Followers

Tuesday 20 December 2011

சசி விட்ட கேப்பில் உள்ளே நுழைய பார்க்கும் சுப்ரமணியசாமி

 
 
மன்னார்குடி மாபியா கும்பலான சசி மற்றும் அவரது குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா விரட்டியடித்திருப்பது வரவேற்புக்குரியது. அவர் தொடர்ந்து இதேபோல புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் எதிர்காலத்தில் எனது முழு ஆதரவும் அவருக்குக் கிடைக்கும் என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.
 
ஒரு காலத்தில் அதிமுக மகளிர் அணியினரால் சென்னை உயர்நீதிமன்றத்தால் 'சிறப்பான' வரவேற்பு அளிக்கப்பட்டவர் சாமி. அந்த காட்சி அந்த சமயத்தில் அங்கு கூடியிருந்த வக்கீல்கள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் மனதிலிருந்து இன்னும் மறையவில்லை. அதன் பிறகு சுப்பிரமணியசாமியும், ஜெயலலிதாவும் பெரும் விரோதிகளாகி விட்டனர். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா மீது பல வழக்குகள் பாய திமுக ஆட்சி காரணமாக இருந்தாலும் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டதே நம்ம சாமிதான்.
 
இந்த நிலையில் சசிகலா நீக்கத்தை வரவேற்றுள்ளார் சாமி. மேலும் இதேபோல தொடர்ந்து ஜெயலலிதா ஒழுங்காக நடந்து கொண்டால் தனது முழு ஆதரவும் எதிர்காலத்தில் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து சாமி கருத்து தெரிவிக்கையில், சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் அதிமுகவிலிருந்து நீக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் முடிவை நான் வரவேற்கிறேன். அவர்கள் மன்னார்குடி மாபியாக்கள்.
 
இது உள்கட்சிப் பிரச்சினையாக இருந்தாலும் கூட, பொதுமக்கள் நலனும் இதில் அடங்கியுள்ளது. இப்போது நல்லாட்சியை, ஊழல் அற்ற ஆட்சியைத் தரும் அருமையான சந்தர்ப்பம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது. அவருடைய புத்திசாலித்தனமான ஆட்சியால், இந்த மாநிலத்திற்கு நிறைய நல்லது நடக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
இதேபோல ஜெயலலிதா தொடர்ந்து நடந்தால் எதிர்காலத்தில் எனது முழு ஆதரவும் அவருக்கே என்று கூறியுள்ளார் சாமி.



No comments:

Post a Comment