Followers

Tuesday, 21 February 2012

பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆறு பேர்

 
 
எங்கள் கட்சியில், பிரதமர் பதவி வேட்பாளருக்கு தகுதியான தலைவர்கள் ஐந்து அல்லது ஆறு பேர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் நரேந்திர மோடி'என, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி கூறினார்.
 
அடுத்த பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், அந்த கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, தன்னை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன் மொழிய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். இதற்காக, நாடு தழுவிய ரத யாத்திரையையும் சமீபத்தில் மேற்கொண்டார். அதேநேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை, பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, கட்சிக்குள் ஒரு சிலர் விரும்பினர். இந்த விவகாரத்தில் அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே, கருத்து வேறுபாடு எழுந்ததாக கூறப்பட்டாலும், இருவருமே, அதைப் பற்றி வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தனர்.
 
பிரசாரம் புறக்கணிப்பு:

இதற்கிடையே, உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பிரதமர் பதவி வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில், நரேந்திர மோடி தீவிரமாக பிரசாரம் செய்வார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் பிரசாரம் செய்யாமல் புறக்கணித்தார். உ.பி., மாநிலத்திலும் இதுவரை பிரசாரம் செய்யவில்லை. உ.பி., மாநில பா.ஜ.,வினர், நரேந்திர மோடியை பிரசாரத்துக்கு விரும்பி அழைத்தபோதும், அவர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
 
எதிரியே காரணம்:

நரேந்திர மோடியின் அரசியல் எதிரியாக கருதப்படும் சஞ்சய் ஜோஷியை, உ.பி., சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கான பொறுப்பாளராக, நிதின் கட்காரி நியமித்தது தான், மோடி, பிரசாரத்தை புறக்கணித்ததற்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாயின. இதனால், பா.ஜ.வுக்குள், கட்காரிக்கும், மோடிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
கட்காரி விளக்கம்:

இந்நிலையில், இதுகுறித்த கேள்விகளுக்கு நிதின் கட்காரி நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:சமூக நல்லிணக்க விழாக்களை, குஜராத் முழுவதும் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். இந்த விழாக்களில் பங்கேற்க வேண்டியிருப்பதாலும், குஜராத் மாநில அரசியலில் கவனம் செலுத்தி வருவதாலும், அவரால் உ.பி., சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய முடியவில்லை. அவர் பிரசாரத்துக்கு வராததால், நான் ஏமாற்றம் அடைந்துள்ளதாக சிலர் கேட்கின்றனர். இதற்கு எந்த பதிலும் தெரிவிக்க முடியாது.மற்ற மாநில முதல்வர்களுக்கு, ஒரு சிறப்பான முன் மாதிரியாக அவர் திகழ்கிறார். நிர்வாகத் திறமையிலும், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக செயல்படுகிறார். பிரதமர் பதவி வேட்பாளருக்கு தகுதியான, ஐந்து அல்லது ஆறு தலைவர்கள் பா.ஜ.,வில் இருக்கின்றனர். அவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர்.
 
வருணுக்கு முக்கியத்துவமா?

நரேந்திர மோடி பிரசாரத்துக்கு வராததால், பா.ஜ., எம்.பி.,யான வருணுக்கு, பிரசாரத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். பா.ஜ.,வைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைவருமே, பிரசாரத்தில் தங்களால் முடிந்த அளவுக்கு பணியாற்றி வருகின்றனர். ஒரு சிலர், மற்ற பணிகளில் தீவிரமாக இருப்பதால், பிரசாரம் செய்ய முடியவில்லை.இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
 
பிரதமர் பதவிக்கு தகுதியான வேட்பாளர்களில் நரேந்திர மோடியும் ஒருவர் என, கட்காரி கூறியிருப்பது, பா.ஜ.,வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கட்காரிக்கு மீண்டும் வாய்ப்பு

பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நிதின் கட்காரியின் பதவிக் காலம், வரும் டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது. அடுத்த மூன்றாண்டுகளுக்கும் அவரே, கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த லோக்சபா தேர்தல் வரை, நிதின் கட்காரியே தலைவராக இருக்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கருதுவதால், அவருக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கவுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.



No comments:

Post a Comment