எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று சசிகலா நீக்கப்பட்டபோது சித்தாந்தமாக பேசி சிலாகித்துப் போன அதிமுகவினர் இப்போது எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டதே என்று திகிலடித்துப் போய் நிற்கின்றனராம்.
காரணம், சசிகலாவின் மறு வருகை.. இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், பின்னர் சேர்ந்து கொள்வார்கள், இது என்ன புதுசா என்றுதான் 4 மாதத்திற்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு அதிமுகவை விட்டும் போயஸ் கார்டன் வீட்டை விட்டும் ஜெயலலிதா தூக்கியபோது அனைவருமே நினைத்தார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவின் செயல்பாட்டு வேகத்தைப் பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும், பரவாயில்லையே உண்மையிலேயே சசிகலாவை துரத்தி விட்டு விட்டாரே என்றுதான் நினைத்தனர்.
விரட்டிய வேகத்தில், சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக வழக்குகள் பாயத் தொடங்கின. இதுவரை நடராஜன், திவாகரன், ராவணன் என மூன்று பேர் சிறைக் கம்பிகளுக்குள் சிறைப்பட்டுள்ளனர். அடுத்து மகாதேவன், தொடர்ந்து சசிகலா என பெயர் அடிபட்ட நேரத்தில்தான். அக்கா.. என்னை மன்னிச்சுடுக்கா என்று அறிக்கை வந்துள்ளது சசிகலாவிடம்...
சசிகலாவின் அறிக்கை தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதிமுக சார்ந்த, அதிகார மட்ட, காவல்துறை அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், இனி மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்கும், நாமெல்லாம் மறுபடியும் கைகளை மாற்றிக் கட்ட வேண்டும் என்ற பதட்டமே.
சசிகலா நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவான கட்சிக்காரர்களை மேலிடத்திற்குப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர் தற்போது அதிர்ச்சி அடைந்து போய் நிற்கின்றனராம். தாங்கள் சசிகலாவால் பழிவாங்கப்படலாம் என்ற பயம்தானாம் அது.
அதேபோல சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து வரும் போலீஸாரும் கூட பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகள் மட்டத்திலும், இனி என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது, சசிகலா தலையீடு மறுபடியும் இருக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனராம்.
மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம், சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரும் ஆட்டம் போட ஆரம்பிப்பார்களே, அதை முதல்வர் ஜெயலலிதா எப்படித் தடுக்கப் போகிறார் என்ற கேள்விகள் அதிமுகவினர் மத்தியில் இல்லாமல் அரசு அதிகாரிகள் மத்தியிலும் நிலவுகிறது.
சசிகலாவின் மறு வருகையால், உண்மையான அதிமுகவினர்தான் பெரும் கலக்கத்தில் மூழ்கியுள்ளனர். கட்சி உருப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டு தற்போது மறுபடியும் கலங்கலாக்கி விட்டனரே என்ற வேதனையிலும், விரக்தியிலும் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. மேலும் சசிகலா நீக்கப்பட்டபோது அதற்கு கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என பல தரப்பிலும் பெரும் வரவேற்பு காணப்பட்டது. காரணம், சசிகலா குடும்பத்தினர் தமிழகத்தை சூறையாடி போட்ட ஆட்டம்தான். கருணாநிதி குடும்பத்தினரை மிஞ்சி விட்டனரே என்றுதான் அத்தனை பேரும் சசிகலா குடும்பத்தி்னர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.
சசிகலா நீக்கத்தை வைத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பல முக்கியப் புள்ளிகளும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப யோசித்து வருவதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அத்தனையும் தவிடுபொடியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா சண்டை என்பது பொம்மை விளையாட்டு போல என்றாகி விட்டது. எனவே அதிமுகவின் தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இந்த உண்மையான அதிமுகவினர் உள்ளனராம்.
சசிகலாவின் மறு வருகை அதிமுகவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.