Followers

Tuesday, 18 October 2011

ராகுலைத் தேடி வந்த அன்னா குழு- 'டைம்' தராமல் இழுத்தடித்த ராகுல்

 
 
 
ராகுல் காந்தியைப் பார்த்துப் பேசுவதற்காக அன்னா ஹஸாரேவின் சொந்த ஊரிலிருந்து ஒரு குழு டெல்லி வந்தது. ஆனால் அவர்களுக்கு ராகுல்பா பார்க்க நேரம் கொடுக்காமல் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இழுத்தடித்ததால் அன்னா ஹஸாரே குழுவினர் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளனராம்.
 
அன்னா ஹஸாரேவின் ராலேகான் சித்தி கிராமத்திலிருந்து அன்னாவின் தனிச் செயலாளர் சுரேஷ் பதாரே தலைமையில் ஒரு குழு டெல்லி வந்துள்ளது. இந்தக் குழுவினர் ராகுல் காந்தியைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். ராகுல் காந்தி அலுவலகத்தை நாடிய அவர்களுக்கு ராகுல் காந்தியைப் பார்க்க முன்கூட்டியே நேரம் வாங்கியிருக்க வேண்டும். இப்படியெல்லாம் திடீரென வந்து பார்க்க முடியாது என்ற பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதனால் அன்னா ஹஸாரே குழுவினர் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். இதுகுறித்து பதாரே கூறுகையில், எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லாமல்தான் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்த பிறகுதான் எங்களை வைத்து பல சர்ச்சைகள் தோன்றியதை உணர்ந்தோம். இங்கு நிறைய ஈகோ பிரச்சினை உள்ளது. இப்போது நாங்கள் ராகுலை சந்திக்க விரும்பவில்லை. ஊருக்கே திரும்பிச் செல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்.
 
ராலேகான் சித்தி கிராமத் தலைவர் ஜெய்சிங் ராவ் மபாரி கூறுகையில், எங்களுக்கு ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பி.டி.தாமஸிடமிருந்து நேரம் ஒதுக்கியிருப்பதாக அழைப்பு வந்தது. அதை நம்பித்தான் நாங்கள் வந்தோம். ஆனால் இப்போது நாங்கள் ராகுல் காந்தியை சந்திக்க விரும்பவில்லை. அவரைப் பார்ப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றார் கோபத்துடன்.
 
ஆனால் தனது அலுவலகத்திலிருந்து அப்படி எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று தாமஸ் மறுத்துள்ளார்.
 
ஹிஸார் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக அன்னா குழுவினர் தீவிரப் பிரசாரம் செய்தனர். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு படு தோல்வியைச் சந்தித்துள்ளார். இதனால் அன்னா குழுவினர் மீது காங்கிரஸார் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இதுவே ராகுல் காந்தி இழுத்தடித்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.



No comments:

Post a Comment