டில்லியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்தார் சீக்கிய வாலிபர். "ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி இது தான் கதி' என, ஆவேசத்துடன் குரல் எழுப்பி, கத்தியை காட்டியும் மிரட்டினார்.
மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், டில்லி பார்லிமென்ட் வீதியில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின், அங்கு கூடியிருந்த பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, போலீசார் யாரும் இல்லை. தனியார் பாதுகாப்பு ஏஜன்சியைச் சேர்ந்த சிலர் மட்டுமே, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். பவார் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும்போது, பத்திரிகையாளர்களுக்கு இடையே அமர்ந்திருந்த ஒரு சீக்கிய இளைஞர், திடீரென எழுந்து, சரத் பவாரின் அருகே வந்தார்.
இதற்கிடையே, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சரத் பவார், அரங்கை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார். அப்போது, பவாரின் அருகே வந்த அந்த வாலிபர், அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அத்துடன், "ஊழல்வாதிகளுக்கு இனி இது தான் கதி. பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பவாரும் ஊழல் அரசியல்வாதி தான்' என, கடும் கூச்சல் எழுப்பினார்.
பவாரின் அருகில் நின்ற அதிகாரிகள், செய்வதறியாது திகைத்தனர். சில அதிகாரிகள், அந்த இளைஞரை சமாதானப்படுத்தினர். மேலும் சில அதிகாரிகள், அந்த இளைஞரை அடித்து, உதைத்து மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். அவர்களின் பிடியில் இருந்து விடுபட்ட அந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்துக் காட்டி, கடுமையான குரலில் மிரட்டல் விடுத்தார்.
இதை பொருட்படுத்தாத சரத் பவார், வேகமாக அங்கிருந்து வெளியேறி காரில் ஏறி சென்று விட்டார்.
இதன் பின், அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் ஹர்வீந்தர் சிங் என்பது தெரிந்தது. இந்த சம்பவம், டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்லிமென்டிலும் இந்த சம்பவம் நேற்று எதிரொலித்தது. அனைத்து கட்சி உறுப்பினர்களும், சரத் பவார் மீதான தாக்குதலை கடுமையாகக் கண்டித்தனர்.
பிரதமர் விசாரணை: இந்த சம்பவம் கேள்விப்பட்டதும், சரத் பவாரை போனில் தொடர்பு கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் விசாரித்தார்; தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "இது கடும் கண்டனத்துக்கு உரிய சம்பவம். இது போன்ற சம்பவங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது' என்றார்.
மகாராஷ்டிராவில் பதட்டம்: பவார் தாக்கப்பட்டதால், அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மும்பை, சோலாபூர், நாசிக் ஆகிய இடங்களில் தேசியவாத காங்., கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும், பவார் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவரே தான் இவர்
♦ கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது கோர்ட்டுக்கு வெளியில் அவரை, ஒரு இளைஞர் தாக்கினார். அதே இளைஞர் தான், சரத் பவாரையும் நேற்று தாக்கியுள்ளார்.
♦ தாக்குதல் நடத்திய இளைஞர், டில்லி ரோகினி பகுதியைச் சேர்ந்த டெம்போ டிரைவர்.
♦ சரத் பவாரை தாக்குவதற்காக, ஏற்கனவே திட்டமிட்டு தான், பத்திரிகையாளர் போர்வையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்துள்ளார்.
♦ போலீசில் பிடிபட்டதற்கு பின், அங்கிருந்த "டிவி' சேனல்களுக்கு வீராவேசமாக பேட்டி அளித்தார்.
"கிர்பான்' இருந்திருந்தால்…?
போலீசில் பிடிபட ஹர்வீந்தர் சிங் கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என, அன்னா ஹசாரே தொடர்ந்து கூறி வருகிறார். அரசியல்வாதிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். விளம்பரம் தேடுவதற்காக இந்த சம்பவத்தை நான் அரங்கேற்றவில்லை. உண்மையில், என்னிடம் இன்று, "கிர்பான்' (சீக்கியர்கள் வைத்திருக்கும் பெரிய வாள்) இருந்திருந்தால், சரத் பவாரை கொலை செய்திருப்பேன். அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள். இவ்வாறு ஹர்வீந்தர் சிங் கூறினார்.
(dm)
Filed under: Hot News
No comments:
Post a Comment