Followers

Monday, 17 October 2011

நடிகர் ரித்திஷ் எம்.பி. வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

 
 
 
ராமநாதபுரம் நகரசபைத் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் நாகநாதசேதுபதி போட்டியிடுகிறார். இவர் நகரம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று இவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ., ரித்திஷ் எம்.பி. ஆகியோர் தி.மு.க.வினருடன் அண்ணாநகர் பகுதியில் வாக்கு சேகரித்துக்கொண்டு இருந்தனர்.
 
அப்போது அங்கு நகர் தி.மு.க. செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினமும் தி.மு.க.வினருடன் வாக்குசேகரிக்க வந்தார். இந்த நிலையில் ரித்திஷ் எம்.பி. தரப்பினருக்கும் ஆர்.ஜி.ரெத்தினம் தரப்புக்கும் இடையே பிரசாரத்தின்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
 
திடீரென அவர்கள் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சோடாபாட்டில், கல், இரும்புக்கம்பி, உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். அங்கு பதற்றம் ஏற்பட்டதால் ஆண்களும், பெண்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் ஆர்.ஜி.ரெத்தினத்தின் உறவினர்கள் கலா, சரவணன் ஆகியோரும், ரித்திஷ் எம்.பி.யுடன் பிரசாரம் செய்தவர்களில் 8-வது வார்டு கிளை செயலாளர் செல்லப்பாண்டியனும் காயம் அடைந்தனர்.
 
இவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து அண்ணாநகர் பகுதியில் போலீசார், பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பிரசாரம் முடிந்ததும் ரித்திஷ் எம்.பி., முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனுடன் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
 
அவர்கள் அனைவரும் வீட்டு மாடியில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது 7 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து இறங்கினர். அந்த கும்பலில் இருந்தவர்கள் பெட்ரோல் குண்டை ரித்திஷ் எம்.பி. வீட்டின் மீது வீசினர். அத்துடன் சோடாபாட்டில், கற்களையும் சரமாரியாக வீசினர். வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த ரித்திஷ் எம்.பி.யின் தந்தை குழந்தைவேலுவின் கார் மீதும் பெட்ரோல் குண்டை வீசினர்.
 
அங்கு நிறுத்தப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சாயல்குடியை சேர்ந்த தி.மு.க.பிரமுகர் ராமர் ஆகியோரின் கார்களின் கண்ணாடிகளை அரிவாளால் வெட்டி உடைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் குழந்தைவேலுவின் கார் கதவு கருகியது.
 
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரும், துணை சூப்பிரண்டு முரளிதரன் மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமார் கூறுகையில், ``நகரில் காலை முதல் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
அண்ணாநகர் பகுதியில் துணை சூப்பிரண்டு முரளிதரன் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். வீடு மற்றும் கார்கள் மீது கும்பல் நடத்திய தாக்குதல் தொடர்பாக ரித்திஷ் எம்.பி.யின் தம்பி மணி, ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார்.
 
அந்த புகாரில் அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கும்பலை தேடி வருகின்றனர்.



No comments:

Post a Comment