Followers

Saturday, 22 October 2011

'மக்களே... மக்களே... !' விஜயகாந்தின் அனல் பறக்கும் பிரச்சாரம் அம்போ! காரணம் என்ன?

 
 
 
சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டின் போது தேமுதிக அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு, தேமுதிக அலுவலகத்தில் மூன்றாவது அணி அமைக்க முயற்சி மேற்கொண்டது போன்ற குளறுபடிகளைத் தாண்டி, அ.தி.மு.க.,வுடன் உடன்பாடு கண்டு 41 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில் 29 தொகுதிகளில் தே.மு.தி.க., வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக அங்கீகாரம் பெற்றது.
 
சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு, மூன்றாவது அணி போன்ற மிரட்டல்கள் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவால் எடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி என அ.தி.மு.க., முடிவெடுத்து, வேட்பாளர்களை அறிவித்ததால், தவிர்க்க முடியாத நிலையில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட வேண்டி வந்தது. முந்தைய தோர்தல்களில் தனித்து போட்டியிட்டபோது, ""தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணிகளின் காரணமாகவே வெற்றி பெறுகின்றன. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை. அதற்கான தைரியம் அவர்களுக்கு இருக்கிறதா என்று சவால் விட்டார் விஜயகாந்த்.
 
 
அவரது சாவலை எதிர்கொள்ளும் வகையில் உள்ளாட்சி தேர்தல் களம் அமைந்தது. அனைத்து பிரதான கட்சிகளும் தனித்து களமிறங்கிய நிலையில், தே.மு.தி.க., மட்டும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. மார்க்சிஸ்ட்டுகளுடன் மாநிலம் முழுவதும் முழுமையான கூட்டணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கூட்டணி என்ற குழப்பமான உடன்பாட்டுடன் தே.மு.தி.க., போட்டியிட்டது.
 
 
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக மாறி, மாநிலம் முழுவதும் சுற்றி வந்தனர். "எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் மக்களே... மக்களே...' 'உங்களை கேட்டுதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம், உங்களை கேட்டுதான் அதிமுகவை விட்டு பிரிந்தோம்...' என்ற வேண்டுகோளுடன் துவங்கிய இவர்களின் பிரசாரம், இறுதி கட்டத்தில் "கூட்டணி துரோகம் செய்த அ.தி.மு.க.,விற்கு பாடம் கற்பியுங்கள்' என அ.தி.மு.க., எதிர்ப்பு பிரசாரமாக நிறைவடைந்தது.
 
 
இருவரும் பிரசாரத்திற்கு செல்லுமிடத்தில் கூடிய கூட்டம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. ஆனால், கூட்டத்திற்கு ஏற்ப வெற்றி வாய்ப்பு கிடைக்காததால், தே.மு.தி.க., தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றி கிடைத்ததை கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் மற்றக் கட்சிகளை விட ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்து நம்பிக்கையுடன் இருந்த தேமுதிக வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 
 
தே.மு.தி.க.,வின் இந்த பின்னடைவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் என்ற பதவி, கிடைத்தும், அதை அவர்கள் முறையாக பயன்படுத்தவில்லை. கூட்டணி மூலம், தங்களது தனித்தன்மையை தொலைத்ததோடு, மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் தே.மு.தி.க., இழந்துள்ளது.
 
 
தே.மு.தி.க.,வின் தேர்தல் தோல்வி குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், ""ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் தேர்தல் காலத்தில் அனல் பறக்க பிரசாரம் செய்தால் மட்டும் வெற்றிக்கனி வந்துவிடாது. பொதுமக்கள் நலன் சார்ந்த அனைத்து விஷயங்களிலும், தினந்தோறும் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், விஜயகாந்த் அதைச் செய்யத் தவறிவிட்டார்.
 
சட்டசபை கூட்டத்தொடரில் அவரது பங்களிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சமச்சீர் கல்வி, புதிய சட்டமன்ற கட்டிடம், திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தியது உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்புடைய விஷயங்களில் தங்களது கட்சியின் கருத்தை அவர் அழுத்தமாக வெளிப்படுத்தவில்லை.
 
சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வாங்கியதைப் போல், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை வாங்க வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே தேமுதிக தலைமை இருந்தது.
 
அதிமுக தனித்து போட்டியிட முடிவு எடுத்தததால் தான், தேமுதிக வேறு வழியில்லாமல் வெளியேறிதே தவிர, மக்களுக்குக்காக அல்ல. இப்போது அதிமுகவை குற்றம் சாட்டும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா, கடந்த 4 மாதமாக வாய் திறக்காமல் இருந்தது ஏன்?
 
 
சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், பொதுமக்களோடு தொடர்பை ஏற்படுத்தும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் தே.மு.தி.க., ஈடுபடவில்லை. தேர்தல் அனுபவமில்லாத தே.மு.தி.க., நிர்வாகிகளை, இரு கழகங்களும் எளிதாக பின்னுக்குத் தள்ளி வீழ்த்தி விட்டன,'' என்றார்.



இவ்வளவு மோசமான தோல்வியை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை! - ஈவிகேஎஸ்

 
 
 
உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி பெறும் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
 
தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில்:
 
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு இவ்வளவு மோசமான தோல்வி கிடைக்கும் என்றுநான் நினைக்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் உள்ள 3 பெரிய கட்சிகளில் காங்கிரசும் ஒன்று என்ற நிலை ஆறுதலை தருகிறது.
 
காங்கிரஸ் தனித்து போட்டி என்றதும் மக்களிடம் வரவேற்பு இருந்தது. ஆனால் அது ஓட்டாக மாறவில்லை என்பதுதான் உண்மை. ஆளுங்கட்சிக்கு என்று சில வசதிகள் உள்ளன. அரசு நிர்வாகமும், காவல் துறையும் அவர்கள் கையில் இருக்கிறது.
 
மக்களுக்கு அதிக அளவு பணமும் தரப்பட்டன. கடந்த 5 மாத கால அ.தி.மு.க. ஆட்சியில் மின்தட்டுப்பாட்டை தவிர மக்கள் வெறுக்கும் சம்பவங்கள் ஏதும் நடக்க வில்லை. இது அ.தி.மு.க.வுக்கு பெரிய அளவில் வெற்றியை தந்திருக்கிறது. தி.மு.க. தரப்பிலும் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது.
 
இந்த தேர்தலில் 650 பேர் உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றபடி காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் குழப்பம் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களால் பணம் செலவழிக்க முடியவில்லை. கிராமப்புறங்களில் ஓரளவு காங்கிரஸ் நன்றாக இருக்கிறது. காங்கிரசை பலப்படுத்த வேண்டியது அவசியம். காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்," என்றார்.



ஓ.பன்னீர்செல்வம் வீட்டை நொறுக்கிய அதிமுகவினர்

 
 
 
போடிநாயக்கனூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுகவின் போட்டி வேட்பாளர் 11 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் ஆத்திரமடைந்த அதிமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
போடிநாயக்கனூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் முதலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் பழனிராஜ். பின்னர் அவரை மாற்றிய கட்சித் தலைமை பாலமுருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து பழனிராஜ் போட்டி வேட்பாளராக களம் குதித்தார்.
 
இந்த நிலையில், தலைவர் தேர்தலில் பாலமுருகன் 9714 வாக்குகளைப் பெற்றார். ஆனால் பழனிராஜ் 9725 வாக்குகளைப் பெற்று, வெறும் 11 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார்.
 
இதனால் பாலமுருகனின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். பாலமுருகன் தோற்க, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்த உள்ளடி வேலைகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய அவர்கள் போடியில் உள்ள பன்னீர் செல்வத்துக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திற்குப் படையெடுத்துச் சென்று அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். வீட்டையும், அலுவலகத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக போடியில் பரபரப்பு நிலவுகிறது.



விஜயகாந்த்தின் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தேமுதிக!

 
 
மதுரை மாநகராட்சியில் ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தேமுதிக.
 
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில், 13 வார்டுகளில் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கட்சி தேமுதிக. ஆனால் இப்போது அக்கட்சிக்கு மதுரையில் ஒரு வார்டு கூட கிடைக்கவில்லை. அதுவும் கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான தோல்வியை கட்சி சந்தித்திருப்பதால் தேமுதிகவினர் பெரும் கவலையடைந்துள்ளனர்.
 
மதுரை மாநகராட்சி தற்போதைய தேர்தலி்ல 100 வார்டுகளாக விரிவடைந்து தேர்தலை சந்தித்தது. அனைத்து வார்டுகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. கடைசி நேரத்தில் சிபிஎம், சிபிஐ ஆகியவை தேமுதிக கூட்டணிக்கு வந்ததால் இந்தக் கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தேமுதிகவுக்குப் பலம் கிடைக்கும். குறைந்தது கடந்த முறை வென்ற இடங்களாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
 
ஆனால் கூட்டணி அரசியலில் குதித்து குழம்பிப் போய் நிற்கும் தேமுதிகவுக்கு, இந்தத் தேர்தலில் மதுரை மக்கள் பட்டை நாமம் போட்டு விட்டனர்.
 
100 வார்டுகளிலும் தேமுதிக தோல்வி அடைந்திருப்பது அந்தக் கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
இதற்கிடையே, அந்தக் கட்சியின் மேயர் வேட்பாளர் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.



அதிமுக அலையில் காணாமல் போன தேமுதிக

 
 
 
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடங்களில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்றுவரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து தற்போது தனிதத்துப் போட்டியிட்ட தேமுதிக மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளது.
 
மாநகராட்சிகளிலும் சரி, நகராட்சிகளிலும் சரி இந்தக் கட்சி அதிமுகவின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பேரூராட்சிகளில்தான் இக்கட்சிக்கு ஓரளவு வார்டுகள் கிடைத்து வருகின்றன.
 
10 மாநகராட்சி மேயர் தேர்தலிலும் தேமுதிக 3வது மற்றும் 4வது இடத்தில்தான் உள்ளது. இங்கு வார்டுகளிலும் கூட தேமுதிக வேட்பாளர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
 
பேரூராட்சித் தலைவர் பதவியைப் பொறுத்தவரை ஒரு இடத்திலும் தேமுதிக முன்னணியில் இல்லை. அதேசமயம் கவுன்சிலர் பதவியிடங்கள் ஓரளவு இக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.
 
தபால் ஓட்டுக்களிலும் கூட தேமுதிகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் ஓட்டே கிடைக்கவில்லை.
 
தேமுதிக வாக்குப் பிரிக்கும் கட்சியாகவே மீண்டும் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை அதிமுகவின் வாக்குகளை தேமுதிக எதுவும் செய்யவில்லை. மாறாக திமுகவின் வெற்றியைத்தான் இந்த முறை தேமுதிக பல இடங்களில் பாதித்துள்ளது. கடந்த காலங்களில், அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையைப் போட்ட தேமுதிக இந்த முறை அதிமுகவை விட்டு விட்டு திமுகவின் வெற்றிவாய்ப்பை பல இடங்களில் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்த சுயேச்சை வேட்பாளர்

 
 
 
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த அனந்தபுரம் பேரூராட்சியை சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றினார்.
 
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. மேலும் 2வது இடம் கூட கிடைக்கவில்லை.
 
அனந்தபுரம் பேரூராட்சித் தலைவருக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ரா.ஆனந்தாயி 1782 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேச்சை வேட்பாளரை விட 620 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 
பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வாக்கு பெற்றவர்களின் விவரம்:
 
1. ரா.ஆனந்தாயி (சுயே) 1782.
2. ரா.சங்கீதாராமன் (சுயே) 1162.
3. ஜெ.அம்பிகா (சுயே) 47.
4. சு.சுகன்யா (சுயே) 297.
5. மு.நீலாவதி (காங்) 95.
6. பிரேமாலில்லிஜாக்குவின் (பாமக) 103.
7. ரா.மல்லிகா (திமுக) 78.
8. ந.ஜெயபிரியா (அதிமுக) 285.



அ.தி.மு.க. ஆட்சி மீது வாக்காளர்கள் நம்பிக்கை: பல்டி அடிக்கும் விஜயகாந்த்

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நான் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து எனது கருத்துக்களை எடுத்துச்சொல்லும் வாய்ப்பினை பெற்றேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் தே.மு.தி.க. ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பதும், அதனுடைய சின்னமான முரசு சின்னம் தமிழ் நாட்டில் மூலை, முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
 
இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓயாது உழைத்த கழகக் கண்மணிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
பொதுவாக ஆளும் கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் நலத் திட்டங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கின்ற நிதியுதவியும் அப்பொழுது தான் வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டு. அதுவும் இந்த ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட ஆக வில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆட்சியின் மீது உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை வைப்பதும், அரசின் நலத்திட்டங்கள் தங்களுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கைதான்.
 
ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் தே.மு.தி.க. தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொண்டுள்ளது என்பதும், தே.மு.தி.க. துவங்கப்பட்ட நாளில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே பழக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
தமிழ்நாட்டு மக்களிடையே அங்கீகாரம் பெற்ற அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதும், இன்றைய இளைஞர்களின் மாபெரும் இயக்கமாக மலர்ந்து வருகிறது என்பதும் வரலாறாகும். விவசாயி தனது விளை நிலத்தில் பயிரிடுகிறபொழுது ஒரு மகசூல் பொய்த்துப் போகிறது என்பதாலேயே, விளைநிலமும் கெட்டு விடுவதில்லை. விவசாயியும் நம்பிக்கையை இழந்து விடுவதில்லை. அடுத்த மகசூலுக்கு அவர் தயாராவது இயற்கையே.
 
அதுபோல் தே.மு.தி.க. தமிழ்நாட்டு மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து தொண்டாற்ற தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு ஆட்படுதல் போன்றவற்றையெல்லாம் மீறி, தே.மு.தி.க. அணியினருக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது இதய மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



உள்ளாட்சித் தேர்தல்-10 மாநகராட்சியையும் இழந்து திமுக படு தோல்வி!

 
 
 
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. 2006 தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அக்கட்சி இந்த தேர்தலில் 10 மாநகராட்சிகளையும் இழந்து பெரும் அடியை வாங்கியுள்ளது. அது உருவாக்கிய புதிய மாநகராட்சிகளிலும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது திமுக. பெரும்பாலான இடங்களில் திமுகவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.
 
கடந்த தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றதிமுகவால் இந்த முறை ஒரு மாநகராட்சி மேயர் பதவியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. மேலும் கடந்த முறை மிக படோடபமாக வெற்றி பெற்ற சென்னையை இந்த முறை மிகப் பரிதாபமாக அது இழந்துள்ளது. ஆரம்பத்தில் வேலூரில் மட்டும் முன்னணியில் இருந்தது. ஆனால் அதுவும் பின்னர் கை நழுவிப் போனது. அனைத்து இடங்களிலும் அக்கட்சி 2வது இடமே கிடைத்தது.
 
மதிமுகவிடம் படு தோல்வி
 
இதை விட கேவலமாக குளித்தலை நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுகவிடம் தோல்வியைத் தழுவியது திமுக.
 
சில இடங்களில் சுயேச்சைகள் திமுகவை விட முன்னணியில் இருந்தனர். கூட்டணியை இழந்ததால் ஓரளவு பாதிப்பை சந்தித்துள்ளது திமுக என்பது இந்தத் தேர்தலி்ல கண்கூடாகத் தெரிந்து விட்டது. அதேசமயம், கூட்டணியைப் பிரிந்ததால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை, மாறாக மிகப் பெரிய வெற்றியை அது பெற்றுள்ளது.
 
பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்திருந்தால் திமுகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், பாமகவும், காங்கிரஸும் இந்தத்தேர்தலில் மகா மோசமான தோல்வியைத் தழுவி அவர்களின் வாக்கு வங்கி ஒரு மாயை என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஒருகாலிப் பெருங்காய டப்பா என்பதை காட்டி விட்டது.
 
வார்டு உறுப்பினர் பதவியைப் பொறுத்தவரை கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது திமுக. அதிமுகவுக்கு இணையாக வார்டு உறுப்பினர் பதவியை போட்டி போட்டு திமுக வாங்கியுள்ளது.
 
அரசு ஊழியர்கள் ஆதரவு திமுகவுக்கே
 
திமுகவைப் பொறுத்தவரை அது முன்னணியில் இருந்த ஒரே 'ஏரியா' தபால் வாக்குகள் மட்டும்தான். தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுக்கள் பெரும்பாலானவை திமுகவுக்கே கிடைத்துள்ளது. இது பெரும் வியப்பைத் தருகிறது. ஆட்சி மாறியும் கூட அரசு ஊழியர்கள் தொடர்ந்து திமுகவுக்கே ஆதரவாக இருந்து வருவது இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது.



Friday, 21 October 2011

உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் அதிமுக புதிய கூட்டணி

 
 
 
உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் அதிமுக புதிய கூட்டணி அமைத்துள்ளதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதில் பல இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலிலும் திமுகவுக்கு தோல்வி தான்.
 
இந்த நிலையில் தோல்வி குறித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது,
 
இந்த தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகின்றது என்றும், இதனால் திமுகவிற்கு எதிர்காலம் இல்லை எனவும் சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை வைத்து திமுகவை தவறாக எடை போடக் கூடாது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் சகஜம்.
 
ஏனென்றால் கடந்த முறை பென்னாகரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது. அதே போல புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்தது.
 
எனவே, தற்போதுள்ள நிலவரத்தை வைத்து திமுகவின் எதிர்காலத்தை யாரும் தவறாக எடை போடக் கூடாது. திமுகவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு.
 
சட்டசபை தேர்தலில் அதிமுக பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்



முதல் மேயர் முடிவு-தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா வெற்றி

 
 
 
தூத்துக்குடி மேயர் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா வெற்றி பெற்று மேயராகியுள்ளார்.
 
இங்கு நடந்த மேயர் தேர்தலில் சசிகலா புஷ்பாவுக்கு 65,050 வாக்குகள் கிடைத்தன. திமுக வேட்பாளர் பொன். இனிதாவுக்கு 41,294 வாக்குகள் கிடைத்தன.
 
மதிமுக வேட்பாளர் பாத்திமா 29,336 வாக்குககளை அள்ளி 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 4வது இடத்தைப் பிடித்த தேமுதிகவுக்கு 7407 ஓட்டுக்களே கிடைத்தன.
 
தூத்துக்குடி நகராட்சி 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நகராட்சித் தலைவராக இருந்த கஸ்தூரி தங்கம் மேயராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் மாநகராட்சியான பின்னர் நடந்துள்ள முதல் தேர்தல் இது. இதன் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சசிகலா புஷ்பா.
 
 


மதிமுகவுக்குப் புதிய 'மறுமலர்ச்சி'!

 
 
 
மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.
 
அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.
 
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
கோவையில் 11,000க்கும் மேலாகன வாக்குகளையும், திருச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளையும், அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.
 
மேலும் ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தது. கடைசி நேரத்தில் அது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
 
இதுதவிர பல இடங்களில் மதிமுகவுக்கு அவர்களுக்கென்றே இருக்கும் 4000, 5000 வாக்குகள் அப்படியே கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் மதிமுகதான் தனது வாக்கு நிலை கரையாமல் நிலையாக உள்ளதை நிரூபித்துள்ள ஒரே கட்சி என்று சொல்ல முடியும் அளவுக்கு அதற்கான வாக்குகளை தொடர்ந்து பெற்று வருகிறது.
 
நிச்சயம் இந்த தேர்தல் மதிமுகவுக்கு நிச்சயம் மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ள தேர்தல் என்று கூறலாம். நிச்சயம், லோக்சபா தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா முன்வருவார் என்பதில் சந்தேகமில்லை.