Followers

Friday, 17 February 2012

மார்ச் 18-ல் சங்கரன்கோவில் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம்

 

சங்கரன்கோவில் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

தேர்தல் நன்னடத்தை விதிகள், தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அமலுக்கு வருவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக அமைச்சரும், சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, அந்த இடம் காலியானது. எனவே, ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத் தேர்தலை நடத்த வேண்டும். இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 29. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 1 நடைபெறும்.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 3 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு மார்ச் 18-ல் நடைபெறுகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 21-ம் தேதி எண்ணப்படுகின்றன.

வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்துவதற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக தீவிரம்: தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆளும்கட்சியான அதிமுக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரலிங்கத்தின் மகளும், பொறி யியல் பட்டதாரியுமான முத்துச்செல்வி களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது நகராட்சித் தலைவராக உள்ளார். அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய 26 அமைச்சர்களைக் கொண்டு தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் தேர்தல் களம் காணுவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கி விட்டன.

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, வெள்ளிக்கிழமை நேர்காணல் நடத்துகிறார்.

இந்தத் தேர்தலில் போட்டியிட மதிமுக முடிவெடுத்துள்ளது.

மற்றொரு பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக, வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுவில் தேர்தல் குறித்த முக்கிய முடிவினை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஏற்கெனவே வேட்பாளர் பெயரை அறிவித்து விட்டது. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடுகள் தெரிந்த பின், இடைத்தேர்தலில் எத்தனை முனை போட்டி இருக்கும் என்பது தெரிய வரும்.

பிரவம் தொகுதிக்கும் தேர்தல்: கேரள மாநிலத்தில் பிரவம் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே முல்லைப்பெரியாறு பிரச்னையை அங்குள்ள கட்சிகள் பெரிதுபடுத்தி வருவதாகத் தமிழகக் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம் பிப்ரவரி 22

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் பிப்ரவரி 29

வேட்புமனு பரிசீலனை மார்ச் 1

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 3

தேர்தல் தேதி மார்ச் 18

வாக்கு எண்ணிக்கை மார்ச் 21

No comments:

Post a Comment