Followers

Sunday 27 November 2011

கனிமொழிக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா?

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்றும் விசாரணை தொடர்கிறது.
 
இந்த மனுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 
கனிமொழி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அவர்களுக்கு ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்திலேயே தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அதேபோல, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த மனுக்கள் முதலில் டிசம்பர் 1ம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. இருப்பினும் மேற்கண்டோரின் கோரிக்கையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இவர்களின் மனுக்கள் விசாரிக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.
 
அதன்படி வெள்ளிக்கிழமை இவர்களின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது கனிமொழியின் வக்கீலைப் பார்த்து நீதிபதி வி.கே.ஷாலி, ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்து விட்டது, எனவே மற்றவர்களையும் விட்டு விட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? உயர்நீதிமன்றம் இதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவற்றைப் பரிசீலிக்கக் கூடாது என்று கூற வருகிறீர்களா என்று கேட்டார்.
 
அதன் பின்னரும் தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த நிலையில் விசாரணையை திங்கள்கிழமை வரை நீதிபதி ஷாலி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் கனி்மொழி தரப்பு கடும் ஏமாற்றமடைந்தது.
 
முன்னதாக ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கனிமொழி உள்ளிட்டோர் இருந்தனர்.
 
கனிமொழி மீது சிபிஐ நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் கிரிமினல் சதித் திட்டம் தீட்டுவது, கிரிமினல் சதி, ஏமாற்றுதல், மோசடி, ஊழல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment