து விருத்தாசலம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



ஜெ.வுக்கு எதிராக சசிகலா அப்ரூவராக மாறுவாரா?

 
 
 
முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ஜனவரி 18ம் தேதிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
 
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதா, சசிகலா, அவரது அண்ணி இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
 
சமீபத்தில் இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி நான்கு நாட்கள் வாக்குமூலம் அளித்தார். அப்போது இந்த சொத்துக்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவையெல்லாம் எனது பெயரைப் பயன்படுத்தி வாங்கப்பட்டவை. இவற்றுக்கும் எனக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. எனது வீட்டில் கைப்பற்றப்பட்ட செருப்பு உள்ளிட்ட அனைத்தும் நான் சினிமாப் படங்களில் நடித்தபோது பயன்படுத்தியவை. அதை சொத்தாக கருத முடியாது என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின.
 
இதையடுத்து சசிகலா விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவர் தனக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே நீதிபதி கேட்கவுள்ள கேள்விகளை முன்கூட்டியே தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தால் அதற்குப் பதிலளிக்க வசதியாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் தமிழிலேயே விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆனால் இந்த மனுவை நீதிபதி மல்லிகார்ஜூனய்யா நிராகரித்து விட்டார்.
 
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த பெஞ்ச், 6 வார கால இடைக்காலத் தடை விதித்தது.
 
இந்த நிலையில் நேற்று சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்காலத் தடை குறித்து சசிகலாவின் வக்கீல் வெங்கடேஸ்வரலு தெரிவித்தார். இதையடுத்து ஜனவரி 18ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
 
அடுத்து என்ன நடக்கும்?
 
சசிகலாவை தனது நட்பு வட்டத்திலிருந்து ஜெயலலிதா தூக்கி எறிந்து விட்டார். இந்த நிலையில், பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது.
 
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா தரப்பு அப்ரூவர்களாக மாறுவார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.



Wednesday, 21 December 2011

சசியின் அண்ணியை மட்டும் ஜெ. விட்டு வைத்தது ஏன்?

 
 
 
 
 
சசிகலா குடும்பத்தையே விரட்டி விட்ட முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரை மட்டும் விட்டு வைத்துள்ளார். அவர்கள் சசிகலாவின் அண்ணி இளவரசி மற்றும் இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் ஆகியோர்தான்.
 
ஜெயலலிதாவின் இந்த விதிவிலக்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதிலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறதாம்.
 
இளவரசிக்கும், சசிகலாவுக்கும் இடையே அவ்வளவாக நெருக்கம் இல்லையாம். அதாவது வழக்கமாக தமிழக குடும்பங்களில் காணப்படும் நாத்தனார் சண்டைதான்.
 
போயஸ்கார்டனில்தான் இளவரசி தொடர்ந்து வசித்து வருகிறார். இவரது பெயரில்தான் சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளதாம். இதுகுறித்து அவருக்கும் சசிகலாவுக்கும் இடையே அவ்வப்போது புகைச்சல் வெடிக்குமாம். மேலும் ஜெயலலிதா இளவரசி மீது தனிப் பிரியம் வைத்திருப்பாராம். இதும் கூட சசிக்குப் பிடிக்காதாம்.
 
சமீபத்தில் கூட பெங்களூர் கோர்ட்டுக்கு சசிகலாவும், இளவரசியும் போனபோது இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம். இத்தனைக்கும் இருவரும் ஒரேகாரில்தான் போனார்களாம். அதேசமயம், கோர்ட்டுக்கு வந்திருந்த சுதாகரனிடம் மட்டும் சசிகலா நன்றாகப் பேசினாராம்.
 
சசிகலாவை இளவரசிக்குப் பிடிக்காது என்ற ஒரே அம்சம் ஜெயலலிதாவுக்குப் பிடித்துப் போய் விட்டதாம். இதனால்தான் எதிரியின் எதிரியாயிற்றே என்ற ஒரே காரணத்திற்காக இளவரசியை தன்னுடனேயே வைத்துள்ளாராம். அதேபோல இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் மீதும் ஜெயலலிதா நல்ல மதிப்பு வைத்துள்ளார்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களில் பல முக்கிய கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் கலியபெருமாள் ஜெயலலிதாவுக்கு பெருமளவில் உதவியுள்ளாராம். இவருக்கு சசிகலாவைப் பிடிக்காதாம். சசிகலாவின் ஆதிக்கத்தையும் மீறி செயல்பட்டு வந்தவர் என்பதால் இவருக்கும் ஜெயலலிதாவிடமிருந்து விதி விலக்குக் கிடைத்துள்ளதாம்.
 
அதேபோல தினகரின் மனைவியான அனுராதா மீதும் இதுவரை நடவடிக்கை எதுவும் பாயவில்லை. இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவர் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை என்று தெரியவில்லை.



சசிகலா நீக்கம் எதிரொலி - சோவின் துக்ளக் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!!

 
 
 
 
 
அதிமுகவிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் சோ எஸ் ராமசாமியின் அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவைப் பிரித்து வெளியேற்றியதில் துக்ளக் ஆசிரியர் சோவின் பங்கு பெரிது என மீடியாவில் வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து சமீபத்தில் அவரிடம் நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பிய போதும், அதை மறுக்கவில்லை சோ. "என் பங்களிப்பு இருந்திருந்து, அது நல்லதென்றால் பாராட்டுங்கள். கெடுதல் என்றால் திட்டிக் கொள்ளுங்கள்," என்றே கூறியுள்ளார்.
 
சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது வேதா இல்லத்தில் சோவும் இருந்தார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
 
இதனால் சசிகலா ஆதரவாளர்கள் கோபம் முழுவதும் சோ மீது திரும்பியுள்ளதாகக் கருதப்படுகிறது.
 
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது சோவின் துக்ளக் அலுவலகம். கடந்த திமுக ஆட்சியில் இந்த அலுவலகம் எந்தப் பரபரப்புமின்றி அமைதியாகக் காணப்பட்டது. ஆட்கள் நடமாட்டம், போலீஸ் தலைகள் எதையும் அங்கே பார்க்க முடியாது.
 
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், சோவின் அலுவலகத்துக்கு விசேஷ அந்தஸ்து கிட்டியது. புதிதாக போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. இரண்டு காவலர்கள், ஒரு அதிகாரி என மிதமான பந்தோபஸ்து அளிக்கப்பட்டது.
 
முதல்வர் பதவியேற்பு விழா, முக்கிய நிகழ்ச்சிகளில் சோவும் உடன் இருந்தார். எனவே, ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது வந்து போகும் இடமாக சோ அலுவலகம் காட்சியளிக்கத் தொடங்கியது.
 
இப்போது சசியின் வெளியேற்றத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க சோவே இருப்பதாக கருதப்படுவதால், அவரது அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்த துக்ளக் ஆசிரியர் சோஅளித்த பதில்:
 
"போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதன் பின்னணி என்று ஒன்றுமில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு துக்ளக் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தார்கள். இப்போது ஓரிரு அதிகாரிகள் கூடுதலாக வருகிறார்கள் என்று நினைக்கிறேன். இதில் விசேஷமாக ஒன்றுமில்லையே!" என்றார்.



Tuesday, 20 December 2011

கார்டன் அதிரடிக்கு காரணம் குஜராத் சியெம் மோடியாம்...ஒரு பகீர் ரிப்போர்ட்.

 
 
 
 
 
சியெம்மின் அதிரடிக்கு காரணம், குஜராத் சியெம் மோடி என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக ஒலிக்க துவங்கியுள்ளது. நம்ம சியெம்முக்கு மருத்துவ உதவிக்காக மோடி அனுப்பிய நர்ஸ், கார்டன்ல நடக்கிற விஷயத்தை மோடி தரப்புக்கு கொண்டு போயிட்டாராம்... இதனால, சியெம்முக்கு மோடி அட்வைஸ் பண்ணினாராம்...
 
 
அதுல சுதாரிச்சுக்கிட்டவங்க, எல்லாருக்கும் கல்தா கொடுக்க, வாய்ப்பை எதிர்பார்த்திட்டு இருந்தாராம்... வாய்ப்பு கிடைச்சதுமே கழற்றி விட்டுட்டார்னு கார்டனுக்கு நெருக்கமானவங்க, பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்... சியெம்மோட அண்ணன் மகள்தான், இப்போ அவருக்கு உதவியா கார்டன்ல தங்கியிருக்காராம்.
 
இந்த நடவடிக்கையால, அரசு லாயர்ஸ் ஒரு பகுதியினர் ஆடிப்போயி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சசிகலா ரெகமண்ட்ல வந்தவங்களாம். உயிர் தோழி நீக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் சில வக்கீல்கள் ராஜினாமா செய்யற முடிவுக்குக் கூட வந்துட்டாங்களாம்... கலங்கிப் போனவங்க லிஸ்ட்ல சில அமைச்சர்களும், பல அரசு வக்கீல்களும்தான் முன்னணி இடத்துல இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
முதல்வர் ஜெயலலிதாவை சுத்தி இருந்த மன்னார்குடி கூட்டம் துரத்தப்பட்டதால் இனி அடிக்கடி எந்த மாற்றமும் நடக்காது என்று கட்சிக்காரங்க நம்புறாங்களாம்...' 'கட்சி வேலைகளை ஒழுங்கா செய்யலாம்... காங்கிரீட்டான நம்பிக்கையில பொறுப்பை வகிக்கலாம்'னு முக்கிய நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாம்... இந்த அதிரடி நீக்கத்தால ரொம்ப சந்தோசமானது சியெம் குடும்பம்தானாம்...
 
அப்படி என்றால் தோழி ஆட்சி போயி இன்னும் ஜெ.யின் குடும்ப ஆட்சி ஆரம்பமாக போகுதோ...! இன்னும் தமிழக மக்கள் இதுவரை தெரியாத முதல்வர் ஜெயலலிதாவின் பல உறவுகளை, சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம்...!! என்ன தவம் செய்தாயோ தமிழா...!!! நீ விலக நினைத்தாலும் உறவுகள்...சொந்தங்கள்...(குடும்ப ஆட்சி) உன்னை விலக மறுக்கிறதே...!!!!