Followers

Friday 28 October 2011

ஜெயலலிதா முன்னிலையில் சைதை துரைசாமி பதவி ஏற்றார்

 
 
 
உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. மேயர்களே அமோக வெற்றி பெற்றுள்ளனர். சென்னையில் சைதை துரைசாமி 5 லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்று மேயர் ஆகி இருக்கிறார். கோவை-செ.ம.வேலுசாமி, திருப்பூர்- விசாலாட்சி, மதுரை- ராஜன் செல்லப்பா, சேலம்-சவுண்டப்பன், ஈரோடு- மல்லிகா பரமசிவம், திருச்சி- எஸ்.எம்.ஆர்.ஜெயா, நெல்லை- விஜிலா சத்தியானந்த், வேலூர்- கார்த்தியாயிணி, தூத்துக்குடி-சசிகலாபுஷ்பா ஆகியோரும் அ.தி.மு.க. மேயர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.
 
580 மாநகராட்சி கவுன்சிலர்கள், 89 நகராட்சி தலைவர்கள், 1,680 நகராட்சி கவுன்சிலர்கள், 285 பேரூராட்சி தலைவர்கள், 2,849 பேரூராட்சி உறுப்பினர்கள், 3,797 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 574 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 81 பேர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றனர்.
 
19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட மேயர்கள், நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் ஆகியோர் இன்று பதவி ஏற்றனர். சென்னை மாநகராட்சி புதிய மேயர் பதவி ஏற்பு விழா, ரிப்பன் மாளிகை மன்ற கூடத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடந்தது.
 
விழாவுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். புதிய மேயர் சைதை துரைசாமிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 200 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.
 
முன்னதாக மாநகராட்சிக்கு வந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடிநின்ற தொண்டர்கள் `புரட்சித் தலைவி வாழ்க' என்று கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். ஜெயலலிதா வருகையையொட்டி வழிநெடுக கொடி, தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேயர் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 2 பிரமாண்ட திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. பிளாஸ்மா டி.வி.க்களும் வைக்கப்பட்டிருந்தன.
 
வளாகத்தில் கூடி நின்றவர்கள் அங்கிருந்தபடியே பதவி ஏற்பு நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர்களை அந்தந்த அமைப்புகளின் கவுன்சிலர்கள் வருகிற 29-ந்தேதி தேர்ந்து எடுக்கிறார்கள். அன்றைய தினம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்களும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.



No comments:

Post a Comment