Followers

Friday 2 December 2011

வாய்தா ராணியும் டி.ஜி.பி. அலுவலகம் தேடி போன ஸ்டாலினும்

 
 
 
சென்னை தேனாம் பேட்டையில் ரூ.6 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரித்ததாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 4 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.
 
இந்த தகவல் அறிந்தததும் அவர் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவர் கைது செய்யப்படலாம் என்று வதந்தி பரவியதால் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடினார்கள். அவரது வீட்டிலும் தொண்டர்கள் குவிந்தனர். இன்று பகல் 11.45 மணிக்கு மு.க.ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகம் சென்றார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. வக்கீல்களும் சென்றனர்.
 
டி.ஜி.பி. ராமானுஜம் அங்கு இல்லாததால் கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் 2 மனுக்களை கொடுத்தார். கூடுதல் டி.ஜி.பி.யை சந்தித்த பின்னர் நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-
 
முதல் தகவல் அறிக்கை என்பது இந்த ஆட்சியில் பிராடு இன்வெஸ்டிகேசன் ரிப்போர்ட்டு என்ற நிலை மாறிவிட்டது. என் மீது போடப்பட்டிருப்பது பொய்வழக்கு. எனவே எனது உணர்வை வெளிப்படுத்த டி.ஜி.பி.யை சந்தித்து ம.னு கொடுக்க வந்தேன். ஆனால் அவர் இல்லை. எனவே கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனை சந்தித்து 2 மனுக்களை கொடுத்துள்ளேன். ஒன்று என் மீதான பொய் வழக்கு தொடர்பானது. இந்த வழக்கில் எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது.
 
எனது மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த வீட்டை எடுத்துள்ளார். அந்த வீட்டில் எனது மகளும், மருமகனும் குடியிருக்கிறார்கள். இதுதவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் உண்மை. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மிரட்டியோ, அச்சுறுத்தியோ காவல்துறையை பயன்படுத்தி தவறான புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்கள். எப்.ஐ.ஆர். பதிவு செய்தால் கைது செய்ய வேண்டாமா? ஆனால் இதுவரை கைது செய்யவில்லை.
 
என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பதற்காகத்தான் வந்தேன். அதை கேட்டதும் கூடுதல் டி.ஜி.பி.யால் பதில் சொல்ல முடியவில்லை. நில அபகரிப்பு வழக்கை பொறுத்தவரை தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தால் உடனே வழக்குப்பதிவு செய்து விடுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கூட நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
உண்மையில் நில அபகரிப்பு பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதுதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனது மீதான புகார்களை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன். தி.மு.க.வினர் யார் மீதான வழக்காக இருந்தாலும் நீதிமன்றம் மூலம் சந்திக்க தயாராக இருக்கிறோம்.
 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
அப்போது தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் பாரதி, வக்கீல்கள் கல்யாணசுந்தரம், கிரிராஜன், பரிமளம், சுபாஷ் சந்திரபோஸ், ராஜ்குமார், மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
முன்னதாக மு.க.ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
நான் கொளத்தூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.எல்.ஏ. ஆக உள்ளேன். தி.மு.க. பொருளாளராக இருக்கிறேன். துணை முதல்வர் பொறுப்பையும் வகித்துள்ளேன். ஒரு சொத்து மாற்றம் தொடர்பாக என் மீதும், என் மகன் மீதும் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன்.
 
என் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அரசியல் உள் நோக்கத்துடன் என் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்து மாற்றத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த சொத்து உரிமையாளரிடம் என் மகன் உதயநிதி தன் நிறுவனம் மூலம் வாடகைக்கு இருக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனவே மக்கள் மத்தியில் எனக்குள் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கவே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழக காவல் துறை இந்த விஷயத்தில் எனக்கு எதிராக தவறாக பயன் படுத்தப்படுகிறார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் இது நடைபெறுகிறது. என் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக முழுமையாக எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படாமல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசின் கைப்பாவையாக காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. எனவே என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் புகார் கொடுத்தவர் மீது உரிய சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அந்த மனுவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது புகார் கூறி அவர் மற்றொரு மனுவும் கொடுத்தார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பழனிவேல் முன்பு இன்று 2 வக்கீல்கள் ஆஜராகி ஸ்டாலின் மீதான வீடு மோசடி வழக்கில் போடப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளை சுட்டிக் காட்டி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் மனுவை அவசர வழக்காக எடுத்து இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நீதிபதி பழனிவேல் மறுத்து விட்டார். ஜாமீன், முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யும் அனைத்துமே அவசர வழக்குகள்தான் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.



No comments:

Post a Comment