Followers

Monday, 31 October 2011

வைகோ இன்னமும் திருந்தவில்லை: கலைஞர்

 
 
 
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாதாடி, சட்டமன்றத்தின் சார்பிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று கேட்ட நேரத்தில் முதலில் அதை மறுத்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, இறுதியாக தமிழர்களின் இன எழுச்சியை கண்ட பிறகு பேரவையிலே அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.
 
 
இதுகுறித்து அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முன்வராத நிலையில் தற்போது தமிழக அரசின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த கோரிக்கை மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கூறியிருப்பதில் இருந்தே, "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது'' என்பது நன்கு புலப்படும் என்று நம்புகிறேன்.
 
 
தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றதைத்தான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்றையதினம் செய்தியாளர்களிடம் கூறும்போது நினைவூட்டியதோடு இன்றைய தமிழக அமைச்சரவை 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். நான் அப்போது செய்ததையும், இப்போது சொன்னதையும் அவர் நினைவூட்டிய போதிலும், என்னையும், ஜெயலலிதாவையும் "ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்'' என்று கூறி தனது ஆத்திரத்தை கக்கியிருக்கிறார். அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதை தான் இது காட்டுகின்றது. என் செய்வது? "பூனை இளைத்தால் எலி கூட "மச்சான்'' முறை கொண்டாடும்'' என்பது பழமொழி அல்லவா?.
 
 
ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சியில் விடுவிக்கப்பட்ட இருவர் கொடுத்துள்ள வாக்குமூலங்களை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
 
 
குறிப்பாக தியாகு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் காப்பாற்றப்பட்ட இடதுசாரி இயக்க தோழர்களில் ஒருவர். அவர் கூறியதை அப்படியே சொல்கிறேன், "கட்சி எடுத்த முடிவின்படி ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த முத்து தங்கப்பா என்பவர் 1970 ல் படுகொலை செய்யப்படுகிறார். இதில் நான் உட்பட தோழர்கள் ரங்கசாமி, லெனின், குருமூர்த்தி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகிறோம். எங்கள் மீதான வழக்கு செசன்ஸ் கோர்ட்டில் நடந்து 1972 ல் எங்கள் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறோம். ஆனால் உயர் நீதிமன்றமும் எங்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறது. அப்போது தமிழக முதல் அமைச்சராக கருணாநிதி இருந்தார்.
 
 
உயர் நீதிமன்றத்தின் தூக்கு தண்டனையை குறைக்குமாறு ஆளுநரிடம் நாங்கள் விண்ணப்பித்தோம். ஆளுநரும் தமிழக அரசிடம் இதுகுறித்து கருத்துரு கேட்டார். அப்போது கருணாநிதி தனது அமைச்சரவையை கூட்டி எனது கருணை மனு மீது விவாதித்து ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று முடிவு செய்து அதை ஆளுநருக்கு பரிந்துரைத்தார். அதன்படி ஆளுநர் எங்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். இதன் மூலம் தூக்குக்கயிற்றை முத்தமிட இருந்த நாங்கள் காப்பாற்றப்பட்டோம். தேசத்தின் குடியரசு தலைவருக்கும், மாநிலத்தின் ஆளுநருக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் கருணை மனுக்கள் அனுப்பலாம். குடியரசு தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் தண்டனையை குறைக்க குடியரசு தலைவரிடமோ, ஆளுநரிடமோ மாநில அரசு பரிந்துரைக்க முடியும்.
 
 
நமது அரசியல் சட்டத்தில்; அதிகாரம் உண்டு, அதிகாரம் இல்லை என்கிற சர்ச்சைகள் எப்போதும் நடப்பதுதான். அதுதான் இப்போது நடக்கிறது. அதிகாரம் இருக்கிறது என்கிறோம் நாம். ஆனால் ஜெயலலிதாவோ தனக்கு அதிகாரம் இல்லை என்கிறார். "அதிகாரமிருந்தால் காப்பாற்றுவேன்'' என இதில் அர்த்தம் தொனிப்பதால், அதிகாரம் இருக்கிற குடியரசு தலைவருக்கு மூவரையும் காப்பாற்றும்படி ஒரு வேண்டுகோளை ஜெயலலிதா விடலாமே? சட்ட அதிகாரமில்லை என்பவர் இதையாவது செய்யலாமே'' என்று தியாகு கூறி, அதனை "நக்கீரன்'' வெளியிட்டுள்ளது.
 
 
தியாகுவை போலவே பெண்ணாடம் புலவர் கலிய பெருமாளின் தூக்கு தண்டனையும் ரத்து செய்யப்பட்டது. அவர் தற்போது உயிரோடு இல்லை. 2007 ல் மறைந்து விட்டார்.
 
 
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 161 ன் கீழ் இந்த மூவரையும் காப்பாற்றிட தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன்னதையே கெட்டியாக பிடித்துக்கொண்டு ஜெயலலிதா காலங்கடத்தாமல், இதில் தனக்கிருக்கும் அதிகாரத்தை இப்போதாவது உணர்ந்து கொண்டு தூக்குமேடைக்கும் தொடரும் வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடி கொண்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் உயிர்களையும் காப்பாற்றி உலகத்தமிழர்களின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும். இதில் பிடிவாதம் காட்டுவதும், காலங்கடத்துவதும் பின்னடைவுகளையே ஏற்படுத்தி விடும்.
 
இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment