Followers

Sunday 6 November 2011

தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றத்தின் பின்னணி என்ன?

 
 
 
தமிழக அமைச்சரவை மாற்றத்தில், சென்னை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது.
 

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆறு பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனால், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அமைச்சரான சண்முகவேலு பதவியை இழந்தார். ஏற்கனவே இவர் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியிலும் அமைச்சராக இருந்து பதவியை இழந்தவர். இந்த ஆட்சி அமைந்த போது, மிகவும் முக்கியமான தொழில் துறை ஒதுக்கப்பட்டது. சில நாட்களிலேயே அது பறிக்கப்பட்டு, ஊரக தொழில் துறை ஒதுக்கப்பட்டது. தற்போது, அமைச்சர் பதவியே பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மாற்றாக, திருப்பூர் மாவட்டத்தில் வேறு ஒருவருக்கு பதவி வழங்கவில்லை.
 

பதவி பறிக்கப்பட்ட மற்றொரு அமைச்சரான ஆர்.பி.உதயக்குமாரை பொறுத்தவரை, விருதுநகர் மாவட்டத்துக்கான பிரதிநிதியாக பதவி அளிக்கப்பட்டது. ஆனால், இவர் மதுரையைச் சேர்ந்தவர். இதனால், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் அதிருப்தியில் இருந்தனர். இதுதவிர, அமைச்சராக இவரது செயல்பாடும், தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இவரது பதவி பறிக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டச் செயலரான ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 

பதவி பறிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியிலும் சில காலம் அமைச்சராக பதவி வகித்து, பின்னர் பதவி பறிக்கப்பட்டவர். இந்த ஆட்சியில் முக்கிய துறையான அறநிலையத் துறை ஒதுக்கப்பட்ட போதிலும், தூத்துக்குடி மாவட்ட உள்கட்சி பிரச்னையால் இவர் பதவியை இழந்துள்ளார். எனினும், தூத்துக்குடி மாவட்டத்தில் செல்லப்பாண்டியனுக்கு இடையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

என்.ஆர்.சிவபதியை பொறுத்தவரை, முதலில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சராக தான் நியமிக்கப்பட்டார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மரியம் பிச்சை இறந்ததால், இவருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக, கால்நடை மற்றும் பால்வளத் துறை ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் இவரது செயல்பாடு சிறப்பாக இல்லை. மேலும், திருச்சி மேற்கு இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் இவரது செயல்பாடு, தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.இதன் காரணமாக, உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், சிவபதியிடம் இருந்து மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது. அப்போதே இவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்று வலுவாக நம்பப்பட்டது. அதன்படி, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதிக்கு மாவட்டச் செயலர் பதவியும், தற்போது அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
 

சென்னையில் இருந்து எப்போதுமே அதிகளவில் அமைச்சர்கள் இடம்பெறுவர். முந்தைய தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி என தலைவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தனர். இந்த அ.தி.மு.க., ஆட்சியில், சென்னையில் இருந்து வெற்றி பெற்றவர்களில், செந்தமிழன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம்கிடைத்தது.
 

இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் போது, ஏற்கனவே வகித்த செய்தித் துறையுடன் கூடுதல் பொறுப்பாக, சிறை, சட்டம் போன்ற துறைகள் செந்தமிழனிடம் வழங்கப்பட்டது. இவ்வளவு முக்கிய துறைகள் இருந்தும், இவர் மீது கட்சித் தலைமைக்கு பல்வேறு விஷயங்களில் அதிருப்தி ஏற்பட்டது. இதனால், செந்தமிழன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து கோகுல இந்திரா மட்டுமே அமைச்சர் பதவியில் உள்ளார்.அதேநேரத்தில், பக்கத்து மாவட்டமான திருவள்ளூரில் இருந்து இரண்டு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே இடம்பெற்றுள்ள ரமணா தவிர, திருவள்ளூர் மாவட்டச் செயலரான மூர்த்திக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
 

நீலகிரி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புத்திசந்திரனுக்கு, முதலில் சுற்றுலா துறை தான் ஒதுக்கப்பட்டிருந்தது.
அமைச்சரவை மாற்றத்தின் போது, மிகவும் வலுவான இலாகாவான உணவுத் துறை இவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அமைச்சர் பதவியே பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக நீலகிரி மாவட்டத்தில் யாருக்கும் பதவி அளிக்கப்படவில்லை.
 

இந்த அ.தி.மு.க., ஆட்சியில் முதலில் அமைச்சர்களாக பதவி ஏற்றவர்களில், மரியம் பிச்சை, கருப்பசாமி ஆகியோர் மரணமடைந்தனர். இதுதவிர, இசக்கி சுப்பையாவிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.புதிதாக அமைச்சராக அறிவிக்கப்பட்டவர்களில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த தாமோதரனுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் இருந்து எஸ்.பி.வேலுமணி அமைச்சராக உள்ளார்.
 

மறைந்த அமைச்சர் கருப்பசாமி, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பதிலாக அதே இனத்தைச் சேர்ந்தவருக்கு தான் அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், பரமக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் காரணமாக, ஆதிதிராவிடர்களுக்கு எதிரான அரசு என்ற எண்ணம் மக்களிடம் இருப்பதாக ஒரு கருத்து நிலவியது. அதை சரிகட்டும் வகையில் தான், அதே பரமக்குடி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தர்ராஜுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
 

 


No comments:

Post a Comment