கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள் என சோனியா காந்திக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா, கூடங்குளம்- முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்த விளக்கக் கூட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மத்திய அமைச்சர்கல் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுனர்.
கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியது.
அவர் பேசுகையில், "இங்கே பேசிய தலைவர்கள் முல்லைப்பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினைகள் குறித்து பல்வேறு கண்ணோட்டத்துடன் பேசினார்கள்.
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது வரை எந்த பிரச்சினையும் இல்லை. 1967-ம் ஆண்டுக்கு பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சி நடந்தபோதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினை உருவாகி 146 அடியில் இருந்து 136 அடியாக நீர்மட்டத்தை குறைத்தனர்.
எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதுதான் இப்படி குறைக்கப்பட்டது. எனவே முல்லைப் பெரியாறு விஷயம் பிரச்சினை ஆனதற்கு திராவிட கட்சிகள்தான் காரணம். அது 3 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம், 4,5 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம். அதில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் மொத்தத்தில் இன்று கேரள அரசுக்கு இளிச்சவாயராக நாம் காட்சி அளிக்கிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
அங்கு ஆட்சி நடத்தும் அரசாங்கம்தான் பிரச்சினையை உருவாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேட்க மறுக்கிறார்கள். எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
மத்திய அரசுக்கும் கேரளா அரசு பணியாது. எனவே கேரள அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். 'டிஸ்மிஸ்' செய்வது நமக்கு புதிதல்ல. கேரளாவுக்கும் புதிதல்ல. மேடையில் இருக்கிற மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசனுக்கு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்க விரும்பவில்லை.
தமிழ்நாட்டுக்கு கேரளா கேடு விளைவிக்கும்போது உம்மன்சாண்டியை அங்கே முதல்வராக உட்கார வைக்க கூடாது. டெல்லிக்கு வா என்று அழைத்துக் கொள்ள வேண்டும்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து அல்ல. இதை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற இதை சோனியா காந்தி செய்தே தீர வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் தமிழக மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள். ஒவ்வொரு கட்சியும் இதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கூடங்குளம் பிரச்சினை தானாக உருவான பிரச்சினை அல்ல. சிலரால் உருவாக்கப்பட்ட பிரச்சினை. எனவே இந்த பிரச்சினையை காங்கிரஸ் கையில் எடுத்து மக்களுக்கு விளக்க வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment