Followers

Monday 14 November 2011

தோண்டித் துருவி வழக்கு போடுகிறார்கள்-கருணாநிதி சலிப்பு

 
 

சென்னை: தி.மு.க.வினர் மீது 3 வழக்குகள், 4 வழக்குகள் என்று போடுகிறார்கள். இருக்கும் சட்டத்தை எல்லாம் தோண்டி துருவி எடுத்து சட்டத்தின் பெயரால் வழக்கு போட்டு வருகிறார்கள். குண்டர் சட்டத்திலும் வழக்கு போடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் இந்த இயக்கம் என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

திமுகவைச் சேர்ந்தவரும், மூத்த வக்கீலும், முன்னாள் எம்.பியுமான சண்முகசுந்தரத்தின் மகன் மனுராஜுக்கு சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் திருமணம் நடந்தது. கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

வக்கீல் சண்முகசுந்தரம் முன்பு ஒரு வழக்கில் ஆதாரங்களை திரட்டியதற்காக தாக்கப்பட்டார். இதுபற்றி ஆளுநரிடம் முறையிட்டோம். சி.பி.ஐ. விசாரணை கேட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அவருக்கான மருத்துவச் செலவை மாநில அரசே கொடுக்கவேண்டும் என்றும் கூறியது.

இதை எதிர்த்து மாநில அரசு அப்பீல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. சண்முக சுந்தரத்துக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டிலும் தீர்ப்பு கிடைத்தது.

இன்று தி.மு.க.வினர் மீது 3 வழக்குகள், 4 வழக்குகள் என்று போடுகிறார்கள். இருக்கும் சட்டத்தை எல்லாம் தோண்டி துருவி எடுத்து சட்டத்தின் பெயரால் வழக்கு போட்டு வருகிறார்கள். குண்டர் சட்டத்திலும் வழக்கு போடுகிறார்கள். இந்த காலத்தில் சண்முகசுந்தரம் போன்றவர்களின் ஆற்றல் எவ்வளவு தேவை என்பதை புரிந்து இங்கு இதை சுட்டிக்காட்டுகிறேன். இவர்களுக்கெல்லாம் இந்த இயக்கம் என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காகத்தான் அரசு வழக்கறிஞர் பதவியும், தியாகத்தை மதித்து பாராளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கினோம். அன்று முதல் இன்று வரை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயக்கத்திற்கு ஏற்படும் துன்பத்தில் எல்லாம் பங்கெடுத்து, துடைக்கக்கூடிய ஆற்றலும் அக்கறையும் கொண்ட குடும்பம் சண்முகசுந்தரம்.

சட்டத்தை வைத்து நம்மை மடக்கி விடலாம் என்று நினைப்பவர்களை அடக்கி விடும் ஆற்றல் கொண்டவர். அவரது ஆற்றலை அறிவை இந்த இயக்கம் பயன்படுத்திக் கொள்கிறது. மணமகன் மனுராஜ் என் அன்பு மகள் கனிமொழியிடம் உதவியாளராக பணியாற்றி துணை நின்று வருகிறார். இன்றும் திகார் ஜெயிலில் இருந்து செய்திகளை அனுப்புபவராக இருக்கிறார். அந்த குடும்பத்தின், இயக்கம் மீதான தொடர்புகளை சுட்டிக்காட்டவே இவற்றையெல்லாம் நினைவுப்படுத்தினேன் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த சில வாரங்களாக மதுரை அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வந்த அழகிரி தனது ஓய்வை முடித்துக் கொண்ட பின்னர் கலந்து கொண்ட முதல் கட்சி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment