Followers

Monday 13 February 2012

விஜயகாந்த்...புதுக் கூட்டணி குறித்து முடிவு?

 
 
 
தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 21ம் தேதி நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஒரு கூட்டணியை முடித்து விட்ட நிலையில் அடுத்த கூட்டணி குறித்து முடிவு செய்ய இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,
 
தே.மு.தி.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 21-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
 
இக்கூட்டத்தில் தே.மு.தி.க.வின் தலைமை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். இன்றைய அரசியல் நிலைமை குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் மேற்கண்ட கூட்டங்களில் ஆராயப்படும்.
 
ஆகவே தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான அழைப்பிதழ் அனுப்பப்படும். அழைப்பிதழ் பெற்றவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
தனித்துப் போட்டியிடுவோம் என்பதை கொள்கையாகவே கூறி வந்த விஜயகாந்த் பின்னர் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொண்டர்களைத் திருப்திப்படுத்தவும் கூட்டணி அரசியலுக்கு மாறினார். அதிமுகவுடன் போய்க் கூட்டு சேர்ந்தார். இது விஜயகாந்த்தை வித்தியாசமான அரசியல்வாதியாகப் பார்த்து வந்த நடுநிலை வாக்காளர்களை அதிர வைத்தது.
 
ஆனால் இந்தக் கூட்டணி அல்பாயிசில் போய் விட்டது. இதையடுத்து தற்போது அடுத்த கூட்டணிக்கு தேமுதிக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபோது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் விஜயகாந்த் ஓடும் விமானத்தில் ஆலோசனை நடத்தினார்.
 
இந்தப் பின்னணியில் தற்போது தனது கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை அவர் கூட்டியுள்ளார். இக்கூட்டத்தின்போது ஸ்டாலின், கார்த்தியுடன் பேசியது குறித்து அவர் விளக்கி ஆலோசனை கேட்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment