முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டியுடன் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கத் தயார் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உம்மன் சாண்டி தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுள்ளார்.
இதுகுறித்து திருச்சூரில் அவர் கூறுகையில், பிரதமர் நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், முதல்வர் சாண்டியுடன் இணைந்து அவரை சந்திக்க நான் தயார்.
முதல்வருடன், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சென்று பிரதமரைச் சந்தித்தால் சுமூக தீர்வு காண முடியும், அதற்கு இந்தப் பயணம் உதவும் என நம்புகிறேன் என்றார் அச்சுதானந்தன்.
ஜெ., கருணாநிதிக்கு நெருக்கடி தர 'டிரிக்'?
இருப்பினும் இந்த சந்திப்புத் திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. பிரச்சினையைத் தீர்ப்பதை விடவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி தரும் விஷயங்களில்தான் கேரள அரசியல்வாதிகள் தீவிரம் காட்டி வருவதாக கருதப்படுகிறது.
உம்மன் சாண்டியும், அச்சுதானந்தனும் சேர்ந்து போய் பிரதமரைச் சந்தித்தால், இதேபோன்ற கோரிக்கை தமிழகத்திலும் எழும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக தெரிகிறது. அப்படி கோரிக்கை எழுந்தால், நிச்சயம் அது ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் தர்மசங்கடத்தில் ஆழ்ததும், நிச்சயம் இருவரும் இணைந்து பிரதமரைச் சந்திக்க மாட்டார்கள். இதை வைத்து பாலிடிக்ஸ் செய்யலாம் என்பது கேரளத் தரப்பின் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேசமயம், கேரளாவில் அத்தனை கட்சிகளும் ஒருமித்த கருத்தில், ஒரே மாதிரியான முடிவில் இருப்பதை பிரதமரிடம் தெரிவித்து அவருக்கு நெருக்கடி தரும் வகையிலும் சாண்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment