Followers

Friday 11 November 2011

எங்களது சாதனையை ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கட்டும்-ராஜபக்சே

 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஜெயலலிதாவும் இதை நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
 
மாலத்தீவில் நடைபெறும் 17வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜபக்சே அங்கு டைம்ஸ் நவ் டிவிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்ற அச்சம் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு வரவேற்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
 
அந்த பேட்டி விவரம்:
 
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மீண்டும் தலை தூக்க முயற்சிக்கிறார்கள் என்றும், போராளிகளின் உணர்வுகளை அப்படியே தக்க வைக்க முயற்சிப்பதாகவும் உளவுத் தகவல்கள் கூறுகின்றன. அது உங்களுக்கும் தெரியுமா?
 
பதில்: இங்கிலாந்திலும் சரி, கனடாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, அல்லது உலகின் பிற நாடுகளிலும் சரி, விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் பணம் வசூலிக்கிறார்கள், ஒருங்கிணைய முயற்சிக்கிறார்கள், ரகசியமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இதை நாங்கள் அறிவோம்.
 
எங்களிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் மூலம் இதுகுறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அனுதாபிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். மீண்டும் போரில் குதிக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். புலிகளின் பிரசாரம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
 
கேள்வி: தமிழர் பகுதிகளில் மறு குடியமர்த்தல், மறு சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து பேசி வருகிறீர்கள். இதுதொடர்பாக உங்களுக்கு உதவி வரும் நட்பு நாடான இந்தியா, இதுகுறித்த நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைந்துள்ளதா?
 
பதில்: நாங்கள் என்ன செய்து வருகிறோம் என்பதை அங்கு வந்து பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவும் சரி, பிற நாடுகளும் சரி எங்களது பணிகளைப் பார்த்து சென்றுள்ளனர். அனைவருக்கும் இதில் திருப்தியே.
 
கேள்வி: தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா இலங்கை விவகாரத்தில் தீவிர அக்கறை காட்டுகிறார். அவர் உண்மை நிலையை அறிய இலங்கைக்கு வர விரும்பினால் நீங்கள் வரவேற்பீர்களா?
 
பதில்: கண்டிப்பாக, நிச்சயம் வரவேற்போம். அவர் தாராளமாக வந்து அங்கு என்ன நடக்கிறது, உண்மை நிலவரம் என்ன என்பதை நேரிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. தமிழர் பகுதிகளில் நாங்கள் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். இதை ஜெயலலிதாவும் நேரிலேயே அறிந்து கொள்ளலாம்.
 
கேள்வி: சீனா, இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து அங்கு ஆழமாக நிலை பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்தியாவுடனான இலங்கையின் உறவில் மாற்றம் வருமா?
 
பதில்: நான் ஆரம்பத்திலிருந்தே ஒன்றை உறுதியாக சொல்லி வருகிறேன். இந்தியா எங்களது தொப்புள் கொடி உறவு. இந்தியாவுக்குப் பிறகுதான் சீனா. இந்தியா எங்களது உறவினர் என்றால் சீனா எங்களது நண்பர். நாங்கள் மட்டுமல்ல ஐரோப்பிய யூனியனும் கூட சீனாவின் உதவியை நாடுகிறது.
 
எங்களது நாட்டில் துறைமுகம், விமான நிலையம், மின் நிலையம் ஆகியவை அமைக்கும் பணியில் ஈடுபட நாங்கள் முதலில் இந்தியாவைத்தான் நாடினோம். இந்தியாவுக்குத்தான வாய்ப்பளித்தோம். பிறகுதான் சீனாவிடம் சென்றோம்.
 
எங்களைப் பொறுத்தவரை இந்தியாதான் முதலில். பின்னர்தான் சீனா. சீனா மட்டுமல்ல, அமெரிக்காவும் கூட இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ளது.
 
சீனாவுடனான எங்களது நட்பால், இந்தியாவுடனான உறவு கெடாது. அதற்கான வாய்ப்பில்லை. அதற்கான உறுதிமொழியை நாங்கள் இந்தியாவிடம் ஏற்கனவே கொடுத்துள்ளோம் என்றார் ராஜபக்சே.
 
தமிழக மீனவர்களை தொடர்ந்து வெறித்தனமாக இலங்கைக் கடற்படை தாக்குவது குறித்தோ, கச்சத்தீவு பிரச்சனை குறித்தோ கேள்வி ஏதும் கேட்கப்படவில்லை.



No comments:

Post a Comment