அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி சோனியாகாந்தி தலைவராக பொறுப்பு ஏற்றார். 2006-ம் ஆண்டு அவர் பல மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் மத்தியில் ஆட்சியைப் பிடித்தார். என்றாலும் கடந்த 7 ஆண்டுகளாக அவர் ஆட்சிப் பொறுப்பில் நேரடியாக பங்கேற்காமல் பின்னணியில் இருந்து அரசை இயக்கி வருகிறார்.
சோனியாகாந்திக்கு சமீபத்தில் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் கூட அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட இயலாது என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி பணிகள், தனது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று சோனியா கருதுகிறார். எனவே காங்கிரசை வழி நடத்தும் தலைவர் பதவியில் இருந்து விலகி விட அவர் தீர்மானித்துள்ளார்.
காங்கிரசுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில், ராகுல்காந்தியை தலைவராக்க அவர் திட்டமிட்டுள்ளார். வரும் 19-ந்தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவராக இன்னும் 4 வாரத்திலோ அல்லது 8 வாரத்திலோ ராகுல்காந்தி முறைப்படி பொறுப்பு ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. இன்னும் 2 வாரத்தில் அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் ராகுல், காங்கிரஸ் தலைவராகி விடுவார் என்று உறுதிபட சொல்கிறார்கள்.
ராகுல்காந்தி விரைவில் காங்கிரசுக்கு தலைவர் ஆவது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும், மத்திய மந்திரிகளும் இதை சூசகமாக உறுதிபடுத்தி விட்டனர். எனவே ராகுல் எப்போது தலைமை பொறுப்பை ஏற்பார் என்பதில் தான் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக, கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆதரவு அதிகரித்தப்படி உள்ளது. ராகுல்காந்திக்கு 41 வயதே ஆன போதிலும், அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் என்று காங்கிரசில் உள்ள அனுபவம் மிக்க மூத்த தலைவர்கள் பலரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவராக சோனியா பதவியேற்ற போது, அவர் இத்தாலி நாட்டுப் பெண் என்ற சல சலப்பு ஏற்பட்டது. ஆனால் ராகுல்காந்தி விஷயத்தில் அத்தகைய எந்த சலசலப்பும், சர்ச்சையும் எழவில்லை.ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பு ஏற்கும் பட்சத்தில் காங்கிரசை நேரு குடும்பத்தைச் சேர்ந்த 4-வது தலைமுறை வழி நடத்தப் போவது குறிப்பிடத்தக்கது.
நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்-சோனியாவுக்கு அடுத்தப் படியாக ராகுல் தலைமை பொறுப்புக்கு வருகிறார். நேரு, இந்திராகாந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு வந்தபோது எந்த சவால்களையும் எதிர் கொள்ளவில்லை.
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாபத்தில் ராஜீவ் தலைவர் பொறுப்பை எளிதாக ஏற்றார். அவருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மிக பலவீனமாக மாறியபோது, சோனியா தலைவர் பொறுப்பை ஏற்று கை கொடுத்தார். ஆட்சியைப் பிடிக்க அவர் பெரிய அளவில் போராட வேண்டிய நிலை ஏற்படவில்லை.
ஆனால் தற்போது அரசியல் சூழ்நிலை மத்திய அரசுக்கு எதிராக உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்களும், தொடர் விலைவாசி உயர்வும் மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன. இத்தகைய சோதனையான நேரத்தில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க உள்ளார்.
இதற்கு முன்னோட்டமாக அவர் மாநில கட்சி விவகாரங்களை கவனிக்கத் தொடங்கியுள்ளார். 5 மாநில தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு விஷயங்களிலும் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். எனவே 5 மாநில தேர்தல், ராகுலின் அரசியல் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் களமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
No comments:
Post a Comment