Followers

Saturday 31 December 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2012


உலகெங்கிலும் வசிக்கும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறோம்.

படத்தை சொடுக்கி பெரியதாக்கி பார்க்கலாம். வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளூங்கள்.




இந்த புத்தாண்டு ஈழத்தின் எழுச்சி ஆண்டாக!
உரிமைகளை மீட்டிடும் ஆண்டாக!
அமைதி நிலவும் ஆண்டாக!
வெள்ளைப் பூக்களாக!
மலரட்டும்!
       
2012_eelam
 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



நண்பர்கள் அனைவருக்கும் இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2012 ம் ஆண்டில் அனைவரும் அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெற்று சுபீட்சமாய் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

நம்மால் இயன்ற வரை பிறர்க்கு நனமைகள் செய்வோம். முடியாது போனால் துன்பம் செய்யாது இருப்போம்.

Friday 30 December 2011

விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்

 
 
ஏத்தி விட்ட ஏணியை யாராக இருந்தாலும் மறக்கக்கூடாதுங்க! அட நம்ம வள்ளுவர் கூட அதான சொல்லி இருக்கிறார். இப்ப கோடம்பாக்கம் ஹாட் டாபிக்கும் நன்றி மறந்த கதை பற்றியது தான்.
 
ஓட்டுக் கேட்க மட்டும் தான் பல அரசியல்வாதிகள் வர்றாங்க. அப்புறம் உங்களை மறந்து விடுகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை மக்களே! என மேடைகளில் மைக் பிடித்து உரக்க பேசும் விஜயகாந்த், "தான் சினிமாவில் கோலோச்ச காரணமாக இருந்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனை இப்படி மறக்கலாமா?". அன்று இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அருமையான படங்களை விஜயகாந்த்துக்கு கொடுத்திருக்காவிட்டால் அவருக்கு சினிமாவில் அங்கீகாரம் கிடைத்திருக்காது, அதை வைத்துக் கொண்டு அவர் அரசியலும் செய்திருக்க முடியாது என கூறி வரும் கோலிவுட் வட்டாரம் சற்று கொதித்துப் போயிருக்கிறதாம்.
 
கொதிப்புக்கு காரணம் இது தான். இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்த துக்க செய்தி தெரிந்து போனில் கூட ஒரு வார்த்தை ஆறுதல் கூறவில்லையாம் விஜயகாந்த். மகனைப் பறிகொடுத்த சுந்தர்ராஜனுக்கு, விஜயகாந்தின் இந்த பாராமுகம் மேலும் துன்பத்தை அளித்துள்ளதாம். சுந்தர்ராஜன் தன் கோடம்பாக்க சகாக்களிடம் புலம்பியது, தற்போது காற்றில் பரவிக் கொண்டிருக்கிறது. இது விஜயகாந்த் காதுகளுக்கும் எட்டுமா மக்களே?!

 


Thursday 29 December 2011

ஜெ.வுடன் சமரசத்திற்கு - நாயுடு உதவியை நாடினார் சசிகலா!

 
 
முதல்வர் ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா தரப்பு கடுமையாக முயல்வதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் தற்போது ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அணுகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
சமீபத்தில் சசிகலா குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு அதிமுகவை விட்டு வெளியேற்றினார். மேலும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசி குடும்பம் வெளியேற்றப்பட்டது. தற்போது அங்கு தங்கியிருப்பது சசிகலாவின் அண்ணி இளவரசி மட்டுமே.
 
வெளியேற்றப்பட்ட சசிகலா தரப்பு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறது. நீக்கம் தொடர்பாக இதுவரை சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாருமே கருத்து தெரிவிக்காமல் பலத்த அமைதி காத்து வருகின்றனர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இப்படி அத்தனை பேரும் மொத்தமாக மெளனம் காக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
ஆனால் சைலன்ட்டாக ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா குடும்பத்தினர் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ன.
 
ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதால் அவரிடம் நேரடியாக போய் சமரசம் பேச அச்சப்பட்ட சசிகலா தரப்பு ஜெயலலிதாவுக்கு நெருக்கமான வட்டத்தை அணுகி சமரசம் செய்யுமாறு கேட்டு வருவதாக தெரிகிறது.
 
இதற்காக அவர்களில் முதலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க முயன்றனராம். இதற்காக சிலரை மோடியிடம் அனுப்பி வைத்தனராம். ஆனால் அவர்களை திட்டி அனுப்பி விட்டாராம் மோடி. இதுதொடர்பாக இனிமேல் என்னிடம் யாரும் வராதீர்கள் என்றும் கூறி விட்டாராம்.
 
இதையடுத்து அடுத்து சந்திரபாபு நாயுடுவை அணுகியுள்ளதாம் சசிகலா தரப்பு. ஒரு ஆந்திர தொழிலதிபர் மூலமாக நாயுடுவை சசிகலா தரப்பு அணுகியுள்ளதாக கூறுகிறார்கள். அந்தத் தொழிலதிபரும் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்குமாறு நாயுடுவைக் கேட்டுக் கொண்டுள்ளாராம். மோடி போல நடந்து கொள்ளாமல் சசிகலா தரப்பு கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டுள்ளாராம் நாயுடு.
 
இதனால் சற்று நம்பிக்கையுடன் சசிகலா தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் ஜெயலலிதாவுடன் நாயுடு பேசி சமரசம் ஏற்படுத்த முயல்வார் என்று சசிகலா தரப்பு பெருத்த நம்பிக்கையி்ல் உள்ளது.
 
இந்த சமரச முயற்சிகள் காரணமாகத்தான் ஜெயலலிதாவின் நடவடிக்கை குறித்து எதுவும் பேசாமல் கப்சிப்பென சசிகலா தரப்பினர் இருப்பதாக கூறுகிறார்கள்.



மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ஹஸாரே அறிவிப்பு!

 
 
 
மோசமான உடல்நிலை மற்றும் மக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக தனது உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்ட அன்னா ஹஸாரே, சிறை நிரப்பும் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
 
அன்னா ஹஸாரே தனது மூன்று நாள் உண்ணாவிரதம் முடிந்ததும், சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தார். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த கூட்டத்தின் அளவு அவரையும் அவரது கோஷ்டியையும் பெரும் ஏமாற்றத்துக்கும் விரக்திக்கும் உள்ளாக்கிவிட்டது.
 
மும்பை மைதானத்தில் முதல்நாள் இரவில் வெறும் 40 பேர் மட்டுமே இருந்ததாக மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இரண்டாம் நாளன்று பகலில் வந்த கூட்டம் வெறும் ஆயிரம் பேர் கூட இல்லை என்பதே உண்மை. இதில் பெரும்பாலானவர்கள், "உண்ணாவிரத கூட்டத்தில் நல்ல உணவு கிடைக்கும் என்றார்கள். அதான் பார்த்துவிட்டு, முடிந்தால் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று வந்தோம்," என கூறியுள்ளனர்.
 
இதனால்தான், நேற்று முழுவதும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் 3 நாட்களும் உண்ணாவிரதம் நடக்கும் என கூறி வந்த ஹஸாரேவும் அவர் கோஷ்டியினரும் இன்று பாதியில் முடித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டனர்.
 
சிறை நிரப்பும் போராட்டத்துக்கு 2 லட்சம் பேர் தயார் என்று ஹஸாரே கோஷ்டி கூறி வந்தது. ஆனால் உண்மையில் 20000 பேர் கூட இதற்கு தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
 
காரணம், சிறைக்கு வரத் தயார் என இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் தந்துள்ள தகவல்கள் பெரும்பாலும் பொய்யாக உள்ளதுதான். மேலும் ஒரு நபரே 100 படிவங்கள் நிரப்பியுள்ளார். எனவே இந்த போராட்டத்துக்கான மக்கள் ஆதரவு குறித்து ஹஸாரே கோஷ்டிக்கு சந்தேகம் எழுந்துவிட்டதால், அதை முன்கூட்டியே ரத்து செய்துவிட்டனர்.
 
"சிறை நிரப்பும் போராட்டம் எந்தப் பலனையும் இப்போது தராது. எனவே அதை ரத்து செய்துவிட்டோம். இப்போதைய இலக்கு, 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸைத் தோற்கடிப்பதுதான். இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்வோம்," என்று அன்னா கோஷ்டியின் சர்ச்சைக்குரிய நபரான கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.



உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ஒப்பந்தம்

 
 
 
 
 
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. 403 தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் ராகுல்காந்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
 
அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்தல் பணிகளில் முடுக்கி விட்டுள்ளார். கட்சியின் வேட்பாளர்களுக்கு தேர்தல் பணியாற்ற, இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 12.5 லட்சம் பேரை ராகுல் தயார்படுத்தி வைத்துள்ளார். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 10 பேர் நியமிக்கப்படுவர். மேலும் பல ஆயிரம் இளைஞர் காங்கிரசார் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர்.
 
இதற்காக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்தையும், பணிகளையும் ஒருங்கிணைக்க, கூகுள் இணையதளத்துடன் ராகுல்காந்தி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர், தேர்தல் பொறுப்பாளர்கள், வாக்குச் சாவடி நிர்வாகிகள் ஆகியோருக்கு ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை இணைய தளம் மூலம் அவர் பிறப்பிப்பார்.
 
இந்த இணைய தளம் மூலம் 3 லட்சம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆக்கபூர்வமான கருத்துக்களை ராகுல்காந்தியுடனும் அவர்களுக்கு இடையேயும் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த நவீன யுக்தி தேர்தலில் காங்கிரசுக்கு கை கொடுக்கும் என்று மாநில நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.



Sunday 25 December 2011

ஆர்.எஸ்.எஸ்., ஏஜன்ட் அன்னா ஹசாரே: காங்கிரஸ் பாய்ச்சல்

ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்னா ஹசாரேக்கு எதிரான பிரசாரத்தையும், காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. "ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஏஜன்ட் ஹசாரே' என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வராவிட்டால், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என, சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நானாஜி தேஷ்முக் உடன் அன்னா ஹசாரே இருப்பது போன்ற புகைப்படம், நேற்று இந்தி நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதில், கடந்த 1983ம் ஆண்டில், நானாஜி தேஷ்முக்கின் தலைமையின் கீழ், அன்னா ஹசாரே பணியாற்றியுள்ளார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் தருணம் என, ஹசாரேக்கு எதிரான பிரசாரத்தை, காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர், ரஷீத் ஆல்வி கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்பு இருந்ததா, இல்லையா, இப்போதும் இருக்கிறதா என்பதை, ஹசாரே தெளிவுபடுத்த வேண்டும். ஹசாரே பின்பற்றும் கொள்கை என்ன? அவரின் கொள்கையை மக்கள் அறிந்து கொள்ளும் உரிமையுள்ளது. எனவே, அவர் அதை வெளியிட வேண்டும். லோக்பால் அமைப்பில், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளித்ததை, அவர் வரவேற்கவில்லை. அதற்குப் பதிலாக, அது அரசின் முடிவு எனக் கூறியுள்ளார். இதிலிருந்தே, அவரின் கொள்கை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சியை மக்கள் தான் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது தான் எங்களின் கடமை. மற்றவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு ரஷீத் ஆல்வி கூறினார்.


மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா கூறியதாவது: ஹசாரேயால், காங்கிரஸ் கட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்., ஏஜன்ட். கடந்த 1965ம் ஆண்டில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிகழ்ந்த பின், தலைமறைவான படைவீரர்களில் அவரும் ஒருவர். உள்ளாட்சித் தேர்தலின் போது, பவாரின் கட்சிக்கு எதிராக, ஹசாரே பிரசாரம் செய்தார். அது மக்களிடம் எடுபடவில்லை. பவார் கட்சி அமோக வெற்றி பெற்றது. டில்லியில், நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஹசாரேக்கு, இந்திய அரசியலில் அடையாளம் எதுவும் கிடையாது. காங்கிரசையும், ராகுலையும் விமர்சிக்கும் ஹசாரே, பா.ஜ., மற்றும் அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக, வாய் திறக்காதது ஏன்? ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், அமெரிக்காவிடமிருந்து ஒவ்வொரு வருடமும், 20 கோடி ரூபாய் பெறுகிறார். இவ்வாறு பெனிபிரசாத் வர்மா கூறினார்.

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி

 
 
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுபற்றி எழுத்தாளர் "சோ"விடம் மாலை மலர் நிருபர் கேட்டதற்கு அவர் பதில் அளித்தார்.
 
கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?.
 
பதில்:- சசிகலாவை நீக்கியதற்கான காரணத்தை அனுமானத்தின் அடிப்படையில்தான் கூறமுடியுமே தவிர முழு விஷயமும் எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவரது உறவினர்களும் நீக்கப்பட்டது நல்ல நிர்வாகத்தை அளிக்க ஜெயலலிதா மேற்கொண்ட தீர்க்கமான உறுதியான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.
 
தமிழகத்துக்கு நல்ல ஆட்சியையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொடுக்க ஜெயலலிதா விரும்புகிறார். ஆட்சியும், நிர்வாகமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் மற்றொரு அதிகார மையம் செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது.
 
எனவே அந்த வகையில், இந்த நடவடிக்கை சரியானது, தீர்க்கமானது என்று கூறுகிறேன். இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சிலரின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக அவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுதான் என்னுடைய அனுமானம்
 
கே:- சசிகலா கட்சியில் இருந்து விலக்கினாலும் மீண்டும் சிறிது நாளில் கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும் இதற்கு முன்பு இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்களே?
 
ப:- அந்த கட்சியினர் அப்படி நினைக்கவில்லை. அதற்கு மேல் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை.
 
கே:- முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்குவதாக பேசுகிறார்களே?
 
ப:- நாட்டு நடப்பையும் அரசு நிர்வாகத்தையும் மிக நன்றாக அறிந்த முதல்- அமைச்சருக்கு நிர்வாக அனுபவமே சற்றும் இல்லாத நான் ஆலோசனை வழங்குவதாக சொல்வது மிகப்பெரிய தமாஷ். ஏற்கனவே 10 வருடம் முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தவருக்கு ஒரு வினாடிகூட எந்த பதவியும் வகிக்காத என்னைப்போன்றவர்கள் ஆலோசனை வழங்குவதாக கூறுவது சரியல்ல.
 
கே:- சசிகலா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு இன்னொரு அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு உள்ளதா?
 
ப:- இன்னொரு அதி காரமையம் என்ன என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால்தான் அது தெரியவரும். யார் அது? எந்த வகையில் அதிகாரம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்லமுடியும்.
 
கே:- இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென சசிகலா நீக்கத்துக்கு உங்கள் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறதே?
 
ப:- இவ்வளவு நாள் இல்லாத பேச்சாக உள்ளது. சசிகலா நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ இப்போதுதான் எனக்கும் முதல்-அமைச்சருக்கும் திடீரென நட்பு ஏற்பட்டதுபோல் பேசுகிறார்கள். எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் இல்லை.
 
கே:- அ.தி.மு.க.வில் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ள ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?
 
ப:- தேசிய அளவில் அவர் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக எனக்கு தெரியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் எந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேசிய அளவில் அவர் செயல்பட விருப்பம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். எனவே தற்போதைய அதிரடி நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது.
 
இவ்வாறு அவர் கூறினார்.



5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட்ட வாக்குப்பதிவு

 
 
 
உத்தரபிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி மாதம் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரோசி இன்று அறிவித்தார்.
 
7 கட்ட வாக்குப்பதிவு
 
பஞ்சாப், உத்தர்கண்டில் ஒரே கட்டமாக ஜனவரி 30ம் தேதியும், மணிப்பூரில் ஜனவரி 28ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு பிப்ரவரி மாதம் 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இதன்படி பிப்ரவரி மாதம் 4,8,11,15,19,23,28 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கோவாவில் மார்ச் 3ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னோட்ட தேர்தல்
 
இந்த 5 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுக்கள் மார்ச் 4ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே அனைவரின் கவனமும் உத்தரப் பிரதேசம் மீதே திரும்பியுள்ளது. அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதில், காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இடையே, மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஒரே நேரத்தில், 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், இதை நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.