சென்னை மாநகராட்சிக்கு நேற்று நடந்த மண்லடக் குழுத் தலைவர் பதவிக்கான தேர்தலில், மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், 14ஐ அதிமுக கைப்பற்றியது. ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் அணி மாறி திமுகவுக்கு வாக்களித்ததால், பெரும்பான்மை பலம் இருந்தும் ஒரு மண்டலத்தில் மட்டும் திமுக வெற்றி பெற்றது.
ஆளுங்கட்சியாக இருக்கின்ற நிலையிலும், சற்றும் பயப்படாமல், அணி மாறி வாக்களித்த அதுவும் திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்களால் அந்த கட்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூரும் ஒன்று. இது ஏழாவது மண்டலமாகும். இங்கு திமுகவுக்கு 4 கவுன்சிலர்களும், அதிமுகவுக்கு 10 கவுன்சிலர்களும் உள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினர் உள்ளார்.
இந்த மண்டலத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஜோசப் சாமுவேல் மனு செய்தார். அதிமுக சார்பில் அலெக்சாண்டர் நிறுத்தப்பட்டார். இதையடுத்து வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.
அப்போது 15 உறுப்பினர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். பின்னர் வாக்குகளை எண்ணியபோது திமுக வேட்பாளருக்கு 8 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 7 வாக்குகளும் கிடைத்தன. இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்தது. வெறும் 4 உறுப்பினர்களே உள்ள திமுகவுக்கு 8 வாக்குகள் கிடைத்ததால், 4 அதிமுக கவுன்சிலர்கள் அணிமாறி வாக்களித்தது உறுதியானது.
10 கவுன்சிலர்களை கையில் வைத்திருந்தும் பரிதாபமாக தோற்றதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி எதிர்க்கட்சி்த் தலைவர் சுபாஷ் கூறுகையில், அதிமுக ஆட்சியின் அராஜக போக்கு அக்கட்சியினருக்கே பிடிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.
பின்னர் வெற்றி பெற்ற ஜோசப் சாமுவேலை தூக்கி்க கொண்டு திமுகவினர் வெளியே வந்தபோது அவர்களுடன் மோதுவது போல அதிமுகவினர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இரு தரப்பையும் கலைந்து போகச் செய்தனர்.
தற்போது அணி மாறி வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் குறித்து கட்சி மேலிடத்திற்கு புகார்கள் பறந்துள்ளன. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment