திமுக வட்டாரத்திலிருந்து நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ள முதல் பிரமுகர் என்ற பெருமையை பொட்டு சுரேஷ் பெற்றுள்ளார். இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக மதுரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை சந்திக்க விரும்பாத மு.க.அழகிரி சென்னை வழியாக டெல்லிக்குப் போய் விட்டார்.
மதுரை வட்டாரத்தை கடந்த திமுகஆட்சிக்காலத்தின்போது கலக்கி வந்தவர் சுரேஷ். 'பொட்டு சுரேஷ்' என்றால் மதுரை பக்கத்து ப்ரீகேஜி பாப்பாக்களுக்குக் கூடத் தெரியும். அந்த அளவுக்கு படு பாப்புலராக வலம் வந்தவர் சுரேஷ். அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த இவரைப் பார்த்து முன்னாள் திமுக அமைச்சர்களே நடுங்குவார்களாம். தலைமைச் செயலகத்திற்கு அடிக்கடி விசிட் அடித்து புரமோஷன் பட்டியல், டிரான்ஸ்பர் பட்டியல் உள்ளிட்ட பணிகளை அழகிரி சார்பில் முடித்துக் கொடுப்பவராக சக்தி வாய்ந்தவராக திகழ்ந்தவர் பொட்டு சுரேஷ்.
அப்படிப்பட்ட பொட்டு சுரேஷை அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் பிடித்து உள்ளே போட்டனர். குண்டர் சட்டமும் பின்னாலேயே பாய்ந்து வந்தது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொட்டு சுரேஷ், தன்னை குண்டாஸில் கைது செய்தது செல்லாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம்,கைது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் விடுதலையாகும் சூழல் எழுந்தது. இருப்பினும் திடீரென அவர் மீது இன்னொரு வழக்கை ஏவி விட்டனர். அதில் ஜாமீன் கோரி மனு செய்தார் பொட்டு. அதில் ஜாமீன் கிடைத்ததால் இன்று அவர் விடுதலையாகி வெளியே வந்தார்.
பாளையங்கோட்டை சிறைக்கு வந்த பொட்டுவின் ஆதரவாளர்கள், சுரேஷை ஆரவாரத்தோடு மதுரைக்கு அழைத்து வந்தனர்.
மதுரைக்கு வந்ததும் முதலில் அழகிரியைத்தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார் சுரேஷ். ஆனால் இப்போது அவரை சந்திக்க விரும்பவில்லையாம் அழகிரி. இதனால் அவர் நேற்று இரவோடு இரவாக மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். இன்று காலை டெல்லிக்குப் போயே போய் விட்டார்.
இதனால் பொட்டு சுரேஷ் தரப்பு ஏமாற்றமடைந்துள்ளது. இருப்பினும் கண்டிப்பாக அண்ணனைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment