Followers

Friday 11 November 2011

விஜயகாந்த் பொதுமக்கள் மோதல்-கைகலப்பில் இறங்கிய தேமுதிகவினர்

 
 
 
திருப்பூரில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரான விஜயகாந்த்தை பொது மக்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொது மக்களுக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு விஜய்தாந்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
 
பார்க்காமலேயே காதல் மாதிரி சட்டசபையில் பேசாமலேயே பெரும்பாலான நேரத்தை கழித்தவர் விஜய்காந்த்.
 
இந் நிலையில் திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல விஜயகாந்த் கோவை வந்தார். கோவையில் இருந்து காரில் திருப்பூர் வந்த அவர், காங்கயம் ரோட்டில் உள்ள சத்யா நகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை விஜயகாந்த் பார்வையிட்டார்.
 
வீடு, உடமைகளை இழந்த பெண்கள் கண்ணீருடன் விஜயகாந்திடம் புகார் கூறினா். மீட்பு, நிவாரண பணிகள் தாமதமாக நடப்பதாகவும், வீடுகளில் தேங்கிய சேறு, சகதிகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் யாருமே வரவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
 
உடனே, அவர்களிடம் நான் அரசியல் பண்ண இங்கு வரவில்லை. உங்களுக்கு என்ன நிவாரண பணிகள் வேண்டுமோ, அதை கேளுங்கள். என்னால் முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்கிறேன். பாதிக்கப்பட்ட உங்களுக்கு உரிய வெள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு சட்டசபையில் நான் பேசுவேன் என்றார்.
 
தொடர்ந்து அந்த ஏரியாவை ஒரு சுற்று சுற்றி வந்த விஜய்காந்த், பி.கே.ஆர்.காலனி, வெள்ளியங்காடு, முத்தையன் நகர் பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார்.
 
இந் நிலையில் நிவாரண உதவி கிடைக்காத பெரியதோட்டம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் காங்கயம் ரோடு தொலைபேசி நிலையம் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. தங்கவேலு சாலை மறியல் நடந்த இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினார். ஆனால் சாலை மறியலை கை விட மறுத்துவிட்டு மேயருக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
 
பொதுமக்கள் சாலை மறியல் செய்வதை அறிந்த விஜய்காந்த், அந்தப் பக்கமாக வண்டியைத் திருப்பினார். அவரிடம் போலீசார், சாலை மறியல் நடக்கிறது. அதனால் மாற்று பாதையில் செல்லுங்கள் என்றனர்.
 
ஆனால், அந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டுவிட்டுத் தான் போவேன் என்று வசனம் பேசியபடி விஜய்காந்த் அங்கு சென்றார்.
 
விஜயகாந்த் வந்ததை அறிந்து அவரது காரை மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது அங்கு நின்றிருந்த சிலர், சட்டசபையில் பேசதாவர் இப்ப எதுக்கு இங்கே வந்தாரு என்று கேட்டபடி விஜயகாந்துக்கு எதிராக கோஷமிட்டனர். சிலர் அவரது காரை கைகளால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தனர்.
 
இதையடுத்து அவர்கள் தேமுதிக தொண்டர்கள் தாக்கினர். இதைப் பார்த்த பொது மக்கள் தேமுதிகவினரை திருப்பி அடித்தனர்.
 
இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விஜயகாந்தை பாதுகாப்பாக காரில் ஏற்றி அங்கிருந்து உடனடியாக திருப்பி அனுப்பி வைத்தனர்.



ஹசாரே இயக்கத்துடன் தொடர்பு இல்லை- ஆர்.எஸ்.எஸ்

 

ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே இயக்கத்துடன் அதிகார ப்பூர்வமாக தொடர்பு இல்லை என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்: சமூக சேவகர் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்துக்கு எங்களது ஆதரவு உண்டு. ஆனால் ஆதரவு தர வேண்டும் என்று எங்களிடம் யாரும் அதிகாரப்பூர்வமாக கேட்கவில்லை. நாங்களும் அதிகாரப்பூர்வமாக அவர்களின் இயக்கத்துக்கு ஆதரவு அளிக்க வில்லை. அதே சமயம், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் ஹசாரேயின் இயக்கத்தில் சேர தடையில்லை. ஆதரவு அளிக்கவும் தடையில்லை என்றார் அவர்.

ஹசாரேயின் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ் முன்னின்று நடத்தி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ""அவருடன் நாங்கள் இருந்தோம். இன்றும் இருக்கிறோம். ஹசாரேவுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் உள்ளதாக மக்கள் நினைக்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய முடியும் " என்று அவர் பதில் அளித்தார். தங்கள் இயக்கத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு அளிக்கவில்லை என்று ஹசாரேவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் ஹசாரேயின் இயக்கத்துக்கும் தொடர்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், மோகன் பாகவத் அதை மறுக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று, சொந்த ஊரான ராலேகான் சித்தியில் ஹசாரேவும் மறுப்பு தெரிவித்துள்ளார். "" எங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை. சோனியா காந்திக்கூட எங்கள் மீது இரு தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியுள்ளார். யார் எதை சொன்னாலும் கவலையில்லை" என ஹசாரே கூறியுள்ளார்.

(di)


Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், இந்தியா, ஊழல், ஹசாரே

திருப்பூர் மேயர் விரட்டியடிப்பு

 
 
 
திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேயர் விசாலாட்சி இன்று நேரில் பார்வையிடச் சென்றார். தேர்தலின்போது வாக்குகள் கேட்பதற்காக மட்டும் அனைவரும் வருவதாகவும், இதுபோன்று பாதிக்கப்படும் நேரங்களில் உடனடியாக யாரும் வருவதில்லை என்றும் அப்போது பொதுமக்கள் புகார் கூறினர்.
 
ஆயிரக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய மேயர், அதிகாரத் தோரணையில் பேசியதால், அவரையும் அதிகாரிகளையும் பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
 
 
 


ஓவராப் பாராட்டுறீங்களே..அத்வானி அழுகை!

 
 
 
பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அவரை பலரும் வெகுவாகப் பாராட்டிப் பேசியதால் ஆனந்தக் கண்ணீர் விட்டார். தொடர்ந்து அவர் கண்ணீர் சிந்தியபடி இருந்ததால் கூட்டத்தினரும் நெகிழ்ந்தனர்.
 
அத்வானி பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அரசியலுக்கும், பாஜகவுக்கும், அத்வானி ஆற்றிய சேவையை புகழ்ந்து பேசினர். இதைக்கேட்டதும் சிலமுறை அத்வானிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவரால் ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.
 
ஒரு கட்டத்தில் அவர் மிகவும் நெகிழ்ந்து போய் விட்டார்.இதனால் மேடையை விட்டு வெளியேறிய அவர் சிறிது நேரம் கழித்தே திரும்பி வந்தார். நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி தனது பிறந்த நாளுக்காக யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இன்று டெல்லி வந்திருந்தார்.



எங்களது சாதனையை ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கட்டும்-ராஜபக்சே

 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஜெயலலிதாவும் இதை நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
 
மாலத்தீவில் நடைபெறும் 17வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜபக்சே அங்கு டைம்ஸ் நவ் டிவிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்ற அச்சம் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு வரவேற்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
 
அந்த பேட்டி விவரம்:
 
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மீண்டும் தலை தூக்க முயற்சிக்கிறார்கள் என்றும், போராளிகளின் உணர்வுகளை அப்படியே தக்க வைக்க முயற்சிப்பதாகவும் உளவுத் தகவல்கள் கூறுகின்றன. அது உங்களுக்கும் தெரியுமா?
 
பதில்: இங்கிலாந்திலும் சரி, கனடாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, அல்லது உலகின் பிற நாடுகளிலும் சரி, விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் பணம் வசூலிக்கிறார்கள், ஒருங்கிணைய முயற்சிக்கிறார்கள், ரகசியமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இதை நாங்கள் அறிவோம்.
 
எங்களிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் மூலம் இதுகுறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அனுதாபிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். மீண்டும் போரில் குதிக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். புலிகளின் பிரசாரம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
 
கேள்வி: தமிழர் பகுதிகளில் மறு குடியமர்த்தல், மறு சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து பேசி வருகிறீர்கள். இதுதொடர்பாக உங்களுக்கு உதவி வரும் நட்பு நாடான இந்தியா, இதுகுறித்த நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைந்துள்ளதா?
 
பதில்: நாங்கள் என்ன செய்து வருகிறோம் என்பதை அங்கு வந்து பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவும் சரி, பிற நாடுகளும் சரி எங்களது பணிகளைப் பார்த்து சென்றுள்ளனர். அனைவருக்கும் இதில் திருப்தியே.
 
கேள்வி: தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா இலங்கை விவகாரத்தில் தீவிர அக்கறை காட்டுகிறார். அவர் உண்மை நிலையை அறிய இலங்கைக்கு வர விரும்பினால் நீங்கள் வரவேற்பீர்களா?
 
பதில்: கண்டிப்பாக, நிச்சயம் வரவேற்போம். அவர் தாராளமாக வந்து அங்கு என்ன நடக்கிறது, உண்மை நிலவரம் என்ன என்பதை நேரிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. தமிழர் பகுதிகளில் நாங்கள் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். இதை ஜெயலலிதாவும் நேரிலேயே அறிந்து கொள்ளலாம்.
 
கேள்வி: சீனா, இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து அங்கு ஆழமாக நிலை பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்தியாவுடனான இலங்கையின் உறவில் மாற்றம் வருமா?
 
பதில்: நான் ஆரம்பத்திலிருந்தே ஒன்றை உறுதியாக சொல்லி வருகிறேன். இந்தியா எங்களது தொப்புள் கொடி உறவு. இந்தியாவுக்குப் பிறகுதான் சீனா. இந்தியா எங்களது உறவினர் என்றால் சீனா எங்களது நண்பர். நாங்கள் மட்டுமல்ல ஐரோப்பிய யூனியனும் கூட சீனாவின் உதவியை நாடுகிறது.
 
எங்களது நாட்டில் துறைமுகம், விமான நிலையம், மின் நிலையம் ஆகியவை அமைக்கும் பணியில் ஈடுபட நாங்கள் முதலில் இந்தியாவைத்தான் நாடினோம். இந்தியாவுக்குத்தான வாய்ப்பளித்தோம். பிறகுதான் சீனாவிடம் சென்றோம்.
 
எங்களைப் பொறுத்தவரை இந்தியாதான் முதலில். பின்னர்தான் சீனா. சீனா மட்டுமல்ல, அமெரிக்காவும் கூட இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ளது.
 
சீனாவுடனான எங்களது நட்பால், இந்தியாவுடனான உறவு கெடாது. அதற்கான வாய்ப்பில்லை. அதற்கான உறுதிமொழியை நாங்கள் இந்தியாவிடம் ஏற்கனவே கொடுத்துள்ளோம் என்றார் ராஜபக்சே.
 
தமிழக மீனவர்களை தொடர்ந்து வெறித்தனமாக இலங்கைக் கடற்படை தாக்குவது குறித்தோ, கச்சத்தீவு பிரச்சனை குறித்தோ கேள்வி ஏதும் கேட்கப்படவில்லை.



Wednesday 9 November 2011

அதிமுக-தேமுதிகவை பிரித்தது யார்? : விஜயகாந்த் பேச்சு

 
 
 
அதிமுகவுடன் தேமுதிகவை சேர்த்ததும் பத்திரிகைகள்தான், அதில் இருந்து பிரித்ததும் பத்திரிகைகள் தான் என்று குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசினார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 1000 பேருக்கு குர்பானி (அரைக்கிலோ இறைச்சி) வழங்கப்பட்டது.
 
நிகழ்ச்சியை தொடங்கி அக்கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் பேசியதாவது: இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே பக்ரீத் பண்டிகையாகும். கடந்த 3 வருடங்களாக பக்ரீத் பண்டிகை முன்னிட்டு குர்பானி வழங்கி வருகிறேன். இப்போது மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் அவதிப்படுகின்றனர். அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வருகின்றன.
 
அவர்கள் ஆளும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் ஏரி, குளங்கள் உடையாது. தமிழகம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தண்ணீரில் மிதக்கிறது. அண்ணா நூலகத்தை மாற்ற இருக்கிறார்கள். அண்ணா நூலகம் அருகே அண்ணா பல்கலைக்கழகம் இருக்கிறது.
அந்த நூலகத்துக்கு சென்று ஏராளமான மாணவர்கள் படித்து பயன் அடைகின்றனர். அக்கட்டிடத்தை விட வசதி குறைந்த டிபிஐ வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்துக்கு, நூலகத்தை மாற்ற காரணம் என்ன?.
 
கடந்த உள்ளாட்சி தேர்தலில் மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு கிடைக்க வேண்டும் என்றால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று மக்களை பயமுறுத்தினர். கலைஞரை ஆட்சியில் இருந்து நீக்கவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன். இப்போதும் எதிர்க்கட்சியாக உள்ளேன். எதிரிகட்சியாக அல்ல. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இதற்கு முன் ஆண்ட அரசும், இப்போது ஆளும் அரசும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகின்றன.
 
ஆவின்பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி மற்றும் இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Sunday 6 November 2011

தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றத்தின் பின்னணி என்ன?

 
 
 
தமிழக அமைச்சரவை மாற்றத்தில், சென்னை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது.
 

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆறு பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனால், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அமைச்சரான சண்முகவேலு பதவியை இழந்தார். ஏற்கனவே இவர் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியிலும் அமைச்சராக இருந்து பதவியை இழந்தவர். இந்த ஆட்சி அமைந்த போது, மிகவும் முக்கியமான தொழில் துறை ஒதுக்கப்பட்டது. சில நாட்களிலேயே அது பறிக்கப்பட்டு, ஊரக தொழில் துறை ஒதுக்கப்பட்டது. தற்போது, அமைச்சர் பதவியே பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மாற்றாக, திருப்பூர் மாவட்டத்தில் வேறு ஒருவருக்கு பதவி வழங்கவில்லை.
 

பதவி பறிக்கப்பட்ட மற்றொரு அமைச்சரான ஆர்.பி.உதயக்குமாரை பொறுத்தவரை, விருதுநகர் மாவட்டத்துக்கான பிரதிநிதியாக பதவி அளிக்கப்பட்டது. ஆனால், இவர் மதுரையைச் சேர்ந்தவர். இதனால், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் அதிருப்தியில் இருந்தனர். இதுதவிர, அமைச்சராக இவரது செயல்பாடும், தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இவரது பதவி பறிக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டச் செயலரான ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 

பதவி பறிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியிலும் சில காலம் அமைச்சராக பதவி வகித்து, பின்னர் பதவி பறிக்கப்பட்டவர். இந்த ஆட்சியில் முக்கிய துறையான அறநிலையத் துறை ஒதுக்கப்பட்ட போதிலும், தூத்துக்குடி மாவட்ட உள்கட்சி பிரச்னையால் இவர் பதவியை இழந்துள்ளார். எனினும், தூத்துக்குடி மாவட்டத்தில் செல்லப்பாண்டியனுக்கு இடையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

என்.ஆர்.சிவபதியை பொறுத்தவரை, முதலில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சராக தான் நியமிக்கப்பட்டார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மரியம் பிச்சை இறந்ததால், இவருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக, கால்நடை மற்றும் பால்வளத் துறை ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் இவரது செயல்பாடு சிறப்பாக இல்லை. மேலும், திருச்சி மேற்கு இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் இவரது செயல்பாடு, தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.இதன் காரணமாக, உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், சிவபதியிடம் இருந்து மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது. அப்போதே இவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்று வலுவாக நம்பப்பட்டது. அதன்படி, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதிக்கு மாவட்டச் செயலர் பதவியும், தற்போது அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
 

சென்னையில் இருந்து எப்போதுமே அதிகளவில் அமைச்சர்கள் இடம்பெறுவர். முந்தைய தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி என தலைவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தனர். இந்த அ.தி.மு.க., ஆட்சியில், சென்னையில் இருந்து வெற்றி பெற்றவர்களில், செந்தமிழன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம்கிடைத்தது.
 

இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் போது, ஏற்கனவே வகித்த செய்தித் துறையுடன் கூடுதல் பொறுப்பாக, சிறை, சட்டம் போன்ற துறைகள் செந்தமிழனிடம் வழங்கப்பட்டது. இவ்வளவு முக்கிய துறைகள் இருந்தும், இவர் மீது கட்சித் தலைமைக்கு பல்வேறு விஷயங்களில் அதிருப்தி ஏற்பட்டது. இதனால், செந்தமிழன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து கோகுல இந்திரா மட்டுமே அமைச்சர் பதவியில் உள்ளார்.அதேநேரத்தில், பக்கத்து மாவட்டமான திருவள்ளூரில் இருந்து இரண்டு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே இடம்பெற்றுள்ள ரமணா தவிர, திருவள்ளூர் மாவட்டச் செயலரான மூர்த்திக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
 

நீலகிரி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புத்திசந்திரனுக்கு, முதலில் சுற்றுலா துறை தான் ஒதுக்கப்பட்டிருந்தது.
அமைச்சரவை மாற்றத்தின் போது, மிகவும் வலுவான இலாகாவான உணவுத் துறை இவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அமைச்சர் பதவியே பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக நீலகிரி மாவட்டத்தில் யாருக்கும் பதவி அளிக்கப்படவில்லை.
 

இந்த அ.தி.மு.க., ஆட்சியில் முதலில் அமைச்சர்களாக பதவி ஏற்றவர்களில், மரியம் பிச்சை, கருப்பசாமி ஆகியோர் மரணமடைந்தனர். இதுதவிர, இசக்கி சுப்பையாவிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.புதிதாக அமைச்சராக அறிவிக்கப்பட்டவர்களில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த தாமோதரனுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் இருந்து எஸ்.பி.வேலுமணி அமைச்சராக உள்ளார்.
 

மறைந்த அமைச்சர் கருப்பசாமி, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பதிலாக அதே இனத்தைச் சேர்ந்தவருக்கு தான் அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், பரமக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் காரணமாக, ஆதிதிராவிடர்களுக்கு எதிரான அரசு என்ற எண்ணம் மக்களிடம் இருப்பதாக ஒரு கருத்து நிலவியது. அதை சரிகட்டும் வகையில் தான், அதே பரமக்குடி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தர்ராஜுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
 

 


உன்னைக் கொலை செய்வோம் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனுக்கு மிரட்டல்!

 
 
 
குறிப்பிடுகிற ஆளிடம் ரூ. 20 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் உன்னைக் கொலை செய்வோம் என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அதிமுக அவைத் தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவரது வீடு பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ளது. இந்த வீட்டுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
 
அக்கடிதத்தில், நான் குறிப்பிடுகின்ற ஆளிடம் ரூ. 20 லட்சத்தை கொடுத்து விட வேண்டும். அப்படி கொடுக்கா விட்டால் உன்னை கொலை செய்வோம். கொலை எங்களுக்கு புதிதல்ல. இதற்கு முன்பு நிறைய கொலைகளை செய்திருக்கிறோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
 
இதையடுத்து மதுசூதனன் தண்டையார்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையில் குதித்துள்ளனர். கடிதம் பொன்னேரியிலிருந்து அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு விசாரணை பார்வை திரும்பியுள்ளது.
 
ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவைத் தலைவருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.