Followers

Monday, 17 October 2011

அன்னாஹசாரே பிரசாரம் செய்த ஹிசார் மாநிலத்தில் காங்கிரஸ் படு தோல்வி

 
 
 
ஹரியானா மாநிலம் ஹிஸார் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனுமான குல்தீப் பிஷ்னாய் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
 
ஹிஸார் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அன்னா ஹஸாரே குழுவினர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி படு தோல்வியைத் தழுவியிருப்பது அன்னா குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
குல்தீப் பிஷ்னாய் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலாவின் மகனும், இந்திய தேசிய லோக் தளம் வேட்பாளருமான அஜய் செளதாலாவை விட 23,617 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
 
காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் மூன்றாவது இடத்தைப் பெற்றார். ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படு தோல்வியின் மூலம் அன்னா குழுவினர் செய்த பிரசாரம், காங்கிரஸுக்கு எதிராக அமைந்ததாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதேசமயம், அன்னா குழுவினரின் பிரசாரம் பாஜக ஆதரவு பெற்ற குல்தீப் பிஷ்னாய்க்கு சாதகமாக அமைந்து விட்டதாகவும் கருத்து எழுந்துள்ளது.
 
இந்தத் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கருத்து தெரிவிக்கையில், அன்னா ஹஸாரே குழுவினர் பாஜகவு பக்கம் தாங்கள் இருப்பதை இந்த பிரசாரத்தின் மூலம் மறைமுகமாக ஒப்புக் கொண்டு விட்டனர்.
 
நான் அன்னாவிடம் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி என்னவென்றால் உங்களுக்கு ஓம் பிரகாஷ் செளதாலாவின் வரலாறு தெரியுமா, பஜன்லாலின் வரலாறு தெரியுமா, அவர்கள் மீது சுமத்தப்பட்ட, தொடரப்பட்ட ஊழல் வழக்குகள் குறித்துத் தெரியுமா என்பதுதான் என்றார்.
 
ஆந்திர இடைத்தேர்தலில் டிஆர்எஸ் வெற்றி-காங்.டெபாசிட் காலி!
 
இதேபோல தெலுங்கான பிராந்தியத்தில் உள்ள பனஸ்வாடா சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலி்ல தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் கெளடை விட 49,989 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். வெற்றி பெற்ற ரெட்டி முன்பு தெலுங்கு தேசம் சார்பில் இத்தொகுதியில் உறுப்பினராக இருந்தவர். பின்னர் ராஜினாமா செய்து விட்டு டிஆர்எஸ்ஸில் இணைந்து மீண்டும் போட்டியிட்டு வென்றுள்ளார்.
 
இத்தேர்தலில் காங்கிரஸுக்கு டெபாசிட் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின்மூலம் சட்டசபையில் டிஆர்எஸ்ஸின் பலம் 12ஆக உயர்ந்துள்ளது.
 
புனேவில் காங்கிரஸ்-தேசியவாத காங். வேட்பாளர் தோல்வி
 
இதேபோல மகாராஷ்டிர மாநிலம் கடக்வாஸ்லா சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி கிடைத்தது. இங்கு பாஜக சிவசேனா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
 
பாஜகவைச் சேர்ந்த பீம்ராவ் தப்கிர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹர்ஷதா வாஞ்சலேவை 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.



No comments:

Post a Comment