Followers

Friday, 2 December 2011

மு.க.ஸ்டாலின் மீது நிலா மோசடி வழக்குப்பதிவு

 
 
 
முன்னாள் துணை முதல் அமைச்சரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டைச் சேர்ந்தவர் என்.எஸ்.குமார். இவர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து கடந்த 29ந்தேதி அன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:
 
எனக்கு சொந்தமான 2 1/2 கிரவுண்டு நிலம் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்தது. அந்த இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தேன். அந்த வீட்டை மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு விற்க வேண்டும் என்று பலர் மிரட்டினார்கள். பக்கத்து வீட்டில்தான் மு.க.ஸ்டாலின் வசிக்கிறார். எனது வீட்டை பின்னர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் மிரட்டி பத்திர பதிவு செய்து கொண்டனர். இதற்கு ரூ.5 1/2 கோடிக்கு வங்கி டி.டி.யாக கொடுத்தனர். பின்னர் ரூ.1 கோடியே 15 லட்சத்தை ரொக்கப்பணமாக கொடுத்தனர்.
 
என்னிடம் வாங்கிய வீட்டை பின்னர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டது போல ஒப்பந்தம் போட்டு கொண்டனர். தற்போது அந்த வீட்டில் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வசிக்கிறார். என் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து எனது வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர். எனது வீட்டை மீட்டு தருவதோடு, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொலை மிரட்டல், சதித்திட்டம், வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


நடந்தது என்ன? : மு.க. அழகிரி விளக்கம்

 
 
 
மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, மதுரை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு புதிய எம்பி அலுவலகம் கட்டி ஒதுக்கப்பட்டது.
 
 
தற்போது ஆட்சி மாற்றத்தால் 30.11.2011 அன்று மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அந்த இடத்தை பறித்து மீண்டும் மேற்கு மண்டல அலுவலகத்திற்காக ஒப்படைக்க மாநகராட்சி கமிஷனர் நடராஜன், மேயர் ராஜன் செல்லப்பாவிடம் ஒப்படைத்தார்.
 
 
 
 
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் இருந்தார்.
 
இந்த நேரத்தில் மதுரை உள்ள எம்பி அலுவலக இடம் பறிக்கப்பட்டச் செய்தி, மு.க.அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
 
இதையடுத்து டெல்லியில் இருந்து 30.11.2011 அன்று அழகிரி அவசரமாக மதுரை திரும்பினார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி (01.12.2011) அழகிரி விளக்கம் அளித்தார்.
 
 
அவர், ''நானே கடந்த நவம்பர் 1ம் தேதி மாநகராட்சி கமிஷனர் நடராஜனிடம் எம்.பி. அலுவலக சாவியை ஒப்படைத்துவிட்டேன். அதன்பிறகுதான் இந்த தீர்மானத்தை போட்டுள்ளார்கள். மற்றபடி என் அலுவலகத்தை பறிக்கவில்லை.
 
 
இந்த உண்மையை கமிஷனர் வெளியே சொல்லாமல் மறைப்பதால், அதிமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. இது என்னை மிகவும் எரிச்சல் படுத்துகிறது'' என்று கூறினார்



வாய்தா ராணியும் டி.ஜி.பி. அலுவலகம் தேடி போன ஸ்டாலினும்

 
 
 
சென்னை தேனாம் பேட்டையில் ரூ.6 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரித்ததாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 4 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.
 
இந்த தகவல் அறிந்தததும் அவர் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவர் கைது செய்யப்படலாம் என்று வதந்தி பரவியதால் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடினார்கள். அவரது வீட்டிலும் தொண்டர்கள் குவிந்தனர். இன்று பகல் 11.45 மணிக்கு மு.க.ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகம் சென்றார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. வக்கீல்களும் சென்றனர்.
 
டி.ஜி.பி. ராமானுஜம் அங்கு இல்லாததால் கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் 2 மனுக்களை கொடுத்தார். கூடுதல் டி.ஜி.பி.யை சந்தித்த பின்னர் நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-
 
முதல் தகவல் அறிக்கை என்பது இந்த ஆட்சியில் பிராடு இன்வெஸ்டிகேசன் ரிப்போர்ட்டு என்ற நிலை மாறிவிட்டது. என் மீது போடப்பட்டிருப்பது பொய்வழக்கு. எனவே எனது உணர்வை வெளிப்படுத்த டி.ஜி.பி.யை சந்தித்து ம.னு கொடுக்க வந்தேன். ஆனால் அவர் இல்லை. எனவே கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனை சந்தித்து 2 மனுக்களை கொடுத்துள்ளேன். ஒன்று என் மீதான பொய் வழக்கு தொடர்பானது. இந்த வழக்கில் எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது.
 
எனது மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த வீட்டை எடுத்துள்ளார். அந்த வீட்டில் எனது மகளும், மருமகனும் குடியிருக்கிறார்கள். இதுதவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் உண்மை. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மிரட்டியோ, அச்சுறுத்தியோ காவல்துறையை பயன்படுத்தி தவறான புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்கள். எப்.ஐ.ஆர். பதிவு செய்தால் கைது செய்ய வேண்டாமா? ஆனால் இதுவரை கைது செய்யவில்லை.
 
என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பதற்காகத்தான் வந்தேன். அதை கேட்டதும் கூடுதல் டி.ஜி.பி.யால் பதில் சொல்ல முடியவில்லை. நில அபகரிப்பு வழக்கை பொறுத்தவரை தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தால் உடனே வழக்குப்பதிவு செய்து விடுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கூட நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
உண்மையில் நில அபகரிப்பு பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதுதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனது மீதான புகார்களை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன். தி.மு.க.வினர் யார் மீதான வழக்காக இருந்தாலும் நீதிமன்றம் மூலம் சந்திக்க தயாராக இருக்கிறோம்.
 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
அப்போது தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் பாரதி, வக்கீல்கள் கல்யாணசுந்தரம், கிரிராஜன், பரிமளம், சுபாஷ் சந்திரபோஸ், ராஜ்குமார், மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
முன்னதாக மு.க.ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
நான் கொளத்தூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.எல்.ஏ. ஆக உள்ளேன். தி.மு.க. பொருளாளராக இருக்கிறேன். துணை முதல்வர் பொறுப்பையும் வகித்துள்ளேன். ஒரு சொத்து மாற்றம் தொடர்பாக என் மீதும், என் மகன் மீதும் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன்.
 
என் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அரசியல் உள் நோக்கத்துடன் என் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்து மாற்றத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த சொத்து உரிமையாளரிடம் என் மகன் உதயநிதி தன் நிறுவனம் மூலம் வாடகைக்கு இருக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனவே மக்கள் மத்தியில் எனக்குள் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கவே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழக காவல் துறை இந்த விஷயத்தில் எனக்கு எதிராக தவறாக பயன் படுத்தப்படுகிறார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் இது நடைபெறுகிறது. என் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக முழுமையாக எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படாமல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசின் கைப்பாவையாக காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. எனவே என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் புகார் கொடுத்தவர் மீது உரிய சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அந்த மனுவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது புகார் கூறி அவர் மற்றொரு மனுவும் கொடுத்தார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பழனிவேல் முன்பு இன்று 2 வக்கீல்கள் ஆஜராகி ஸ்டாலின் மீதான வீடு மோசடி வழக்கில் போடப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளை சுட்டிக் காட்டி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் மனுவை அவசர வழக்காக எடுத்து இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நீதிபதி பழனிவேல் மறுத்து விட்டார். ஜாமீன், முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யும் அனைத்துமே அவசர வழக்குகள்தான் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.



வடிவேலு திமுகவுக்கு 'குட் பை' அ.தி.மு.க.வில் சேருகிறார்?

 
 
 
நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று பலமாக சாடினார். அ.தி.மு.க. வையோ, ஜெயலலிதா வையோ, கூட்டங்களில் விமர்சித்து பேசவில்லை.
 
தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு அதிர்ச்சியானார். தற்போது படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
 
இதற்கிடையில் வடிவேலு அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரும், அ.தி.மு.க.வில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
 
இப்ராகிம்ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இப்ராகிம் ராவுத்தர் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். மூப்பனாருக்கு நெருக்க மானவராகவும், இருந்தார். இப்போது அவர் அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளார்.
 
வடிவேலுவும், இப்ராகிம் ராவுத்தரும் நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் சேருவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விரைவில் இணைப்பு விழா நடக்கும் என தெரிகிறது.



Wednesday, 30 November 2011

மதுரையில் அழகிரியின் எம்.பி. அலுவலகம் பறிப்பு!

 
 
 
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி டெல்லி போயுள்ள நிலையில், மதுரையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த எம்.பி. அலுவலகத்தை மதுரை மாநகராட்சி பறித்துள்ளது.
 
கடந்த 2009ம் ஆண்டு மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி சார்பில் புதிதாக ஒரு கட்டடம் கட்டி அதை எம்.பி. அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி அழகிரியிடம் ஒப்படைத்தார் அப்போதைய திமுக மேயர் தேன்மொழி.
 
இந்த நிலையில் இந்த அலுவலக ஒதுக்கீடுக்கான உத்தரவை இன்று மதுரை மாநகராட்சி தீர்மானம் மூலம் ரத்து செய்துள்ளது. மேலும், அந்த இடத்தில் மண்டல அலுவலகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அலுவலகம் பறிக்கப்பட்ட தகவல் அழகிரிக்கு போயுள்ளதாம். அவர் தற்போது டெல்லியில் உள்ளார். திஹார் சிறையிலிருந்து விடுதலையான தங்கை கனிமொழியை வரவேற்க டெல்லி போன அழகிரி, கனிமொழியை தனது வீட்டில்தான் தங்க வைத்துள்ளார்.
 
இந்த நிலையில் எம்.பி. அலுவலகத்தை மதுரை மாநகராட்சி பறித்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மதுரை திரும்பியதும் அலுவலகத்தை மீட்கும் நடவடிக்கையில் அவர் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



2ஜி வழக்கு: ராசா மனதில் என்ன இருக்கிறது?

 
 
 
2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த 5 கார்பரேட் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் திமுக எம்பி கனிமொழி மற்றும் 4 பேருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்றிரவு 7.30 மணிக்கு கனிமொழி திகாரில் இருந்து வெளியே வந்தார். வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி சென்னை வருகிறார்.
 
2ஜி ஊழல் வழக்கில் கைதானவர்களில் இதுவரை ஒரு முறை கூட ஜாமீன் கோராதவர் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தான். கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்தபோது ராசாவிடம் நீங்கள் ஜாமீன் கோரவில்லையா என்று கேட்டதற்கு, கனிமொழியின் ஜாமீன் மனு மீதான முடிவு தெரியட்டும்.அதன் பிறகு எனது முடிவை நான் தீர்மானிப்பேன் என்றார்.
 
தற்போது கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக ராசா ஜாமீன் மனு தாக்கல் செய்வாரா என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு.
 
இருப்பினும் இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜாமீன் தொடர்பாக என்னுடன் இதுவரை ராசா கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறினார் என்பது நினைவிருக்கலாம். எனவே ராசாவின் மனதில் என்ன இருக்கிறது என்பது புலப்படவில்லை.



Monday, 28 November 2011

நாசமா போயிருவீங்க! ஜெயலலிதா ஆட்சி பற்றி சீமான் ஆவேசம்!

 
 
 
25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள 'ஆஸ்ஸி' பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
 
 
அவர் பேசுகையில்,
 
 
ஒருத்தன் கேட்கிறான் பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் ஏறிவிட்டது. ஏன்னென்றால், பொதுநிறுவனங்களை பாதுகாக்க நிதி இல்லை. உடனே ஒருத்தன் எடுத்து பேசுறான், அண்ணா நூலகத்தை மாற்ற காசு இருக்கு. இதுக்கு காசு இல்லையா. இதுக்கு யாரிடம் பதில் இருக்கு.
 
 
மத்திய அரசு, மாநில அரசு கேட்ட நிதியை ஒதுக்கி தரவில்லை. மத்திய அரசுடன் கூட்டணி அமைக்காமல் இந்த அரசு அமைந்திருக்கிறது. பெரும்பான்மையோடு அமைந்திருக்கிறது. தனக்கு அடிபணியவில்லை. அதனால் வஞ்சிக்கிறது. பொதுவாகவே இந்தியாவை ஆளுகிற காங்கிரஸ் அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரானது.
 
 
மேற்கு வங்காளத்தை ஆளுகிற மம்தா பானர்ஜியோடு கூட்டணி வைத்திருக்கிறது. அதனால் கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. இங்கே ஆளுகிற அதிமுக அரசு காங்கிரசோடு கூட்டணி வைக்கவில்லை. அதனால தேவையான நிதியை தரவில்லை. அப்ப நீங்க என்ன செய்திருக்க வேண்டும். மக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கி தராததால், நான் விலைவாசியை உயர்த்தினால் பால் விலை 6 ரூபாய் 25 காசு கூடும். பேருந்து கட்டணம் இரட்டிப்பாகும். பேருந்தில் எவன் போவான். ஷேர் ஆட்டோவில் போகமுடியாதவன். இருசக்கர வாகனம் வைத்துக்கொள்ள முடியாதவன். கார் வைத்துக்கொள்ள முடியாதவன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். மாதச் சம்பளம் 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய் வாங்குபவன்தான் பேருந்தில் போவான். அவன் காசை பறித்து, அதில் இருந்து நிதியை பெருக்கி, நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டும் என்பது எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு மோசமானது என்பதை சிந்திக்க வேண்டும்.
 
 
 
 
அப்ப என்ன செய்திருக்க வேண்டும். என் அன்பு மக்களே, இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. தமிழக அரசுக்கு நிதி தரவில்லை என்றால், பால் விலையை ஏற்றினால், பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் உங்களுக்கு இவ்வளவு சுமை இருக்கும். இவ்வளவு கஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது. எனவே எனக்கு ஆதரவாக நில்லுங்கள். நான் போராடுகிறேன். அப்படித்தான் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் போராடினார்கள். மத்திய அரசு வேண்டிய அறிக்கையை கொடுக்காதபோது, மக்களைத் திரட்டி ஒரு நாள் போராட்டம். அடுத்த நாள் பதறிக்கொண்டு அறிக்கையை கொடுத்தது மத்திய அரசு. அப்படி போராடி இருக்க வேண்டும்.
 
மத்திய அரசு, நான் உங்களை அடிக்கிறேன். நீங்கள் திருப்பி என்னைத் தான் அடிக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் அப்பாவியை அடிக்கக் கூடாது. அது சரியல்ல.
 
 
ஆர்ப்பாட்டத்தில் பேச அனுமதி இல்லை. பெரம்பலூரில் டிசம்பர் 15ல் தம்பி அப்துல் ரசக்கின் நினைவுத் தினத்திற்கு கூட்டம் போட்டால் அந்த இடத்தில் அனுமதியில்லை. ஏன், பக்கத்தில் அகதிகள் முகாம் இருக்கிறது. சீமான் பேசினால், பக்கத்தில் இருக்கிற அகதிகள் எல்லாம் துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இலங்கைக்கு போய்விடுவானா. சீமான் பேசினால் உணர்வு பெற்றுவிடுவான். ஏண்டா ஒரு தமிழன் கூட உணர்ச்சியே பெற்றுவிடக் கூடாதா. உணர்வே பெற்றுவிடக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தீங்கன்னா, இதை எங்கப்போய் சொல்லறது. நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கும், எங்கோ ஓரத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருக்கும் தமிழர்கள் உணர்வு பெறுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அதுக்காக அந்த இடத்தில் பேச அனுமதி இல்லையென்றால், இதைவிட ஒரு கொடுமை, இதைவிட ஒரு சர்வாதிகாரம், இதைவிட அடக்கமுறை எதாவது இருக்கா.
 
 
கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னை பேச வைத்து இறையாண்மைக்கு எதிரா பேசுறான். விடுதலைப்புலிகளை ஆதரிச்சு பேசுறான். சட்டத்துக்கு எதிரா பேசுறான் என்று தூக்கி தூக்கி உள்ளே போட்டாரு. இதுக்கு அதுவே பரவாயில்லை. இங்கே நீ பேசவே விடல. அந்த கொடுமையை தொலைக்கத்தான் இந்த வேலையை செய்தோம். இது அதைவிட பெரிய கொடுமையா இருக்கு. இதை தொலைக்க பெரிய வேலை செய்யணும் போலிருக்கு நாங்க.
 
நான் சொன்னேன் ஒரு அதிகாரிகிட்ட எடுத்து, நாசமா போயிருவீங்கன்னு சொன்னேன். இது நடக்கும். இந்த சேட்டையெல்லாம் நீங்க வைச்சிக்கக் கூடாது. ஒண்ணு தெரிந்துக்கொள்ளுங்கள் அப்படியே ஒரு வாய்க்காலில் ஓடுகிற தண்ணீரை நீங்க அடக்கி தேக்கி தேக்கி வைச்சி வைச்சி திறந்தீங்கண்ணா, அது வேக வேகமா பாயும். அதைத்தான் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கீங்க. இரவு முழுவதும் பட்டியில் கட்டி வைத்திருந்த மாடுகளும், ஆடுகளும் காலையில் திறந்து விட்டால் எவ்வளவு வேகமா வெளியே பாய்ந்து வருமோ, அவ்வளவு வேகமா நாங்க வருவோம். ஆடு, மாடுமே அப்படி பாயும்போது, வீரத்தமிழ் புலிகள் நாங்கள் எப்படி பாயுவோம் என்று நீங்க புரிந்துக்கொள்ளுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

சீமான் இப்படி ஆவேசப்பட்டு பேசுவதால் கிடப்பில் இருக்கும் விஜயலக்ஸ்மி புகாரை ஜெயலலிதா கையில் எடுப்பார் என்றே தெரிகிறது. சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஜெயலலிதாவுக்கு பல நன்மைகள் கிடைக்கலாம். விடுதலைபுலிகளின் தீவிர ஆதரவாளரான சீமானை மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழக பெண்கள் மத்தியில் ஒரு பெண்பித்தனை போன்று சித்தரிக்கலாம், இதனால் சீமானின் புகழை அடியோடு இல்லாமல் செய்யலாம், சீமான் மீது கொலைவெறியில் இருக்கும் காங்கிரஷ்கரர்களை குளிரவைகலாம். அதுவே அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வழிவகுக்கலாம்...இதன் மூலம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக , காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான சீமானின் பிரசாரத்தை கேள்விக்குறியாக்கலாம் இப்படி பல நன்மைகள் இருப்பதால் விஜயலட்சுமி புகார் மீது நடவடிக்கை எடுத்து சீமான் கைது செய்யப்படும் நாட்கள் என்னப்படுவதாகவே தெரிகிறது.



Sunday, 27 November 2011

இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந்த் தாக்கு

 
 
 
கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை தாக்கல் செய்துள்ள பதில் மனுவைப் பார்க்கையில் இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
 
இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
 
அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையை கடந்து இலங்கைப் பகுதிக்கு செல்வதால்தான் ஆபத்து ஏற்படுவதாகவும், கடல் எல்லையில் இருந்து 5 மைல் தூரம் வரை மீன் பிடிக்கக் கூடாத பகுதி என்று அறிவித்துவிட்டால் இந்தப் பிரச்னை எழாது என்றும் தெரிவித்துள்ளது. இது பொறுப்பற்ற, விஷமத்தனமான, தீமை விளைவிக்கக் கூடிய போக்காகும்.
 
இந்த கடல் பகுதியில் காலங்காலமாக இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் பெயரைச் சொல்லி இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழப்பும், பலர் படுகாயங்களுக்கு ஆளாகியும், மீன் பிடித் தொழிலையே விட்டு விடுகிற அளவுக்கு நிலைமை முற்றியது. ஆனால் இலங்கை அரசு இப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அறவே இல்லாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரிக்கிறது.
 
இதற்குப் பிறகும் கூட, இலங்கை அரசை சேர்ந்த கப்பல் படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதும், அவமானப்படுத்துவதும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், படகுகளையும் கைப்பற்றுவது என்ன நியாயம்? இந்தக் கொடுமையில் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்திய கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கிறபொழுது, இலங்கை அரசே இந்திய அரசை விட எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. இலங்கை அரசாவது அதிகாரி மட்டத்தில் இது பற்றி பேசி தீர்வு காணலாம் என்கின்றனர். ஆனால் இந்திய அரசின் கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கும்பொழுது நமது மீனவர்கள் இந்த கடல் பகுதியில் மீன்களையே பிடிக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் நமது மீனவர்களை இந்திய கடலோர காவல் படையே தாக்கிய சம்பவங்களும் உண்டு.
 
கிணறு வெட்ட போய் பூதம் புறப்பட்டதைப் போல, நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்போய் முதலுக்கே மோசம் என்ற அடிப்படையில் இந்திய அரசின் பதில் அமைந்துள்ளது. உண்மையிலேயே நம்முடைய மீனவர்களும் இந்திய குடிமக்கள் என்ற உணர்வு இந்திய அரசுக்கு இருக்குமானால் உடனடியாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய இலங்கை கடல் பகுதியை இரு சாராரும் தாராளமாக மீன் பிடிக்க வழிவகை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
 
1974 முதல் இன்று வரை இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதத் தவறுவதில்லை. மத்திய அரசோ அவ்வப்பொழுது சமாதானம் சொல்வதும், இலங்கைக்கு தூதரை அனுப்பி வைப்பதும் வாடிக்கை. ஆனால் மீனவர்களின் வாழ்விலோ விடியல் ஏற்படவில்லை. இப்பொழுதாவது இந்திய அரசு தன் தவறை உணர்ந்து இலங்கை அரசின் ஏஜெண்ட் போல செயல்படுவதை விட்டுவிட்டு இந்தியப் பிரஜைகளை காப்பாற்றுவதும், அவர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தருவதும் தன் முதல் கடமை என்று உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
 
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.



கனிமொழிக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா?

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்றும் விசாரணை தொடர்கிறது.
 
இந்த மனுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 
கனிமொழி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அவர்களுக்கு ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்திலேயே தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அதேபோல, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த மனுக்கள் முதலில் டிசம்பர் 1ம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. இருப்பினும் மேற்கண்டோரின் கோரிக்கையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இவர்களின் மனுக்கள் விசாரிக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.
 
அதன்படி வெள்ளிக்கிழமை இவர்களின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது கனிமொழியின் வக்கீலைப் பார்த்து நீதிபதி வி.கே.ஷாலி, ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்து விட்டது, எனவே மற்றவர்களையும் விட்டு விட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? உயர்நீதிமன்றம் இதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவற்றைப் பரிசீலிக்கக் கூடாது என்று கூற வருகிறீர்களா என்று கேட்டார்.
 
அதன் பின்னரும் தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த நிலையில் விசாரணையை திங்கள்கிழமை வரை நீதிபதி ஷாலி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் கனி்மொழி தரப்பு கடும் ஏமாற்றமடைந்தது.
 
முன்னதாக ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கனிமொழி உள்ளிட்டோர் இருந்தனர்.
 
கனிமொழி மீது சிபிஐ நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் கிரிமினல் சதித் திட்டம் தீட்டுவது, கிரிமினல் சதி, ஏமாற்றுதல், மோசடி, ஊழல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மத்திய அமைச்சர் பவாருக்கு கன்னத்தில் அறை: சீக்கிய இளைஞர் ஆவேசம்

 

டில்லியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்தார் சீக்கிய வாலிபர். "ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி இது தான் கதி' என, ஆவேசத்துடன் குரல் எழுப்பி, கத்தியை காட்டியும் மிரட்டினார்.

மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், டில்லி பார்லிமென்ட் வீதியில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின், அங்கு கூடியிருந்த பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, போலீசார் யாரும் இல்லை. தனியார் பாதுகாப்பு ஏஜன்சியைச் சேர்ந்த சிலர் மட்டுமே, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். பவார் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும்போது, பத்திரிகையாளர்களுக்கு இடையே அமர்ந்திருந்த ஒரு சீக்கிய இளைஞர், திடீரென எழுந்து, சரத் பவாரின் அருகே வந்தார்.
இதற்கிடையே, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சரத் பவார், அரங்கை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார். அப்போது, பவாரின் அருகே வந்த அந்த வாலிபர், அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அத்துடன், "ஊழல்வாதிகளுக்கு இனி இது தான் கதி. பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பவாரும் ஊழல் அரசியல்வாதி தான்' என, கடும் கூச்சல் எழுப்பினார்.

பவாரின் அருகில் நின்ற அதிகாரிகள், செய்வதறியாது திகைத்தனர். சில அதிகாரிகள், அந்த இளைஞரை சமாதானப்படுத்தினர். மேலும் சில அதிகாரிகள், அந்த இளைஞரை அடித்து, உதைத்து மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். அவர்களின் பிடியில் இருந்து விடுபட்ட அந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்துக் காட்டி, கடுமையான குரலில் மிரட்டல் விடுத்தார்.

இதை பொருட்படுத்தாத சரத் பவார், வேகமாக அங்கிருந்து வெளியேறி காரில் ஏறி சென்று விட்டார்.

இதன் பின், அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் ஹர்வீந்தர் சிங் என்பது தெரிந்தது. இந்த சம்பவம், டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்லிமென்டிலும் இந்த சம்பவம் நேற்று எதிரொலித்தது. அனைத்து கட்சி உறுப்பினர்களும், சரத் பவார் மீதான தாக்குதலை கடுமையாகக் கண்டித்தனர்.

பிரதமர் விசாரணை: இந்த சம்பவம் கேள்விப்பட்டதும், சரத் பவாரை போனில் தொடர்பு கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் விசாரித்தார்; தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "இது கடும் கண்டனத்துக்கு உரிய சம்பவம். இது போன்ற சம்பவங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது' என்றார்.

மகாராஷ்டிராவில் பதட்டம்: பவார் தாக்கப்பட்டதால், அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மும்பை, சோலாபூர், நாசிக் ஆகிய இடங்களில் தேசியவாத காங்., கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும், பவார் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவரே தான் இவர்
♦ கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது கோர்ட்டுக்கு வெளியில் அவரை, ஒரு இளைஞர் தாக்கினார். அதே இளைஞர் தான், சரத் பவாரையும் நேற்று தாக்கியுள்ளார்.
♦ தாக்குதல் நடத்திய இளைஞர், டில்லி ரோகினி பகுதியைச் சேர்ந்த டெம்போ டிரைவர்.
♦ சரத் பவாரை தாக்குவதற்காக, ஏற்கனவே திட்டமிட்டு தான், பத்திரிகையாளர் போர்வையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்துள்ளார்.
♦ போலீசில் பிடிபட்டதற்கு பின், அங்கிருந்த "டிவி' சேனல்களுக்கு வீராவேசமாக பேட்டி அளித்தார்.

"கிர்பான்' இருந்திருந்தால்…?
போலீசில் பிடிபட ஹர்வீந்தர் சிங் கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என, அன்னா ஹசாரே தொடர்ந்து கூறி வருகிறார். அரசியல்வாதிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். விளம்பரம் தேடுவதற்காக இந்த சம்பவத்தை நான் அரங்கேற்றவில்லை. உண்மையில், என்னிடம் இன்று, "கிர்பான்' (சீக்கியர்கள் வைத்திருக்கும் பெரிய வாள்) இருந்திருந்தால், சரத் பவாரை கொலை செய்திருப்பேன். அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள். இவ்வாறு ஹர்வீந்தர் சிங் கூறினார்.

(dm)


Filed under: Hot News