அதிமுகவுடன் தேமுதிகவை சேர்த்ததும் பத்திரிகைகள்தான், அதில் இருந்து பிரித்ததும் பத்திரிகைகள் தான் என்று குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசினார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 1000 பேருக்கு குர்பானி (அரைக்கிலோ இறைச்சி) வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை தொடங்கி அக்கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் பேசியதாவது: இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே பக்ரீத் பண்டிகையாகும். கடந்த 3 வருடங்களாக பக்ரீத் பண்டிகை முன்னிட்டு குர்பானி வழங்கி வருகிறேன். இப்போது மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் அவதிப்படுகின்றனர். அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வருகின்றன.
அவர்கள் ஆளும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் ஏரி, குளங்கள் உடையாது. தமிழகம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தண்ணீரில் மிதக்கிறது. அண்ணா நூலகத்தை மாற்ற இருக்கிறார்கள். அண்ணா நூலகம் அருகே அண்ணா பல்கலைக்கழகம் இருக்கிறது.
அந்த நூலகத்துக்கு சென்று ஏராளமான மாணவர்கள் படித்து பயன் அடைகின்றனர். அக்கட்டிடத்தை விட வசதி குறைந்த டிபிஐ வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்துக்கு, நூலகத்தை மாற்ற காரணம் என்ன?.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு கிடைக்க வேண்டும் என்றால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று மக்களை பயமுறுத்தினர். கலைஞரை ஆட்சியில் இருந்து நீக்கவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன். இப்போதும் எதிர்க்கட்சியாக உள்ளேன். எதிரிகட்சியாக அல்ல. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இதற்கு முன் ஆண்ட அரசும், இப்போது ஆளும் அரசும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகின்றன.
ஆவின்பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி மற்றும் இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment