ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே இயக்கத்துடன் அதிகார ப்பூர்வமாக தொடர்பு இல்லை என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்: சமூக சேவகர் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்துக்கு எங்களது ஆதரவு உண்டு. ஆனால் ஆதரவு தர வேண்டும் என்று எங்களிடம் யாரும் அதிகாரப்பூர்வமாக கேட்கவில்லை. நாங்களும் அதிகாரப்பூர்வமாக அவர்களின் இயக்கத்துக்கு ஆதரவு அளிக்க வில்லை. அதே சமயம், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் ஹசாரேயின் இயக்கத்தில் சேர தடையில்லை. ஆதரவு அளிக்கவும் தடையில்லை என்றார் அவர்.
ஹசாரேயின் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ் முன்னின்று நடத்தி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ""அவருடன் நாங்கள் இருந்தோம். இன்றும் இருக்கிறோம். ஹசாரேவுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் உள்ளதாக மக்கள் நினைக்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய முடியும் " என்று அவர் பதில் அளித்தார். தங்கள் இயக்கத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு அளிக்கவில்லை என்று ஹசாரேவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் ஹசாரேயின் இயக்கத்துக்கும் தொடர்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், மோகன் பாகவத் அதை மறுக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று, சொந்த ஊரான ராலேகான் சித்தியில் ஹசாரேவும் மறுப்பு தெரிவித்துள்ளார். "" எங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை. சோனியா காந்திக்கூட எங்கள் மீது இரு தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியுள்ளார். யார் எதை சொன்னாலும் கவலையில்லை" என ஹசாரே கூறியுள்ளார்.
(di)
Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், இந்தியா, ஊழல், ஹசாரே
No comments:
Post a Comment