Followers

Thursday, 29 March 2012

சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளிநடப்பு

 
 
தேமுதிக தலைவர் விஜய்காந்தை மறைமுகமாக அதிமுக எம்எல்ஏ கு.ப.கிருஷ்ணன் தாக்கியப் பேசியதையடுத்து அதற்கு பதிலளித்த தேமுதிகவினருக்கு அனுமதி தரப்படாததால் அவர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
சட்டசபையில் இன்று அதிமுக எம்எல்ஏ கு.ப.கிருஷ்ணன் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனியாக நின்று சந்திக்கத் தயாரா? திராணி இருந்தால் தேர்தலில் சந்திப்போம் என்று சவால் விட்டதும், அதன்பிறகு தேர்தலில் அவருக்கு டெபாசிட் பறிபோனதும் எல்லோருக்கும் தெரியும். தற்போது கட்சியை தொடர்ந்து நடத்தலாமா அல்லது கலைக்கலாமா என்று ஆலோசனை நடப்பதாக தெரிகிறது என்றார்.
 
இதற்கு தேமுதிக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்தனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?. நீங்கள் ஏன் எகப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் ஏன் நடந்து கொள்கிறீர்கள் என்றார்.
 
அப்போது பேசிய தேமுதிக மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப.கிருஷ்ணன் பேசியதை ஒப்பிட்டு பார்த்தால் எங்களைத்தான் சொல்வதாக உள்ளது அவரது பேச்சை முழுமையாக வாங்கி ஒப்பிட்டு பாருங்கள். இதேபோல் பேசினால் சட்டமன்ற நடைமுறை வேறு திசை நோக்கி சென்று விடும் என்றார்.
 
அப்போது சபாநாயகர் ஜெயக்குமார் குறுக்கிட்டு, யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதன் பிறகும் நீங்கள் விளக்கம் சொன்னால் எப்படி? என்றார்.
 
இதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அவையில் இல்லாத எங்கள் கட்சித் தலைவரை தாக்கி பேசுவது எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துவதுபோல் உள்ளது. எனவே அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு தனது கட்சி எம்எல்ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் கேட்டது தேமுதிகவைத்தான். ஆகவே அதற்குப் பிறகு கட்சியை நடத்துவதா வேண்டாமா என்று அவர் யோசனை செய்துகொண்டிருக்கிறார் என்கிற தகவல் வந்திருக்கிறது என்று சொல்லுவது தேமுதிகவைத்தான் குறிக்கும். ஆகவே இரண்டையும் சேர்ந்து பார்த்து இவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு பேரவைத் தலைவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே வெளிநடப்பு செய்தோம் என்றார்.
 
அதிமுக.. தேமுதிக..அதிமுக.. கு.ப.கி.யின் பயணம்:
 
முன்பு அதிமுக அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அதிலிருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.கவில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment