திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மண்டவாடி கிராமத்தில் உள்ள சின்னமண்டவாடி வாக்குச்சாவடி அருகே கட்சி தொண்டர்கள், பிரமுகர்கள் நின்று கொண்டு, தங்களுக்கு வாக்களிக்கும்படி, வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய சுமார் 15 நிமிடத்தில், தி.மு.க.வை சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் கிருஷ்ணமூர்த்தி (வயது 32), பழனிவேல் (37), கருப்புசாமி (46) ஆகியோர் தேர்தல் அலுவலர்களிடம், வெளியே நிற்கும் கட்சிகாரர்களை அப்புறப்படுத்துங்கள் என கூறினர்.
இதை கேட்ட கட்சிக்காரர்களுக்கும், பூத் ஏஜெண்டுகளுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பூத் ஏஜெண்டுகள் 3 பேரும் சேர்ந்து வாக்குச்சீட்டுகளை கிழித்தும், அடையாள மை பாட்டில்களை கீழே தூக்கி போட்டு உடைத்தும், மையை கீழே கொட்டியும் ரகளையில் ஈடுபட்டனர். அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர்.
இதனால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குள் செல்லாமல் ஆங்காங்கே மரத்தடியில் நின்றனர். இது தொடர்பாக தி.மு.க. பூத் ஏஜெண்டு கிருஷ்ணமூர்த்தி, பழனிவேல், கருப்புசாமி ஆகியோரை கைது செய்தனர். இதனால் சுமார் 11/2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
பின்னர் காலை 8.45 மணிக்கு அமைதியாக வாக்குப்பதிவு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, கூலம்பட்டியைச் சேர்ந்த சுமதி உட்பட 7 பேர் போட்டியிட்டனர்.
நேற்று மாலை 4 மணிக்கு, கூலம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்த, தலைவர் வேட்பாளர் சுமதியின் கணவர் பாலமுருகன், அவரது தம்பி உமாமகேஸ்வரன் மற்றும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் விஜய ஆனந்த் உள்ளிட்ட 10 பேர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை மிரட்டி, 85 வாக்குச் சீட்டுகள் மற்றும் முத்திரை குத்தும் கட்டை, மை பேடு உள்ளிட்டவைகளை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு 4 ஓட்டுகள் இந்த சம்பவம் தொடர்பாக செம்பட்டி போலீசார், ஊராட்சி தலைவர் வேட்பாளர் சுமதியின் கணவர் பாலமுருகன், உமாமகேஸ்வரன் விஜய ஆனந்த் உள்பட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
மதுரை அருகே தொப்புலாம்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 3 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்த போது இரு தரப்பினர் தங்களது வேட்பாளர்களுக்கு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரும் அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் மோதிக்கொண்டனர். இதில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்ததும் அங்கு ஓட்டுப்போட வந்திருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். அப்போது மோதலில் ஈடுபட்ட ஒருதரப்பை சேர்ந்தவர்கள் கும்பலாக சென்று மறியல் செய்ய முயன்றனர்.
போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். fதிண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு ஊராட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற போது, வேட்பாளர்கள் ஆதரவு திரட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அரிவாளால் வெட்டிக்கொண்டனர்.
இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பழனியை அடுத்த மொல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஒரு பெண் வாக்காளரின் ஓட்டுச்சீட்டை தி.மு.க. பூத் ஏஜெண்டு பொன்ராஜ் மற்றும் அக்கட்சியை சேர்ந்த செங்கோடன் ஆகியோர் வாங்கி பெட்டிக்குள் போட முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த கல்வீச்சில் அ.தி.மு.க.வை சேர்ந்த சின்னத்துரை (வயது 25) என்பவரும், சப்- இன்ஸ்பெக்டர் மதனகலாவும் காயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வாக்குச்சாவடிகளின் வெளியே ஓட்டப்பட்டு இருந்த வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் வரிசையும் வாக்குச்சாவடிகளுக்குள் இருந்த பட்டியலின் வரிசையும் மாறி இருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் பின்னர் தங்கள் ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு சிறிது நேரம் தாமதம் ஆனது.
நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பாறையடி வாக்குச்சாவடி முன்பு, தங்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை என்று கூறி பலர் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து பூத் சிலிப்புகள் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
ஈரோடு மாவட்டம் கொண்டையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஒரு சின்னத்தில் குத்திய மை அடுத்த சின்னத்திற்கும் பரவியதாக ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கணேசன் என்பவர் புகார் கூறியதோடு, அந்த வாக்குச்சாவடியையும் இழுத்து பூட்டினார். இதனால் ஓட்டுப்போட வந்த வாக்காளர்கள் திகைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சென்று அவரிடம் பேசி சமாதானம் செய்தனர்.
இந்த சம்பவத்தின் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. வால்பாறை நகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் புதிய தமிழகத்தை சேர்ந்த எல்.சாமி என்பவர் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த போது முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள் சிலர் அவரை காரில் கடத்தி சென்றதாக தகவல் வெளியானது.
காலை 10 மணி அளவில் அவர் புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் ராம்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிலர் தன்னை கடத்திச்சென்று காட்டுப்பகுதியில் வைத்து இருப்பதாகவும், தான் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் கூறினார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீசார் வேட்பாளர் சாமியை தேடி வந்த நிலையில், மாலை 6.45 மணிக்கு அவர் வீடு திரும்பினார். சாமி முன்னுக்குப்பின் முரணாக பேசுவதால் அவர் கடத்தப்பட்டது உண்மைதானா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். fஅரக்கோணம் அருகே செம்பேடு கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்குச்சீட்டில் 4-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பதிலாக, 5-வது வார்ட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து அதிகாரிகள் வந்து விசாரணை நடத்திய போது 5-வது வார்டுக்கு தர வேண்டிய வாக்குச்சீட்டுகள் 4-வது வார்டுக்கு மாற்றி தரப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த தவறு சரி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தஞ்சையில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், பூத் ஏஜெண்டுகள் ஓட்டுப்போடுவது தொடர்பாக தி.மு.க.- அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு இரு தரப்பு தொண்டர்களும் கூடி மோதிக் கொண்டனர்.
இதில் 29-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அன்பழகனின் சட்டை கிழிந்தது. தி.மு.க. பூத் ஏஜெண்டு சீனிவாசனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் ஒருவரும் காயம் அடைந்தார். இதனால் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
விருத்தாசலம் அருகே கழுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்குள் நேற்று மாலை 4 மணி அளவில் 5 பேர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதோடு, 250 வாக்குச்சீட்டுகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இதனால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அந்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். குத்தாலம் தாலுகா வழுவூர் வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி தி.மு.க.வினர் புகார் தெரிவித்ததோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment