Followers

Saturday, 18 February 2012

சீமானால் மும்பையில் தமிழர் பகுதிகளில் காங்கிரஸ் படுதோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தேல்வியை சந்தித்தனர்.
 
மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் தமிழர் அதிகம் வசித்த பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி முதல் பல்வேறு தமிழ் அமைப்புகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தது.
 
இதனையடுத்து அப்பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 13ம் தேதி பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் தாராவியில் முஸ்லீம்கள் அதிகம் வாக்காளர்களாக உள்ள ஒரு வார்டைத் தவிர மற்ற 6 வார்டுகளிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இந்தத் வார்டுகளில் சிவசேனா கூட்டணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.
 
இதேபோல் சயான் கோல்லிவாடாவில் 168 வட்டத்தில் போட்டியிட்ட தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வார்டில் காங்கிரஸ் தோற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.



ஜெயலலிதா குற்றமற்றவர் : நீதிமன்றத்தில் சசிகலா ஒப்புதல்

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தொடர்புடைய சசிகலா நடராஜன், பெங்களூரூ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி, வங்கிக் கணக்கிற்கும், ஜெயலலிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

பெங்களூரூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலாவிடம், இன்று முதன்முறையாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர் என்று சசிகலா கூறியுள்ளார்.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு காலத்திற்குள் ஜெயலலிதா மற்றும் சசிகலா பேரில் சுமார் 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அதிமுகவில் இருந்து 2011, டிசம்பர் மாதம் நீக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, 17 February 2012

மும்பையில் காங்கிரசுக்கு எதிராக சீமான் தீவிர பிரச்சாரம்

 
 
 
மும்பை மாநகராட்சிக்கு நடைபெற உள்ள தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும் தாராவில், சயான் கொல்லிவாடா ஆகிய இடங்களில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.
 
 
தாராவில் உள்ள 178-வது வார்டில் பாரதிய ஜனதா, சிவசேனா, இந்திய குடியசுரக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் உமேஷ் ஜெயவந்த் மகாலேக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக்கொண்டார்.
 
 
இதே பகுதியில் மற்றொரு வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சயான் கொல்லிவாடா பகுதியில் உள்ள 168-வது வார்டில் பா.ஜ.க. கட்சி சார்பில் போட்டியிடும் தமிழரான கேப்டன் இரா.தமிழ்ச் செல்வனை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார்.
 
 
தாராவில் 90 அடிச்சாலையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசும்போது,
 
'' காங்கிரசுக்கு எதிராக தமிழர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.
 
இலங்கையில் ராஜபக்சே அரசு தமிழர்களை அழித்தொழிக்க நடத்திய இனப்படுகொலை போருக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுத்தும், ஆலோ சனை வழங்கியும், ராடார் அளித்தும், நிதிஉதவி, சிங்கள படையினருக்கு பயிற்சி என்று எல்லா வகையிலும் உதவியது.
 
தமிழ் இனத்தை வேரோடு அழிக்கத்துணைபோன காங்கிரஸ் கட்சியை தமிழ்ச் சொந்தங்கள் அழித்தொழிக்க வேண்டும்.
காங்கிரஸ் அரசை மத்தியில் இருந்து மட்டுமல்ல, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மராட்டியம், குஜராத் என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சென்று பிரச்சாரம் செய்து தோற்கடிக்க முயற்சிப்பேன்'' என்றார்.
 

 


மார்ச் 18-ல் சங்கரன்கோவில் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம்

 

சங்கரன்கோவில் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

தேர்தல் நன்னடத்தை விதிகள், தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அமலுக்கு வருவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக அமைச்சரும், சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, அந்த இடம் காலியானது. எனவே, ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத் தேர்தலை நடத்த வேண்டும். இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 29. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 1 நடைபெறும்.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 3 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு மார்ச் 18-ல் நடைபெறுகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 21-ம் தேதி எண்ணப்படுகின்றன.

வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்துவதற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக தீவிரம்: தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆளும்கட்சியான அதிமுக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரலிங்கத்தின் மகளும், பொறி யியல் பட்டதாரியுமான முத்துச்செல்வி களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது நகராட்சித் தலைவராக உள்ளார். அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய 26 அமைச்சர்களைக் கொண்டு தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் தேர்தல் களம் காணுவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கி விட்டன.

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, வெள்ளிக்கிழமை நேர்காணல் நடத்துகிறார்.

இந்தத் தேர்தலில் போட்டியிட மதிமுக முடிவெடுத்துள்ளது.

மற்றொரு பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக, வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுவில் தேர்தல் குறித்த முக்கிய முடிவினை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஏற்கெனவே வேட்பாளர் பெயரை அறிவித்து விட்டது. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடுகள் தெரிந்த பின், இடைத்தேர்தலில் எத்தனை முனை போட்டி இருக்கும் என்பது தெரிய வரும்.

பிரவம் தொகுதிக்கும் தேர்தல்: கேரள மாநிலத்தில் பிரவம் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே முல்லைப்பெரியாறு பிரச்னையை அங்குள்ள கட்சிகள் பெரிதுபடுத்தி வருவதாகத் தமிழகக் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம் பிப்ரவரி 22

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் பிப்ரவரி 29

வேட்புமனு பரிசீலனை மார்ச் 1

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 3

தேர்தல் தேதி மார்ச் 18

வாக்கு எண்ணிக்கை மார்ச் 21

Thursday, 16 February 2012

அரசியலில் குதிக்க இருக்கும் ஜெனிலியா

 


மாமனார் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் வெற்றிக்காக அவரது தொகுதியில் பிரச்சாரம் செய்யப்போகிறாராம்.

நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் நடிகை ஜெனிலியா.

மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ். இவர் இப்போது வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போகிறார்.

மாமனாரின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்கிறார் ஜெனிலியா. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "நான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் பரவியுள்ளன. அரசியலில் குதிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அது தப்பு இல்லையே. இப்போது என் குடும்பமே அரசியல் பாரம்பர்யம் மிக்கதாகிவிட்டது. அவர்களுக்காக அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக வருவேன். அதற்கு என் கணவர் அனுமதி வேண்டும். மாமனாரும் அங்கீகரிக்க வேண்டும். அரசியலுக்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் வருவேன்.

என் மாமனார் தேர்தல் பிரசாரம் செய்யும்படி அழைத்தால் பிரசாரத்திலும் ஈடுபடுவேன். இப்போதைய சூழ்நிலையில் அரசியல்தான் வாழ்க்கை என்ற சூழ்நிலையில் நான் இல்லை. நிறைய படங்கள் கைவசம் உள்ளன. அவற்றை முடித்து கொடுக்க வேண்டி இருக்கிறது. என்னால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற நிலை வந்தால் அரசியலுக்கு வருவேன். பிரச்சாரமும் செய்வேன்,"

Wednesday, 15 February 2012

திமுகவில் தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன்-அழகிரி அதிரடி!

 
 
 
திமுக தலைவர் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
 
கடந்த திமுக ஆட்சியின் போது திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலில் திமுகவை பெரும் வெற்றி பெற வைத்தவர் அழகிரி. அவரது தலைமையில் வகுக்கப்பட்ட யுக்தியைப் பயன்படுத்தி திமுக பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அழகிரிக்கு திமுகவில் செல்வாக்கு வேகமாக உயர்ந்தது. இதையடுத்து தென் பிராந்திய அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து படு வேகமாக கட்சிக்குள் தலையெடுத்தார் அழகிரி. இப்போது மு.க.ஸ்டாலினுக்கு கடும் போட்டியாகவும் அவர் உருவெடுத்துள்ளார்.
 
ஸ்டாலினை திமுகவின் உயர் பதவிக்கு வர விடாமல் அழகிரிதான் தீவிரமாக தடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தலைவர் பதவிக்கு ஸ்டாலினை வர விடாமல் அழகிரி தடுப்பதாகவும் பேசப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள டக் ஆப் வார் காரணமாக ஸ்டாலினாலும் மேலே போக முடியவில்லை, அழகிரியாலும் தான் எதிர்பார்க்கும் உச்சத்தை எட்ட முடியவில்லை.
 
இந்தநிலையில் தலைவர் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார் அழகிரி.
 
சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. பணி தொடங்கி விட்டதா? என்று கேட்டபோது முதலில் தேதியை அறிவிக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்றார்.
 
அ.தி.மு.க. தரப்பில் 26 அமைச்சர்களும் களம் இறக்கி விட்டுள்ளனர். தி.மு.க.வில் மந்தநிலை உள்ளதே என்ற கேள்விக்கு, திமுக மந்த நிலையில் இல்லை. வருகிற 17-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தீவிரமாக பிரசாரம் செய்வோம் என்றார் அழகிரி.
 
அடுத்து முக்கியக் கேள்வியைக் கேட்டனர் செய்தியாளர்கள். திமுகவில் தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா என்று அவர்கள் கேட்டபோது, கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் அழகிரி சிரித்தபடி.
 
அடுத்ததாக இன்னொரு முக்கியக் கேள்வி கேட்கப்பட்டது. திமுக, தேமுதிக இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டு வருகிறதே, அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டனர். ஆனால் அதற்கு பதிலே தராமல் போய் விட்டார் அழகிரி.
 
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தேமுதிகவை கடுமையாக விமர்சித்து வந்தார் அழகிரி. மேலும், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால், அதற்கான விளைவை விஜயகாந்த் அனுபவிப்பார் என்றும் கூறியிருந்தார். அதேசமயம், தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல் வந்தபோது தேமுதிகவுக்கு சாதகமாகவும் பேசினார்.
 
இந்த நிலையில் திமுகவும், தேமுதிகவும் கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு அவர் பதில் ஏதும் தர மறுத்து விட்டார். சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு விஜயகாந்த் விமானத்தில் பயணித்தபோது அதில் அவருடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் பயணித்தார் என்பதும், இருவரும் தங்களது பயணத்தின்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் என்றும் செய்திகள் வந்தன என்பது நினைவிருக்கலாம்.




வீரபாண்டி ஆறுமுகம் திமுகவை விட்டு நீக்கப்படுவாரா?

 
 
 
திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் மீது இதுவரை இல்லாத பெரும் வருத்தத்தில் திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் மோதலை மையமாக வைத்து வீரபாண்டியார் காய் நகர்த்தி வருவதாகவும், அந்த மோதலில் தான் பலனடைய பார்ப்பதாகவும் கருணாநிதி கருதுவதாகவும், விரைவில் வீரபாண்டியார் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திமுகவில் எத்தனையோ தலைவர்கள் வந்துள்ளனர், போயுள்ளனர். அவர்கள் அத்தனை பேருக்குமே கருணாநிதி மனதில் ஒவ்வொரு இடம் இருக்கும். இருப்பினும் கருணாநிதி மனதில் தனி இடம் பிடித்துள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்களில் வீரபாண்டியாரும் ஒருவர். சேலத்தில் கட்சியைப் பற்றி கருணாநிதி ஒருமுறை கூட கவலைப்பட்டதில்லை. காரணம், வீரபாண்டியார் மீது அவருக்கு உள்ள நம்பிக்கை.
 
கருணாநிதியின் நம்பிக்கையை ஒருமுறை கூட வீணடித்ததில்லை வீரபாண்டியார். சேலம் மாவட்டத்தில் கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். தொடர்ந்து வெற்றிகளைத் தேடிக் கொடுத்தார். நாளை பொதுக் கூட்டம் என்று கூறினால் கூட லட்சம் பேரை திரட்டிக் கொண்டு வரக் கூடிய திறமைசாலி வீரபாண்டியார்.
 
ஆனால் இன்று வீரபாண்டியார் பெயரைக் கேட்டாலே கோபமாகும் அளவுக்கு கருணாநிதி போய் விட்டாராம். காரணம், வீரபாண்டியார் தரப்பு சமீப காலமாக நடந்து வரும் போக்கு.
 
ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே அடுத்த வாரிசு யார் என்பதில் சமீப காலமாக பெரும் மோதல் மூண்டு வெடித்துக் கொண்டிருக்கிறது. தன்னை விட்டு விட்டு ஸ்டாலினுக்கு உயர் பதவி தரக் கூடாது என்று அழகிரி கடுமையாக முட்டுக்கட்டைப் போட்டு வருகிறார். ஸ்டாலினுக்கு ஏதாவது பதவி தரப்படலாம் என்ற பேச்சு வரும்போதெல்லாம் அழகிரி புயல் கிளம்பி அண்ணா அறிவாலயத்தை கடந்து விடுகிறது. இதனால் ஸ்டாலினை மேலே உயர்த்தும் வேலைகள் தடைபட்டுப் போகின்றன.
 
அழகிரி, ஸ்டாலின் மோதலில், திமுக முக்கியத் தலைவர்கள் ஆளுக்கு ஒரு கோஷ்டியாகப் பிரிந்து காணப்படுகின்றனர். இதில் இதுவரை எந்தக் கோஷ்டியிலும் சேராமல் கருணாநிதி கோஷ்டியில் மட்டுமே இருந்து வந்த வீரபாண்டியார் அழகிரி கோஷ்டிக்கு ஆதரவாக மாறியுள்ளார். அழகிரிதான் வீரபாண்டியாரை அவர் உடம்புக்கு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது நேரில் சந்தித்துப் பேசி அவரை தன் பக்கம் ஈர்த்தார்.
 
அன்று முதல் அழகிரிக்கு ஆதரவாக பேசி நடந்து கொள்கிறார் வீரபாண்டியார். அழகிரி பக்கம் வீரபாண்டியார் திரும்ப முக்கியக் காரணமாக கூறப்படுவது, கடந்த திமுக ஆட்சியின்போது சேலத்தில் நடந்த மிகக் கொடூரமான 6 பேர் படுகொலையாகும். இந்தக் கொலை வழக்கில் வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவர் வழக்கில் சிக்கி கைதாக ஸ்டாலின்தான் காரணம் என்பது வீரபாண்டியாரின் கருத்தாகும். இந்தக் கைதை அப்போதே கடுமையாக கண்டித்தவர் வீரபாண்டியார். மேலும், சிறைக்குப் போய் சுரேஷையும் பார்த்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
சுரேஷ் விவகாரத்தில் ஸ்டாலின் மீது கொண்ட கோபத்தால்தான் தற்போது அழகிரிக்கு அவர் ஆதரவாக செயல்படுவதாக கருணாநிதி குடும்பத்தினர் கருதுகிறார்களாம். மேலும் அழகிரியை தூண்டி விட்டு ஸ்டாலினுக்கு எதிராக திருப்பி வருகிறார் வீரபாண்டியார், இதனால் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் கருணாநிதி குடும்பத்தினர் வருத்தப்படுகிறார்களாம்.
 
வீரபாண்டியார் ஒரு மூத்த தலைவர். அழகிரி, ஸ்டாலின் இடையே பிரச்சினை இருந்தால் அதைத் தீர்க்கவல்லவா அவர் முயற்சித்திருக்க வேண்டும். ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து அதைச் செய்யாமல், அவரை ஒருவரைத் தூண்டி விட்டு இன்னொருவருக்கு எதிராக செயல்படுவது என்ன நியாயம் என்பது கருணாநிதி குடும்பத்தினரின் வருத்தம் என்கிறார்கள்.
 
மேலும் சமீபத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திலும் கூட அழகிரிக்கு ஆதரவான முறையில் வீரபாண்டியார் நடந்து கொண்டதும், இளைஞர் அணிக்கான சேலம் மாவட்ட நிர்வாகிகளை வீரபாண்டியாரின் மகனே நேரடியாக தேர்வு செய்ய திட்டமிட்டதும் கூட கருணாநிதியை கோபப்பட வைத்ததாம். இதனால்தான் சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வைக் கண்டித்து திமுக மேலிடம் அறிக்கை விட்டது, எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த எச்சரிக்கை தனது மனதை புண்படுத்தி விட்டதாக உடனடியாக அறிவித்தார் வீரபாண்டியார்.
 
இப்படி வீரபாண்டியாருக்கும், கருணாநிதிக்கும் இடையிலான சமீபத்திய பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விரைவில் வீரபாண்டியார் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
 
ஆனால் வீரபாண்டியார் மீது அவ்வளவு சீக்கிரம் கை வைக்க முடியாது என்பதால் அதற்குத் தகுந்த காரணத்தை கண்டுபிடித்த பின்னர் நடவடிக்கை பாயும் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.



விழா மேடையில் அமைச்சர் மரணம்

 
 
 
கல்லூரி நிகழ்ச்சியின்போது மேடையில் மயங்கி விழுந்த கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா மரணம் அடைந்தார்.
 
கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா (71). அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று காலை மங்களூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக நிருபதுங்கா ரோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றார்.
 
அங்கு ந்டநத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் திடீர் என்று மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மல்லிகே மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு சாந்தா என்ற மனைவியும், 4 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர்.
 
நேர்மையானவர் என்று பெயரெடுத்த ஆச்சார்யா கர்நாடக உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருக்கையில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டபோது பாஜக மூத்த தலைவரான ஆச்சார்யா 19 மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Monday, 13 February 2012

விஜயகாந்த்...புதுக் கூட்டணி குறித்து முடிவு?

 
 
 
தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 21ம் தேதி நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஒரு கூட்டணியை முடித்து விட்ட நிலையில் அடுத்த கூட்டணி குறித்து முடிவு செய்ய இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,
 
தே.மு.தி.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 21-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
 
இக்கூட்டத்தில் தே.மு.தி.க.வின் தலைமை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். இன்றைய அரசியல் நிலைமை குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் மேற்கண்ட கூட்டங்களில் ஆராயப்படும்.
 
ஆகவே தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான அழைப்பிதழ் அனுப்பப்படும். அழைப்பிதழ் பெற்றவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
தனித்துப் போட்டியிடுவோம் என்பதை கொள்கையாகவே கூறி வந்த விஜயகாந்த் பின்னர் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொண்டர்களைத் திருப்திப்படுத்தவும் கூட்டணி அரசியலுக்கு மாறினார். அதிமுகவுடன் போய்க் கூட்டு சேர்ந்தார். இது விஜயகாந்த்தை வித்தியாசமான அரசியல்வாதியாகப் பார்த்து வந்த நடுநிலை வாக்காளர்களை அதிர வைத்தது.
 
ஆனால் இந்தக் கூட்டணி அல்பாயிசில் போய் விட்டது. இதையடுத்து தற்போது அடுத்த கூட்டணிக்கு தேமுதிக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபோது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் விஜயகாந்த் ஓடும் விமானத்தில் ஆலோசனை நடத்தினார்.
 
இந்தப் பின்னணியில் தற்போது தனது கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை அவர் கூட்டியுள்ளார். இக்கூட்டத்தின்போது ஸ்டாலின், கார்த்தியுடன் பேசியது குறித்து அவர் விளக்கி ஆலோசனை கேட்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.