பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி ஜெயிப்பது என்பது நடைமுறை தான் என்றாலும் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரால் விடப்பட்ட சவாலால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சம்பிரதாயமாக இல்லாமல் சண்டைக்களமாக மாறியது ...
கடந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சியமைத்ததிலிருந்தே கூட்டணி கட்சியான தே.மு.தி.க வுடன் புகைச்சல் ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே ... உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வெளியிட்டதிலிருந்தே புகைச்சல் நேரடி சண்டையாக மாறியது ...
உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றாலும் தே.மு.தி.க படு தோல்வியை சந்தித்ததிலிருந்து அ.தி.மு.க விற்கு மாற்று தி.மு.க தான் என்பது மேலும் ஊர்ஜிதமாகியது ... இந்த தோல்வியிலிருந்து தே.மு.தி.க பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை... அ.தி.மு.க வுடனான கூட்டணியால் தான் தன்னால் எதிர்க்கட்சி தலைவராக முடிந்தது என்பதை முற்றிலும் மறந்த விஜயகாந்த் தன்னால் தான் ஜெயலலிதாவால் அரியணை ஏற முடிந்தது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார் ...
விலைவாசி உயர்வு தொடர்பான சட்டசபை விவாதத்தின் போது போது இது வெளிப்படையாக தெரிந்தது ... உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாள் பால் , பஸ் டிக்கெட் விலைகளை ஏற்றாததற்கு தோல்வி பயம் தானே காரணம் என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி முதல்வருக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாகவே இருந்தது ...
நிச்சயம் விலையேற்றத்தையும் மீறி மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்ற முதல்வரின் நம்பிக்கை வீண்போகவில்லை , அதே சமயம் எல்லா அமைச்சர்களும் அந்த தொகுதியில் வட்டமடித்ததிலிருந்தே பண விநியோகம் நிறைய நடந்திருக்கும் என்று மற்ற கட்சிகள் முன் வைக்கும் வாதத்தையும் மறுப்பதற்கில்லை ...
விலையேற்றத்தையும் தாண்டி தினமும் ஆறு மணி நேரத்திற்கு மேல் ஏற்படும் மின் தடங்கலே தொகுதி மக்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது என்பதை உணர்ந்த ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பேசிய போது சாக்கு போக்கு எதுவும் சொல்லி பொறுப்பை தட்டி கழிக்காமல் வரும் ஜூன் மாதத்திற்குள் மின் பற்றாக்குறை தீர்த்து வைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது ...
தேர்தல் முடிந்த அடுத்த நாளே கூடங்குளம் அணுமின் நிலைய வேலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே அவர் சொன்னதை செய்வதில் முனைப்புடன் இருக்கிறார் என்பது தெள்ள தெளிவாகிறது ... அ.தி.மு.க 68000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பதும் , தே.மு.தி.க நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது ...
No comments:
Post a Comment