Followers

Tuesday, 6 December 2011

சிறையில் இருப்பது பாதுகாப்பானதா? ஆ.ராசா ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்?

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 14 பேர் கைதானார்கள். இவர்களில் முதன் முதலில் கைதானவர் ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவருடன் ஸ்வான் டெலிகாம் ஷாகித் பல்வா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசாவின் தனிச்செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் கைதானார்கள். அதன்பிறகு மே 20-ந்தேதி கனிமொழி, சரத்குமார், கரீம் மொரானி மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில் கனிமொழி, சரத்குமார் உள்பட 12 பேர் அடுத்தடுத்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
 
ஆ.ராசா, சித்தார்த் பெகுரா ஆகியோர் மட்டும் தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் சித்தார்த் பெகுரா கனிமொழியுடன் சேர்த்து ஜாமீன் மனுதாக்கல் செய்து இருந்தார். அப்போது பெகுரா மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு ஆர்.கே.சந்தோலியாவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. `ஆனால் அதை டெல்லி ஐகோர்ட்டு `சுமோட்டு' (தானாக முன்வந்து) மூலம் நிறுத்தி வைத்துள்ளது.
 
என்றாலும் அவர் ஜாமீனில் வந்து வீட்டில் இருக்கிறார். அவரது ஜாமீன் உறுதி செய்யப்படுமா? என்று நாளை டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறுகிறது. கைதான 14 பேரில் ஆ.ராசா மட்டுமே இதுவரை ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் சிறையில் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதி ஜாமீன் மனுதாக்கல் செய்யாமல் இருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இதுபற்றி ராசாவின் வக்கீல் சுகில்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
 
ராசா சிறையில் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று செய்திகள் வெளியாகி இருப்பது தவறானது. அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு சரியான நேரத்துக்காக காத்து இருக்கிறார். சித்தார்த் பெகுரா மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்ய உள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைப்பதை பொறுத்து அடுத்து ராசா மனுதாக்கல் செய்வார்.
 
ராசா, பெகுரா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் வெவ்வேறானவை. என்றாலும் அவருக்கு ஜாமீன் கிடைப்பதை பொறுத்து மனு செய்யுமாறு நான் ராசாவுக்கு எந்த யோசனையும் தெரிவிக்கவில்லை. சரியான நேரத்துக்காக காத்திருக்கிறார். இவ்வாறு வக்கீல் சுகில் குமார் கூறினார்.
 
இவர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவுக்காக ஆஜராகி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஆர்.கே.சந்தோலியாவின் ஜாமீன் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். சந்தோலியா சார்பில் வக்கீல் சஞ்சீவ்சென் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
 
நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது.



No comments:

Post a Comment