பெரம்பலூர், அரியலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் பெரம்பலூரில் நடந்தது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
நமது கட்சியில் உள்ள பல அணிகளில் முதலிடத்தில் உள்ளது இளைஞரணி. கட்சியின் துணை அமைப்பாக 1980-ம் ஆண்டில் இந்த அணி தி.மு.க. தலைவர் கலைஞரால் தோற்றுவிக்கப்பட்டது. இளைஞரணியில் குளறுபடியும், பிரச்சினைகளும் எழுந்ததால் அதன் பொறுப்பாளருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட தகுதி உள்ளோரே இளைஞரணியில் இருக்கவேண்டும்.
ஆடம்பர வசதிகள் பெருகி வரும் நிலையில் ஆபத்துக்களும் அதிகமாகின்றன. ஆனால் பொருளாதாரம் வளர்ந்தால்தான் நாடு வளரும். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவே இளைஞரணியினர் தேர்வு செய்யப்படுகின்றனர். 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் கலைஞர் செய்தார்.
இனி இதுபோன்ற சாதனைகளை செய்ய இயலாது. மாணவர்களையும், இளைஞர்களையும் நமது ஆட்சியில் கவர்ந்து இழுக்கவில்லை. அதனால்தான் பல்வேறு சாதனைகளை செய்த போதும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது. தற்போது 75 சதவீத கட்சி பணிகள் முடிந்து விட்டன.
இதனால் நமது கட்சியினரிடையே எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இளைஞரணி பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 202 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 426 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். மற்ற மாவட்டங்களை விட அதிகமானோர் இங்கு விண்ணப்பித்து உள்ளனர்.
இவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 37 பேர், அரியலூர் மாவட்டத்தில் 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மீதமுள்ளோர் பதவி இல்லை என வருத்தப்பட வேண்டாம். அவர்கள் எல்லாம் கட்சியின் சொத்துக்கள். அவர்கள் அனைவருக்கும் மற்ற அமைப்புகளில் பொறுப்புகள் தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment