பலவீனம் முல்லைப் பெரியாறு அணையில் இருப்பதாக தெரியவில்லை. மாறாக கேரள அரசியல்வாதிகளிடம்தான் உள்ளதாக தெரிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை கேரள சமூக விரோதிகள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றும், அதனால் பக்தர்கள் பாதிப்புக்கும், தவிப்புக்கும் உள்ளாகி உள்ளனர். அதோடு பஸ் பயணிகளும் தாக்கப்படுகிறார்கள் என்றும் அறிய வருகிறேன்.
இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இது தமிழ்நாடு, கேரளாவுக்கும் இடையே நிலவி வரும் உறவுக்கு நல்லதல்ல.
மக்களுடைய உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசின் கடமையாகும். பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தாலும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினர் கண்டு கொள்ளாமல், அங்குள்ள சமூக விரோதிகளுக்கு அவர்கள் உடந்தையாகவும் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாகும்.இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசோ மௌனம் காக்கிறது. பிரச்சினை இந்த அளவுக்கு வளர மத்திய அரசுதான் காரணம். 2006 ஆம் ஆண்டே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய அரசு நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த கலவரம் ஏற்பட்டு இருக்காது.
இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியின் கையில் தான் உள்ளது. கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கின்றன. இருப்பினும் அப்பாவித் தமிழ் மக்கள் கேரளாவில் தாக்கப்படுவதை இந்திய, கேரள அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கேரளாவைச் சேர்ந்த சமூக விரோதிகள் மீதும், இப்பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீதும் இந்திய அரசும், கேரள அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மக்கள் தாக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பலவீனம் அணையில் இல்லை, கேரள அரசியல் வாதிகளிடம்தான் உள்ளதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment