Followers

Friday, 21 October 2011

லோக்சபா சீட் 'பேரத்தில்' யாருடைய கை ஓங்கும்?

 
 
 
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர் வரும் லோக்சபா தேர்தலின்போது சீட் பெறுவதில் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
 
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளுமே தனியாகவே போட்டியிட்டன. முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, மதிமுக, பாஜக உள்ளிட்டவை தனியாகவே போட்டியிட்டன.
 
இதில் கடைசி நேரத்தில் தேமுதிகவுடன் சிபிஎம் வந்து சேர்ந்தது. சிபிஐ அணியில் இணைந்தாலும் கூட அது ஒரு கணக்காகவே தெரியவில்லை. கடைசி வரை அதிமுக மீதான பாசத்தை சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கைவிடவில்லை.
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகளை இணைத்து ஒரு புதுக் கூட்டணி அமைத்தது. அதேசமயம் கடைசி நேரத்தில் தாங்கள் போட்டியிடாத இடத்தில் பாமகவுக்கு ஆதரவு என்று அறிவித்தது.
 
பாமகவும் தனித்தே போட்டியிட்டது. அதேசமயம், தாங்கள் போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவு என்று அறிவித்தது.
 
மதிமுக தனியாகவே நின்றது, காங்கிரஸும் யாருடனும் சேரவில்லை. இப்படி அத்தனைக் கட்சிகளும் தனியாகவே நின்றது வித்தியாசமான காட்சியாகவே இருந்தாலும், இவர்களின் மனக் கணக்கு மக்களுக்குத் தெரியாமல் போகவில்லை.
 
இந்தத் தேர்தலில் தங்களது வாக்கு வங்கி என்ன என்பதை பரீட்சித்துப் பார்ப்பதே அத்தனைக் கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இதை வைத்து எதிர் வரும் (2012) லோக்சபா தேர்தலில் கூட்டணி சேரவும், அதை வைத்து பேரம் பேசவும் பயன்படுத்திக் கொள்வது என்பதே சிறிய கட்சிகள், ஜாதிக் கட்சிகளின் முக்கிய எண்ணம்.
 
ஆனால் தற்போதுள்ள நிலவரத்தைப் பார்த்தால் பல சிறிய கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகளுக்கு நிலைமை கலவரமாகியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்கு பெரிய அளவில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இவர்களால் முன்பு போல வலுவான பேரத்தில் ஈடுபட முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
 
தான் ஒரு வலுவான வாக்குப் பிரிக்கும் கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை தேமுதிக நிரூபித்துள்ளது. ஆனால் முன்பு போல பெரிய அளவில் அது வாக்குகளை பிரிக்கவில்லை. மாறாக மிகச் சிறிய அளவிலான பாதிப்பையே அது பெரிய கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அதிமுகவை சற்றும் பாதிக்கவில்லை தேமுதிக வேட்பாளர்கள். மாறாக திமுகவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் சில இடங்களில்.
 
ஜாதிக் கட்சிகளும் கூட இந்த முறை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் தலைமையில் அமைந்த இஸ்லாமியக் கூட்டணி திருப்பூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் மட்டுமே கணிசமான வாக்குகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளன. மற்ற இடங்களில் இவர்களைக் காணவில்லை.
 
தற்போதைய நிலையில், அதிமுகவின் கையே மிகப் பெரிதாக ஓங்கியுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளாக இருந்த தேமுதிக தனது நிலையை ஆணித்தரமாக இந்த தேர்தலில் நிரூபிக்க முடியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதேபோல அதிமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் பிரிந்து போன கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
 
அதேபோல திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து போன பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவையும் கூட தங்களது வாக்கு வங்கி அப்படியே உள்ளது என்பதை நிரூபிக்கத் தவறியுள்ளன.
 
இருப்பினும் வாக்கு வங்கி கரைந்து போய் விட்டதாக கருதப்பட்ட மதிமுகவுக்கு ஆங்காங்கு சொல்லிக் கொள்ளும்படியாக வாக்குகள் கிடைத்திருப்பது கவனிக்கத்தக்தாகும். இது ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படலாம்.
 
மொத்தத்தில் வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுகவிடம் அவற்றின் கூட்டணிக் கட்சிகளாக சேரக் கூடிய வாய்ப்புள்ள கட்சிகள் பெரிய அளவில் ஆணித்தரமாக பேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



No comments:

Post a Comment